கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கையாளும் கூட்டு முயற்சி.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கடந்த மார்ச் 2020, 15 ஆம் தேதியன்று, பிரதமர் திரு நரேந்திர மோதி, காணொளிக்காட்சி மூலம், தெற்காசிய, பிராந்தியக் கூட்டுறவு அமைப்பான சார்க்கின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடினார். அவரது இந்த  முன்னெடுப்பின் நோக்கம், சார்க் நாடுகளுடன் இணைந்து, அபாயகரமான கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள, வலுவான கூட்டுமுயற்சியை உருவாக்குவதேயாகும். இதுவரை இந்தக் கொள்ளை நோய், உலகம் முழுவதிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைத் தாக்கியுள்ளது. அதில் சுமார் 10,000 பேர் மடிந்துள்ளனர்.

பிரதமரின் இந்த முன்னெடுப்பை அனைத்து உறுப்புநாடுகளும் வரவேற்றுள்ளன. இலங்கை, மாலத் தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிபர்களும், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டுப் பிரதமர்களும் இந்த காணொளிக்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாகிஸ்தான் தரப்பில், பிரதமரின் சுகாதாரத் துறை சிறப்பு உதவியாளர் ஸஃபர் மிர்ஸா அவர்கள் கலந்து கொண்டார். இந்தத் தொற்றுநோயை வலுவுடன் எதிர்கொள்ள, தங்கள் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இது மனிதத்துவத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி என்பதை உணர்ந்த அனைத்து சார்க் நாட்டுத் தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் விடுத்த, இந்த கூட்டு முயற்சிக்கான அறைகூவலுக்கு, உடனடியாக செவிசாய்த்துள்ளனர். எனினும், வழக்கம்போல், இந்த மேடையிலும் காஷ்மீர் விவகாரத்தை மறைமுகமாக எழுப்ப பாகிஸ்தான் தவறவில்லை.

உறுப்புநாடுகளுக்கு, எந்த நிலையிலான பிரதிநிதிகளை இக்காணொளிக்காட்சியில் பங்குகொள்ள அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமைகள் உண்டு. எனினும், பாகிஸ்தான் பிரதமர் தாமே நேரடியாகப் பங்கு கொண்டிருந்தால், இந்தத் தொற்று நோயை எதிர்கொள்ள அந்நாடு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்பட்டிருக்கும் என்று, அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையான டான் தனது தலையங்கத்தில் கூறியுள்ளது. அனைவருக்கும் பொதுவான எதிரியான இந்த வைரஸ் நோய், அனைத்து நாடுகளும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி, அதனை இணைந்து தீவிரத்துடன் எதிர்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்று பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை, இந்தத் தொற்றுநோய் அந்நாட்டிற்கு அளிக்கும் அச்சுறுத்தலின் தீவிரத்தை பாகிஸ்தான் அரசு உணரத் தவறிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளன.

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தை சார்க் பிராந்தியம் தன்னகத்தே கொண்டுள்ளது. தனிமனிதரிடமிருந்து சமூகத்திற்குப் பரவும் நெருக்கடிமிக்க மூன்றாவது நிலையில், இந்த வைரஸ் தொற்று, தற்போது சார்க் நாடுகளின் கதவுகளைத் தட்டுகின்றன. எனினும், இதனை எதிர்கொள்ளத் தக்க திறனையும், மனிதவளத்தையும், உள்கட்டமைப்பையும், மருத்துவத் துறையின் ஆராய்ச்சி வசதிகளையும் முன்னேற்பாடுகளையும் இந்தியா பெற்றுள்ளதுபோல், பிற சார்க் உறுப்புநாடுகள் கொண்டிருக்கவில்லை. இந்த நோய் பரவுவதைத் தடுக்கத் தேவையான மனிதவளங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற, அவசரகால நிதியை உருவாக்குவதற்கு பிரதமர் மோதி அவர்கள் அளித்த ஆலோசனையை அனைத்து சார்க் நாட்டுத் தலைவர்களும் பெரிதும் வரவேற்றனர். இதற்கு முன்னோடியாக, தனது தரப்பிலிருந்து, 1 கோடி டாலர் நிதியளிக்க இந்தியா முன்வந்துள்ளது. சார்க் நாடுகள் இந்த நிதியுதவியை இந்தியாவிடம் நாடியுள்ளன. கடந்த ஐந்து நாட்களில், இந்தியா உறுதியளித்த 1 கோடி டாலரில் ஒரு பகுதியாக, 10 லட்சம் டாலர் மதிப்பில், பரிசோதனைக் கருவிகள், சுத்திகரிப்புத் திரவங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அளித்துள்ளது.

சார்க் பிராந்தியத்தில், மற்ற நாடுகளைவிட, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தான் அதிக அளவில் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை, பாகிஸ்தானில் 450 பேர் பாதிக்கப்பட்டுளனர் என்றும், இருவர் இறந்துள்ளனர் என்றும் டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சிந்து மாகாணத்தில் அதிகப்படியாக, 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் விரைவாகப் பரவி வரும் கோவிட் 19 தொற்றுநோய், உலகநாடுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள கூட்டு முயற்சியை மேற்கொள்ள ஜி-7 நாடுகளும் திட்டமிட்டுள்ளன.