கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியா உறுதி.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியாவின் 130 கோடி மக்கள், கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராட தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த ஞாயிறன்று, நாடு முழுவதும் மக்கள் தாங்களாகவே தன்னிச்சையாக முன்வந்து, ஜனதா கர்ஃபியூ என்ற ஊரடங்கில் பங்கு பெற்றனர். இந்த ஊரடங்கின் ஓர் அம்சமாக, மாலை 5 மணியளவில், மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து, கை தட்டியும், மணி அடித்தும், பாத்திர பண்டங்களை அடித்தும் ஒலியெழுப்பி, கொரோனா வைரஸ் நோயை எதிர்கொண்டு, முன்னிலையில் நின்று, இரவு பகல் பாராது உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ் துறையினர், இதர சுகாதார சேவைப் பிரிவினர் ஆகியோருக்குத் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், கலைத்துறை சார்ந்த பிரபலங்கள் ஆகியோரும் அடங்குவர்.

கடந்த வியாழனன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், மக்கள் தாங்களாகவே முன் வந்து, மார்ச் 22 ஆம் தேதி, ஞாயிறன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, தங்கள் இல்லங்களை விட்டு வெளி வராமல் ஊரடங்கில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொண்டார். அவசரத் தேவை தவிர, மக்கள் வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்த உன்னத நிகழ்வில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகள் திறக்கப்பட்டிருந்தன. பொது சுகாதாரம் கருதி, மார்ச் 31 ஆம் தேதி வரை, பல மாநிலங்கள் முழு அளவிலான ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய், சமூக அளவில் பரவக்கூடிய மூன்றாம் நிலையை எய்துவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது.

மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வலியுறுத்தினார். மக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். சமூக அளவில் மக்கள் அருகருகே இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, தொற்று நோய் பரவுவதைத் தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். உலகில் எந்த நாடும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்று அவர் கூறினார். இந்தியத் தொழில் துறையினர், சிறு தொழில் புரிவோர் ஆகியோரின் தேவைகளைக் கவனிக்க, நிதியமைச்சர் தலைமையிலான உயர்மட்டப் பொருளாதாரப் பணிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைப் பிரிவினரைத் தவிர, பிறருக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மளிகைக் கடை, மருந்துக் கடை, பெட்ரோல் பம்புகள், வங்கிகள், மருத்துவ மனைகள், போலீஸ் தீயணைப்பு போன்ற அவசர சேவைகள் வழக்கம் போல் இயங்கும். இந்த ஊரடங்கில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு, பிரதமர் தமது டுவிட்டர் பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் தனிப்பட்ட சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் இது மிகவும் அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியுள்ளது. சிகிச்சைக்குப் பின் உடல் தேறிய 25 நபர்கள் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ மனைகளில் தனிப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டது.

வேலை நிமித்தமான, ராஜீயப் பணிகளுக்கான விசா தவிர, இந்தியாவுக்குள் நுழைவதற்கான மற்ற விசா, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகள் மார்ச் 29 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் இந்நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, பெருமளவில் பொருளாதார பாதிப்புக்களை சந்திக்கும் துறைகளுக்கு உதவ, பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைப்பில், வட்டி விகிதங்கள் குறைப்பு, அதிகம் பாதிப்படையக் கூடிய துறைகளுக்கு நிதியை ஒழுங்கு படுத்துதல், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கடனுக்கு அரசு தரப்பில் உத்தரவாதம், வரி ஒத்திவைப்பு, போதிய டிமண்ட் இல்லாத காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளிகளுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு போன்றவை இதில் அடங்கும்.

சமூக அளவில் விலகி நிற்கும் நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளதால், இந்தியாவில் பல சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து மீள, நிதியுதவி போன்ற சலுகைகளை அறிவிக்க தொழில் மற்றும் வர்த்தகக்  கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. கோவிட் 19 வைரஸ் நோய் அச்சுறுத்தல் முற்றிலும் முடிவுக்கு வந்த பின், இந்தியாவில் தொழில்துறை தனது வழக்கமான நிலையை அடைய, குறைந்தது ஆறு மாதம்  தேவைப்படும் என்று இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளார்.