கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இந்தியா.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

 ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கோவிட் 19 தொற்றுநோய் குறித்து மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், அதே சமயம் பீதியடையாமல் அமைதியாய் இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாகத் தாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாட்டின் 130 கோடி மக்களும், கடந்த மார்ச் 22 ஆம் தேதியன்று, ஜனதா கர்ஃபியூ என்ற ஊரடங்கில் பங்கு கொண்டதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மருத்துவர், செவிலியர் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ சோதனை நிபுணர்கள் ஆகியோர் ஆற்றிவரும் சீரிய சேவையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர், இந்த வைரஸ் தாக்கப்பட்ட நபர் ஒருவர், ஒருவாரத்தில் நூற்றுக் கணக்கான நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றைப் பரப்பி விடுவர் என்றும், அதன் பின்னர், இந்த நூற்றுக்கணக்கான நபர்கள், அடுத்த 67 நாட்களில், ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸைப் பரப்பி விடுவர் என்றும் குறிப்பிட்டார். ஆனால், மேலும் 11 நாட்களில் மட்டுமே, 2 லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவி விடும் என்றும், அதற்கு அடுத்த நான்கே நாட்களில் இந்த வைரஸ் 3 லட்சம் பேருக்குப் பரவி விடும் என்றும் அவர் கூறினார். அத்தகைய தீவிரக் கொள்ளை நோய்க் கிருமியாக இந்த வைரஸ் விளங்குகிறது.

மிகவும் வளர்ச்சியடைந்த, சிறந்த மருத்துவ வசதி கொண்டவையாகக் கருதப்படும் நாடுகளும், இந்த பயங்கர வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க இயலாத நிலையில் உள்ளன.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட, 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் தமது உரையில் அறிவித்தார். இந்நிதி, பரிசோதனை மையங்கள் அமைக்கவும், தீவிர சிகிச்சை வசதிகளைப் பெருக்கவும், வெண்டிலேட்டர் போன்ற உயிர்க்காப்பு உபகரணங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்குமாறு, பிரதமர் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டார். தற்சமயம், தமது அரசின் தலையாய முன்னுரிமை, மக்களின் சுகாதாரமே என்று பிரதமர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, சுத்தம், சுகாதாரத்தைப் பேணுவதும், மக்கள் ஒருவரை விட்டு ஒருவர் விலகி நிற்பதும், இல்லங்களிலேயே தனித்திருப்பதும் மட்டுமே வழி என்று பிரதமர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

இந்நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் வலிமையான எதிர் நடவடிக்கையாக, நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி, 2020 நள்ளிரவிலிருந்து, 21 நாட்களுக்கு முழு அளவிலான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், சிற்றூர்களுக்கும், கிராமங்களுக்கும், தெருக்களுக்கும், சந்து பொந்துகளுக்கும், ஏப்ரல் 14 ஆம் தேதி 2020 வரை இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் மூன்று வார காலகட்டத்தில், மிகவும் கண்டிப்புடன், அனைத்து மக்களும் தங்கள் இல்லங்களிலேயே இருந்து கொண்டு, சமூக அளவில் பிறரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இது ஒவ்வொரு இந்தியனின் பாதுகாப்புக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்த ஊரடங்கு விதிமுறைகளுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட்டு, மக்கள் தங்களையும், தங்கள் குடும்பங்களையும், உற்றார் உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஊரடங்கின்போது, பால், மளிகை, மருந்துகள் போன்ற மக்களின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகள் வழக்கம் போல் தங்கு தடையின்றி பூர்த்தி செய்யப்படும். கடைகளில் கூட்டமிடாமலும், பீதியில் பொருட்களை வாங்கிக் குவிக்காமலும் இருக்க வேண்டும் என்று மக்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். தாமாகவே சுயமாகத் தீர்மானித்து, மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, இந்த 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு மிகவும் சிறந்த வழியாகும். ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஒன்றுபோல் செயல்பட்டு, இந்த கோவிட் 19 நோய் பரவுவதை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்துவர் என்பது திண்ணம். இந்த ஊரடங்கை அறிவிக்கப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்த வைரஸ் நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த அனைத்து மக்களும் உறுதி பூண்டுள்ளனர்.