கோவிட்-19 கொள்ளை நோய் – இந்தியாவின் பொருளாதார பதில் நடவடிக்கைகள்.

(பேராசிரியர் டாக்டர் லேகா எஸ் சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியாவில் கோவிட்-19 கொள்ளை நோயின் தாக்கத்தை எதிர்கொள்ள,  பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அறிவித்தார். இது பல பகுதிகளாக, விரிவாக அறிவிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள் அறிவித்த முதல் பகுதியில்,  நெருக்கடியில் வீழ்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பணப்புழக்கத்தை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

அரிதான கொரோனா வைரஸ் கொள்ளை நோயின் தாக்கத்தால், இந்தியா முழுவதும் ஊரடங்கில் அமிழ்ந்தது. தொற்று பரவுவதைத் தவிர்த்து, உயிர்களைக் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஊரடங்கு, பொருளாதார ரீதியாக, பெரும் தடையாக விளங்கியது. வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்குமான போராட்டத்தில், உயிர்களைக் காப்பாற்ற அரசு முன்னுரிமை அளித்தது.

துவக்கத்தில் நிதியமைச்சரும் ரிசர்வ் வங்கியும் வழங்கிய கொள்கைத் தொகுப்பில், மெலிந்த பிரிவினருக்கு அடிப்படை வருமானத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அமைப்புக்கு பணப்புழக்கமும் வழங்குவதற்கு இது வகை செய்தது. இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் அதிகரித்து வரும் நெருக்கடியை சமாளிக்க, இந்தக் கொள்கைத் தொகுப்பை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரோனா கொள்ளை நோய் காரணமாக, பொருளாதாரம் 3 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று, சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. பெருமளவிலான பொது சுகாதார நெருக்கடியும், பெரும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றுசேர, பெரும் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது.
இத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்க, ‘ஆத்ம நிர்பர்’ என்ற தன்னிறைவுத் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. இதில், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் மற்றும் சட்டங்கள் அடிப்படைத் தூண்களாக விளங்கும். பொருளாதார ஊக்கத் தொகுப்பின் முதல் பகுதியில், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிவாரணத் திட்டத்தை அறிவித்தார். அவற்றில், நெருக்கடியில் உள்ள தொழில்களுக்கு உதவ, 20,000 கோடி ரூபாய் அளவிலான கடன் ஆதரவுத் திட்டத்தையும், 50,000 கோடி ரூபாய் வரையிலான பணப்புழக்கத் திட்டத்தையும் நிதியமைச்சர் அறிவித்தார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, தொழிலாளர் மற்றும் தொழிலகங்கள் ஆகிய இருதரப்பின் சார்பிலும், சம்பளத்தில் தலா 12 சதவிகிதப் பங்களிப்பை மத்திய அரசு வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீடிக்கும். இதனால், 2,500 கோடி ரூபாய் அளவில் நிவாரணம் கிடைக்கும்.. தவிர, 72.22 லட்சம் தொழிலாளர்களும் பயனடைவர்.

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பணப்புழக்கம் வழங்க நிவாரணத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. கொரோனா கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பே, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்குப் போதுமான வளர்ச்சி இருக்கவில்லை. இந்நிலையில், அவற்றுக்கு உதவ, முதல் பகுதியில், 30,000 கோடி ரூபாய் சிறப்பு பணப்புழக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

உபரியாக மின்சக்தி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஊரகப் பகுதிகளில் 100 சதவிகித மின்மயமாக்கல் சவாலாக உள்ளது. மின்சக்தித்துறை அமைச்சகம், மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் ஆகிய மும்முனை ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்ட உதய் திட்டத்தின் கீழ், மின்விநியோக நிறுவனங்கள் ஓரளவே பயன்பெற முடிந்தது. இத்திட்டம், மாநில அரசுகளின் நிதி நிலைமையிலும் தாக்கம் ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று, மின்விநியோக நிறுவனங்களுக்கு, 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான பனப்புழக்க வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அவை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த இத்திட்டம் கை கொடுக்கும்.

நிதியமைச்சர் அறிவித்துள்ள முதல் பகுதித் திட்டங்களில், ரியல் எஸ்டேட் துறை மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு, பதிவுத் தேதி மற்றும் முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கான தேதி ஆகியவை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் நிலையைப் பொறுத்து, இது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

மூல வரி விதிப்பு மற்றும் மூல வரி வசூல் ஆகியவை, சம்பளம் அல்லாத பிரிவினருக்குக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020-21 நிதியாண்டில் மீதமுள்ள காலத்திற்கு, மூல வரி வசூலில் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பொருளாதார ஊக்கத் தொகுப்பின் இரண்டாவது பகுதியில், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படும். தெருவோர வியாபாரிகளுக்கு உதவ, 5000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவியை அரசு வழங்குகிறது. அவசரகால நடப்புக் கணக்குத் தேவைக்கு, விவசாயிகளுக்கு 30,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அறிவித்த பொருளாதார ஊக்கத் தொகுப்பு, இந்தியாவின்  தன்னிறைவை அடிப்படையாகக் கொண்டது. இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகித அளவிற்கு அறிவிக்கப்பட்ட இந்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் தொகுப்பு, இந்தியப் பொருளதார வளர்ச்சியைக் கணிசமாக ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.