இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.

(ஐஐஎஃப்டியின் முன்னாள் முதல்வர் பட்ட சார்யா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

கடந்த சில நாட்களாக, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையில் திடீரென வெடித்த, தேவையற்ற  வன்முறைகள் குறித்து  ஊடகங்கள் மும்முரமாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. உண்மையில், பல நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். அவற்றில் பெரும்பாலானவை இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் அமைதியான தீர்வுக்குப் பல வழிமுறைகளை அமைத்துள்ளன. இதற்கு சீனாவும் இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதனால்தான், சீனத் துருப்புக்களின் தற்போதைய தூண்டப்படாத வன்முறை, அதுவும் முழு உலகமும் சீனாவில் தோன்றிய ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, ​​இவ்வளவு பொது ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவும்,இந்தியாவும் வளரும் பொருளாதாரங்கள் என்றாலும், வாங்கும் திறனைப் பொறுத்தவரை, அவை உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதார நாடுகளாகும். இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது உலக வர்த்தகத்தில் திறம்பட பங்கேற்பதேயாகும். இது இந்தியாவை விட சீனாவுக்கு அதிகம் பொருந்தும்.

வழக்கமான மார்க்சிய சித்தாந்தம், சர்வதேச வர்த்தகத்தை முதலாளித்துவ சுரண்டலின் ஒரு கருவியாகக் கருதுகிறது. லெனின் கையெழுத்திட்ட முதல் ஆணை, ரஷ்யாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை தேசியமயமாக்குவதாகும். வெளி உலகத்துடனான ஈடுபாடு, ரஷ்யாவில் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1970 களின் முற்பகுதியிலிருந்து, அமல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகுதான், சீனா உலக வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டது.

மிகப்பெரிய அமெரிக்க சந்தையைப் பயன்படுத்தி ஜப்பான் தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போலவே, சீனா 2001 இல் உலக வர்த்தக அமைப்புக்குள் நுழைந்ததிலிருந்து, அதனை மிகவும் திறம்படப் பயன்படுத்தியது. இது சீனாவை அதிக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றியது. ஏற்றுமதி உற்பத்திக்குத் தேவையான தொழில்துறை மூலப்பொருட்களைத் தவிர்த்து, பிற உள்நாட்டு சந்தைகளை சீனா மூடி வைத்திருந்தது.

இத்தகைய கொள்கை, சீனாவுக்கு இரண்டாவது பெரும் பொருளாதார  சக்தியாக உருவாவதற்கு நிச்சயமாக உதவியது. ஆனால் சீனா, தனது வர்த்தகப் பங்காளிகளிடையே இறுக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு வர்த்தக உபரி, சீனாவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து மிக அதிகமாக இருப்பதால், அமெரிக்க அதிபர் டிரம்ப், அதனை சரி செய்ய, அமெரிக்காவுக்கு சீனாவில் அதிக சந்தை அணுகலைக் கோருகிறார். சீனா ஒத்துழைக்காததால் டிரம்ப் நிர்வாகம், சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதே நேரத்தில் சீனாவும் பதிலடி கொடுத்தது. இதன் விளைவாக, கடந்த அரை நூற்றாண்டில் மிக மோசமான வர்த்தக யுத்தம் இரு நாடுகளுக்கு ம் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவுடனான வர்த்தகத்தில் இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொள்கிறது. சீனாவுடனான இந்தியாவின்  வர்த்தகப் பற்றாக்குறை, இருதரப்பு வர்த்தகத்தை இந்தியாவுக்குத் தொடர்ந்து பலனளிக்கும் வகையில் நிலை நிறுத்தவில்லை. ஆனால் அமெரிக்காவைப் போன்று, சீனாவுக்கு எதிராக எந்த அதிரடி  நடவடிக்கையையும் இந்தியா எடுக்கவில்லை. வர்த்தக விஷயங்களில் இருதரப்புக் கலந்துரையாடலில் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்புவதோடு நிறுத்தி வந்துள்ளது.

இரு தரப்பினரும் திறந்த மனதுடன் அணுகினால், அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதங்கள் மூலம் தீர்க்க முடியும் என்ற அடிப்படைக் கொள்கையில் இந்தியா உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.

சீனா தனது பொருளாதாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. கொரோனா தொற்றுநோய், நிச்சயமாக உலகப் பொருளாதாரத்தில் பெரும் சுருக்கத்தை ஏற்படுத்தும். சீனா போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு இது பேரிடியாக விளங்கும். சீனாவில் இதுவரை கண்டிராத வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும், லட்சக் கணக்கான சீனர்களை  வறுமையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கும் உதவிகரமாக விளங்கிய திறந்த உலகளாவிய சந்தை, இனி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, சீனாவுக்குக் கிடைக்காது. இந்த அப்பட்டமான யதார்த்தத்தை சீனா உணர வேண்டும்.

பலவகையான சீனப் பொருட்களுக்குப் பரந்த, விரிவான சந்தையாக இந்தியா விளங்குகிறது. பல தயாரிப்பு வகைகளின் இந்தியச் சந்தையில் சீன நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. தவிர, சீனா இந்தியாவில்  பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா,  5000 கோடி டாலர் அளவில் வர்த்தக உபரி கொண்டுள்ளது. எல்லைப் பிரச்சினைகளில், அரசியல் வேறுபாடுகள் காரணமாக வர்த்தக ஈடுபாட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், ஏற்கனவே பலவீனமான சீனப் பொருளாதாரத்திற்கு இந்தியாவை விட மிகவும் அதிகத் தீங்கு விளையும். இது சீனாவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை நேரடியாக பாதிக்கும், இதன் விளைவாக அங்கு பெருமளவில் வேலையின்மை ஏற்படும். சீனா  வறுமை ஒழிப்பிற்கு இதுகாறும் மேற்கொண்ட செயல்பாடுகள் பயனற்றுப் போகும்.

சீனா இந்தியாவுக்கு வழங்கும் பொருட்களை
இந்தியாவே  உள்நாட்டில் தயாரிக்க இயலும். அல்லது அவற்றை்ப் பிற இடங்களிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளவும் முடியும்.  குறைந்த செலவுகள் காரணமாக சீனா சந்தைக்குள்  நுழைத்து ஒருங்கிணைக்க முடிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் புதுமைப் படைப்புத் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன. மேலும் உலகளாவிய போட்டியில் இந்தியாவை வலுவாக வெளிப்படுத்தவும் முடியும்.

சீனப் பொருட்களைப் புறக்கணிக்க பொதுமக்களிடையே பெரும் இயக்கம் உருவெடுத்துள்ளது.இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், இது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

_______________