நேபாளம் – அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

நேபாளம் – அண்மைக்கால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்.
(நேபாளத்துக்கான  முன்னாள் இந்தியத் தூதர் மஞ்சீவ் சிங் புரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள், மக்களின் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னிப் பிணைந்ததாகும். இத்தகைய உறவுகள், உண்மையில், உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், சில சிக்கல்களும், இந்திய விரோத தேசியவாதத்தை செயல்படுத்துவதற்கான  விருப்பமும் நேபாள அரசியலில் பரவியுள்ளன.      புவியியல் மற்றும் வரலாற்றால் பின்னிப் பிணைந்த  இந்தியா-நேபாள உறவுகளை, கடந்த சில வாரங்களில், இத்தகைய அரசியல் நடவடிக்கைகள், காரணமின்றி ஒரு பெரிய சவாலாக்கியுள்ளன.
கடந்த வாரம் நேபாளம் தனது அரசியலமைப்பைத் திருத்தி, இந்தியாவின்  இறையாண்மைப் பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை அதன் வரைபடத்தில் இணைத்து, புதுப்பித்ததன் மூலம், இந்த சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இந்தியாவின் சீன எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரைபடத்தின் ஒரு வெளிப்பாடு நேபாளத்தின் கோட் ஆப் ஆர்ம்ஸ் என்ற தேசிய சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது.  ஆனால், ஒருதலைப்பட்சமாக, நேபாளம் இந்த இந்தியப் பகுதிகளைத் தனது புதிய வரைபடத்தில், சிறிதும் ஏற்றுக்கொள்ளத் தகாத வகையில் இணைத்து,  ஒரு சிக்கலை கட்டவிழ்த்து விட்டது. இது, எத்தகைய சூழலிலும்  தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.

சிக்கலை மேலும் தீவிரமாக்கக் கூடிய வகையில், நேபாளம் அதன் குடியுரிமைச் சட்டங்களைத் திருத்துகிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது.  நேபாளத்தில் தற்போதைய சட்டத்தின் கீழ், நேபாளக் குடிமக்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பெண்கள், திருமணமான உடனேயே நேபாளக் குடியுரிமையைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம். இந்தியாவின் எல்லை தாண்டிய நேபாளக் குடும்ப உறவுகள், திருமணங்கள் மூலம்,”ரோட்டி-பேட்டி” எனப் போற்றப்படும் இந்தியா-நேபாள மக்களின் உறவுகளுக்கு  முதுகெலும்பாகத் திகழ்கின்றன.

ஆனால், திருத்தப்பட்ட சட்டத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே,  வெளிநாட்டுப் பெண் நேபாளக் குடியுரிமையைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்க முடியும். பிரதம மந்திரி கே பி ஷர்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வசதியான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், திருத்தப்பட்ட சட்டம் பாராளுமன்றத்தில் எளிதில் நிறைவேற  வாய்ப்புள்ளது.
எம்படிப் பார்த்தாலும், இந்த ஏழாண்டுக் கால இடைவெளி, இந்தியாவிலும் நேபாளத்திலும் உள்ள மக்களிடையே, குடும்ப மட்டத்தில் உள்ள
வலுவான இணைப்புகளை பலவீனப்படுத்தும். நேபாளத்தின் தெற்குப் பகுதியான மாதேஷில் உள்ள மக்கள் இந்த சட்ட திருத்தத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதற்கு, பலத்த எதிர்ப்பு உள்ளது. தவிர, இந்தச் சட்டம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நேபாளத்தின் புதிய (2015) அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது.

உறவுகளில்,  குறிப்பாக அண்டை நாடுகளுக்கிடையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, எல்லைகள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், நேபாளத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  பாரம்பரியமாக இந்தியாவை ‘மித்ர ராஷ்டிரா’ என்று குறிப்பிட்டு வந்த நேபாளத்தின் இந்த செயல்கள் நிச்சயமாக, நட்பைப் பிரதிபலிப்பதாக இல்லை.

.கோவிட் 19 நோயிலிருந்து வெளிவரும் மிக முக்கியமான சவாலை நேபாளம் எதிர்கொள்கிறது. இது பெரும் மருத்துவச் சுமையை உள்ளடக்கியது.  அதன் எதிர்மறையான பொருளாதார விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும். காரணம், வெளிநாட்டிலிருந்து நேபாளி  மக்கள் பணம் அனுப்பும் வாய்ப்பு குறையும்.நேபாளத் தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகிறார்கள். சுற்றுலாத் துறையும் மீண்டுவர பல ஆண்டுகள் ஆகும்.

நல்லாட்சியைக் கோரியும், கோவிட் 19 செலவினங்களுக்கு பொறுப்பு ஏற்கக் கோரியும், அரசுக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேபாளப் பிரதமரின் நிலை ஆட்டம் கண்டுள்ளது.  இந்த நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான தேசியவாதத்தை நாடுவது நேபாளத்திற்குப் பயனுள்ளதாக இருக்காது. உண்மையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவு, நேபாளக் குடிமக்கள் தடையின்றி இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. மேலும், இது நேபாளத்திற்குப் புவியியல் ரீதியாக, தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இது இடையூறுகளைத் தாங்கும் அரணாகவும் செயல்படுகிறது.

கோவிட் 19 காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பொதுவாக பாதிக்கப்படாமல் இருந்தது. இந்தியா, நேபாளத்திற்கு முக்கியமான மருந்துகள் மற்றும் சோதனை உபகரணங்களை வழங்கியது. மேலும், பசுபதிநாத் கோயில் வளாகத்தில் கூடுதல் துப்புரவு வசதிகளை நிர்மாணிப்பதற்கான நிதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. மேலும், நேபாளத்தில் நீர்மின் திட்டங்களைக் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக, இந்தியாவின் தேசிய ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி) மற்றும் நேபாளத்தின் ஹைட்ரோபவர் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் அனைத்து முயற்சிகளும் மக்களுக்குப் பெருமளவில் பயனளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு நீண்டகால கலாச்சார உறவுகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.  மக்கள் மட்டத்தில் இந்தியா-நேபாள உறவுகள் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானவை, எனவே, நேபாளத்தில் அரசியல் விளையாட்டுக்களைத் தவிர்த்து, இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளை முன்னோக்கி  எடுத்துச் செல்ல  நேபாளம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
.

 

_____________