எல்லையில் தூண்டி விடும் சீனாவுக்கு எதிராக உறுதியுடன் நிற்கும் இந்தியா.

(சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

கடந்த தசாப்தங்களாக, இந்தியா-சீனா எல்லையில், சீனா தனது இராணுவ உள்கட்டமைப்பைப் பலப்படுத்தி வருகிறது. மறுபுறம், இந்தியாவின் எல்லையில் இந்தியா தனது அடிப்படை வசதிகளை மிகவும் தாமதமாக மேம்படுத்தத் தொடங்கியது.  2014 ஆம் ஆண்டுக்குப்  பிறகு தான் இதில் வேகம் பிடித்தது.

அதன் எல்லைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் தரப்பு இதுவரை 1000 கி.மீ சாலை கட்டுமானப் பணிகளை முடித்துள்ளது. இந்தியா-சீனா எல்லைத் திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்திய உள்கட்டமைப்புக் கட்டுமானம் சீனாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா தனது அடிப்படை வசதிகளை எல்லையில் நிர்மாணித்து வருவதால், எல்லையில் அதன் ரோந்துத் திறன் நிறைய அதிகரித்துள்ளது. இது சீனாவை எரிச்சலடையச் செய்துள்ளது.

இதன் விளைவாக, எல்லையில் பதட்டம் ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இந்திய, சீனத் துருப்புக்களுக்கு இடையே லடாக்கின் பாங்கோங் த்சோவிலும் வடக்கு சிக்கிமில் நகு லாவிலும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் வீரர்கள் காயமடைந்தனர்.

சீனா, எல்லையில், கால்வான் பள்ளத்தாக்கின் அருகிலும், துருப்புக்களின் பலத்தை அதிகரிக்கத் தொடங்கியது. டெம்சோக் மற்றும் தௌலத் பேக் ஓல்டி போன்ற இடங்களில் சீனா ஆக்ரோஷத்தைக் காட்டியது. இதற்குப் பதிலடியாக, இந்தியத் துருப்புக்கள் குவிக்கப்பட்டன. கால்வான் பள்ளத்தாக்கில்  இந்தியாவின் சாலைக் கட்டுமானத்தை சீனர்கள் ஆட்சேபித்தனர். இந்தியாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சீன கண்காணிப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டது, சமீபத்திய மோதலுக்கு வித்திட்டது.

ஜூன் 6, 2020 அன்று, இந்தியத் தரப்பில் லே 14  கோர் பிரிவின்  தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவப் பிராந்தியத்தின் தளபதி,  மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோருக்கு இடையே கோர் கமாண்டர்-நிலை பேச்சுவார்த்தை நடந்தது. அதில், துருப்புக்களை வாபஸ் வாங்குவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைக் கண்காணித்த இந்தியா, சீனா வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை உறுதி செய்தது. இதன் விளைவாக ஏற்பட்ட கைகலப்பில், இந்தியத் தரப்பில் 20 பேரும், சீனத்தரப்பில் 45 பேரும் உயிரிழந்தனர்.

சீன ராணுவத்தின் எல்லைப்புற ஆக்ரோஷத்தால், இந்தியா, தனது எல்லையில் சாலைக் கட்டுமானத்தைத் தொடர்வதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டைக் குலைக்க முடியவில்லை. நிறைவேற்றப்பட்டு வரும்   சாலைத் திட்டங்கள், இந்தியப் படையினருக்கு,  வடக்குத் துணைப் பகுதி எனப்படும் முன்னிலைத் தளத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும். சசோமா முதல் சாசர் லா வரையிலான சாலை இணைப்புக்களை வழங்கும். இது இந்திய வீரர்களுக்கு டி.பி.ஓ. மாற்று வழியை வழங்கும். இந்தியா தனது டார்புக்-ஷியோக்-டி.பி.ஓ.  சாலையை 2019 இல் கட்டி முடித்தது. சீனர்களின் ஆத்திரமூட்டல் இருந்தபோதிலும், ஜூன் 15 மோதலுக்குப்பின்,
கால்வான் நதியின் குறுக்கே, செயலுத்தி ரீதியாக, முக்கியத்துவம் வாய்ந்த அணையை இந்தியா கட்டி முடித்தது. இந்திய ராணுவம், எல்லையை அடைவதும், தளவாடங்களைக்  கொண்டு செல்வதும் இதனால் எளிதாகும்.

இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களை அனுப்புவது அதிகரித்துள்ளதால், தற்போதைய நிலைமை பதட்டமாகவே உள்ளது. சமீபத்தில் எல்லையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கட்டிய முகாம்களைப் பராமரிக்க, சீனத் தரப்பில் இருந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், இந்தியத் துருப்புக்கள் எல்லையை நெருங்கி வருவதோடு, எல்லையை ஒட்டிய 32 சாலைகளின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. அண்மையில் ஜூன் 24 அன்று கையெழுத்திடப்பட்ட “சரிபார்க்கக்கூடிய துருப்பு வாபஸ்” ஒப்பந்தத்துக்கு இணங்க, சீனா செயல்படும் வரை, தற்போதைய இந்தியா-சீனா மோதல் நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

|