மீண்டும் தன் மீதே கோல் போட்ட பாகிஸ்தான்.

(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் கௌஷிக்ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

பாகிஸ்தானில் எல்லாம் சரியாக இல்லை. கோவிட் 19 தெருக்கடி மற்றும் கடுமையான பொருளாதார சூழ்நிலை என்ற இரட்டைச் சவால்களை நாடு எதிர்கொண்டுள்ளது. அதனுடன் சேர்த்து, அதன் உலகளாவிய பயங்கரவாதம் நிலைகுலைந்துள்ளது.

பாகிஸ்தான் பிராந்திய பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் என்றும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு எதுவும் செய்யவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தியவுடன், பாகிஸ்தான் அக்குற்றச்சாட்டுகளை விலக்க முயன்றது. ஆனால், மாறாக அதற்கு மேலும் சர்ச்சையை உருவாக்கியது .

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவில் 9/11 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியும், அல்கொய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை “ஷாகித்” (தியாகி) என்று, வியாழக்கிழமை பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்துரையாடலின் போது அழைத்தார். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றதன் மூலம் சங்கடத்தை எதிர்கொண்டதாகவும் திரு கான் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் தொடர்ந்து கூறுகையில், பாகிஸ்தானுக்குத் தெரிவிக்காமல், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனைக் கொன்றது என்றும், அதனைத் தொடர்ந்து, அனைவரும் தனது நாட்டை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினர் என்றும் குறிப்பிட்டார். ஒசாமா பின்லேடன் 2011 மே மாதம் பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்டார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து, அதற்காக சங்கடத்தையும் எதிர்கொண்ட நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்விக்கு பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டது, ” என்று திரு. இம்ரான் கான் கூறினார். “உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை, அமெரிக்கர்கள் வந்து ஒசாமா பின்லேடனை அபோட்டாபாத்தில் கொலை செய்து, தியாகியாக்கியது, ஒரு சங்கடமான தருணம். அதன்பிறகு, உலகம் முழுவதும் பாகிஸ்தானை துஷ்பிரயோகம் செய்தது. நம் நட்பு நாடு, நம் நாட்டிற்குள் வந்து நமக்கு அறிவிக்காமல் ஒருவரைக் கொன்றது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போரினால் 70,000 பாகிஸ்தானியர்கள் இறந்தனர் “என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.

ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில், “பாகிஸ்தான் பிராந்திய ரீதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது, மேலும் லஷ்கர்-இ-தயிபா மற்றும் ஜெயிஷ் -இ-முகமது உள்ளிட்ட அமைப்புக்களை அதன் பிரதேசத்திலிருந்து செயல்பட அனுமதிக்கிறது”. என்று குறிப்பிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பகிரங்கமாக ஆதரவு அளித்து வருவதன் பின்னணியில், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதில் பிரதமர் இம்ரான் கானின் படுமோசமான சாதனையைப் பதிவிட்டு அமெரிக்கா சாடியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை “அப்பாவிகள்” என்று கருதுகிறது.

பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடம் வழங்கும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானைக் கருதும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் மதிப்பீடு, அக்டோபரில் பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி கண்காணிப்பு நிதி நடவடிக்கை பணிக்குழுவின் மதிப்பாய்வை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாகிஸ்தானைப் பற்றி திட்டமிடப்பட்ட மறுஆய்வை எஃப்ஏடிஎஃப் தள்ளிவைத்ததை அடுத்து, பாகிஸ்தானுக்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. ஆனால், ஏற்கனவே பிரதமர் இம்ரான் கான் நாட்டிற்கு மிகுந்த சேதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

காஷ்மீரில் 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றபோது, ​​ பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கும், இந்தியாவை மையமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களைத் தடுப்பதற்கும் பாகிஸ்தான் சுமாரான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதுவரை பாகிஸ்தான், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் தாமதம் மற்றும் பாகுபாடின்றி அகற்றுவதாக 2015 செயல் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் எடுத்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானிய அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் லஷ்கர்-இ-தயாபா நிறுவனர் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது 12 கூட்டாளிகளைக் குற்றம் சாட்டியிருந்தனர், ஆனால் ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசார் மற்றும் 2008 மும்பைத் தாக்குதல்களின் சூத்திரதாரி சஜித் மிர் போன்ற பிற பயங்கரவாதத் தலைவர்கள் மீது வழக்குத் தொடர உள்நாட்டு அதிகாரிகளைப் பயன்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பி்டுள்ளது.
அவர்கள் இருவரும், பாக் அரசு மறுத்த போதிலும், அரசின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் வசிப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்த நிகழ்வுகள், பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒருபோதும் தீவிரமாக இருந்ததில்லை என்பதையும் அதன் செயல்பாடுகள் வெறும் பேச்சளவில்தான் என்பதும் வெளிப்படையாகியுள்ளது. பாகிஸ்தான் அதன் மோசமான நடவடிக்கைகளுக்காக சர்வதேச சமூகத்தால் கண்டிக்க வேண்டியது அவசியம்.

.