தற்சார்பு அடைவதே இந்தியா முன்னேறுவதற்கான வழி – பிரதமர் திரு நரேந்திர மோதி.

(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

பிரதமர் திரு நரேந்திர மோதி, அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர மனதின் நிகழ்ச்சியில், “மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில் அதிகம் இடம் பிடித்திருந்தன என்பது இயல்பான விஷயம் தான் என்றாலும், இன்றைய நாட்களில், தொடர்ந்து ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்யப்பட்டு வருகிறது என்றால், ‘இந்த ஆண்டு எப்போது கடந்து போகும்’ என்பது தான்.  எப்படியாவது இந்த ஆண்டு விரைவாகக் கடந்து சென்று விடவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள்.”
என்று கூறினார்.

“6-7 மாதங்களுக்கு முன்பாக, கொரோனா போன்றதொரு சங்கடநிலை வரும் என்றோ, அதற்கு எதிரான போராட்டம் இத்தனை நீண்டிருக்கும் என்றோ நாம் நினைத்துப் பார்த்ததுண்டா?   இந்தச் சங்கடம் ஒருபுறம் என்றால், நெருப்பிற்கு நெய் வார்த்தது போல தேசம் தினம் சந்தித்துவரும் புதிதுபுதிதான சவால்கள் இன்னொரு புறம். சில நாட்கள் முன்பாகத் தான் நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் அம்ஃபான் சூறாவளியின் கோரத் தாண்டவம்….. தொடர்ந்து மேற்குக் கரையோரத்தை நிஸர்க் சூறாவளியின் தாக்குதல். பல மாநிலங்களைச் சேர்ந்த நமது விவசாய சகோதர சகோதரிகள், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்….. இன்னும் இவை தவிர, நாட்டின் பல பாகங்களில் சின்னச்சின்ன நிலநடுக்கங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன; இவை போதாதென்றால் நமது அண்டைநாடுகள் சில புரிந்துவரும் செய்கைகளையும், முன்னிறுத்தும் சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில், ஒரே நேரத்தில் இத்தனை பேரிடர்கள், இந்த அளவிலான பேரிடர்கள், மிக அரிதாகவே நடக்கின்றன. இப்போது நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால், எங்கோ சின்னச்சின்ன சம்பவம் நடந்தாலும்கூட, அவற்றையும் இந்த சவால்களோடு இணைத்தே மக்கள் நோக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.
“இடர்கள் வருகின்றன, சங்கடங்கள் வருகின்றன ஆனால், கேள்வி என்னவென்றால், இந்த இடர்கள் காரணமாக 2020ஆம் ஆண்டினை மோசமான ஆண்டாக நாம் கருத வேண்டுமா என்பது தான். முந்தைய ஆறு மாதங்கள் கழிந்த விதத்தைப் பார்த்து, இதன் காரணமாக ஆண்டு முழுவதுமே மோசமானது என்று முடிவு செய்வது  சரியில்லை. பாரத நாட்டின் சரித்திரத்தின் ஏடுகளை நாம் புரட்டிப் பார்த்தோமேயானால், எத்தனை எத்தனையோ இடர்கள்-சங்கடங்களை எல்லாம் கடந்து, அவற்றை வெற்றிகொண்டு, மேலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து வந்திருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு தாக்குதல்கள் பாரதத்தின் மீது தொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன, பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன, பாரதம் என்ற நாடே வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும், அதன் கலாச்சாரம் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் மக்கள் கருதினார்கள்; ஆனால், இந்த அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் பாரதம் மேலும் பிரும்மாண்டமானதாக வளர்ந்து தழைத்தது. நம் மக்கள் மத்தியிலே ஒரு கருத்து உண்டு – படைத்தல் நிரந்தரமானது, படைத்தல் நீடித்திருப்பது என்பது தான் அது.” என்றார் பிரதமர்.

“சங்கடம் என்னதான் பெரியதாக இருந்தாலும், பாரதநாட்டின் பண்பாடு, தன்னலமற்ற சேவை என்ற உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. எப்படி பாரதமானது சங்கடம் ஏற்படும் காலத்திலெல்லாம் உலகிற்கு உதவிகரமாக இருந்து வந்துள்ளதோ, அதையொட்டி இன்று அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் நம் நாட்டின் பங்களிப்பு மேலும் பலமாகி இருக்கிறது. உலகமும் இந்த வேளையில் பாரதத்தின் உலக சகோதரத்துவ உணர்வை அனுபவித்திருக்கிறது; அதே வேளையில் தனது இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாரதத்திடம் இருக்கும் ஆற்றலையும், அதன் அர்ப்பணிப்பையும் கண்டது. லடாக்கில், பாரதநாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது. பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும். பாரத அன்னையின் பெருமைக்கு சற்றேனும் களங்கம் ஏற்படுத்த விட மாட்டோம் என்பதை நமது வீரம்நிறை இராணுவ வீரர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்”
என்று எடுத்துரைத்தார்.
“லடாக்கில் வீரமரணத்தைத் தழுவிய நமது இராணுவ வீரர்களின் சாகஸச் செயல்களை நாடு முழுவதும் போற்றுகிறது, தனது சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறது. நாடனைத்தும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது, அவர்கள் முன்னே தலைவணங்குகிறது. பாரத அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எந்த மனவுறுதியோடு நமது வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதே உறுதிப்பாடு நம்மனைவரின் இலட்சியமாக ஆக வேண்டும். நமது முயற்சிகள் அனைத்தும் இந்தத் திசையை நோக்கியவையாக இருக்க வேண்டும், இதனால் நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் நாட்டின் சக்தி அதிகரிக்க வேண்டும், நாடு மேலும் திறம் படைத்ததாக ஆக வேண்டும், நாடு தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் – இவையனைத்தும் உயிர்த்தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மெய்யான சிரத்தாஞ்சலிகளாக அப்போது தான் அமையும்.” என்றார் பிரதமர்.

“சுதந்திரத்திற்கு முன்பாக, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை, உலகின் பல நாடுகளைக் காட்டிலும் முன்னேறி இருந்தது. நம்மிடத்தில் பல ஆயுத தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள் இருந்தன. அப்போது பல நாடுகள் நம்மை விட அதிகம் பின்தங்கி இருந்தன, இன்றோ அவை நம்மை விட முன்னேறி விட்டன. சுதந்திரத்திற்குப் பின்னர், பாதுகாப்புத் துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நமது கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பெற்றிருக்க வேண்டிய பாடம் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.” என்று பிரதமர் உறுதி பட க் கூறினார்.

“எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை.   நீங்கள் உள்ளூர்ப் பொருட்களை வாங்கினால், அவற்றுக்காகக் குரல் கொடுத்தால், நீங்களும் இந்த தேசம் வலுவடைய உங்கள் பங்களிப்பை ஆற்றுகிறீர்கள் என்பது உறுதி.” என்று பிரதமர் கூறினார்.

“கரோனா ஏற்படுத்தியிருக்கும் இந்த சங்கட வேளையில் நாடு ஊரடங்கை விட்டு வெளியேறி வருகிறது. இப்போது நாம் ஊரடங்கு என்ற பூட்டைத் திறந்து கொண்டிருக்கிறோம். இப்படி திறக்கப்படும் வேளையில் நாம் இரண்டு விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவை வீழ்த்த வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும், அதற்கு சக்தியளிக்க வேண்டும். ஊரடங்கை விட அதிக எச்சரிக்கையோடு நாம் இந்த தளர்த்தல் காலத்தில் இருப்பது மிகவும் அவசியம். உங்களின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் உங்களை கரோனாவிடமிருந்து பாதுகாக்கும்.  நீங்கள் அசட்டையாக இருந்து விட வேண்டாம், உங்களிடத்திலும் அக்கறை காட்டுங்கள், மற்றவர்களிடத்திலும் கூட.” என்று பிரதமர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.