(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ளத் தவறிய நிலையில், அதன் விரோதப் போக்குக்கும், நடத்தைக்கும் கடந்த வாரம் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் குழுவின் 10 நாடுகளின் காணொளிக் கூட்டத்தில், கடுமையான கண்டனம் எழுந்தது. கடல்சார் உரிமைகள், இறையாண்மை உரிமைகள் மற்றும் கடல்சார் பிரதேசங்களின் மீதான நியாயமான நலன்களை நிர்ணயிப்பதற்கான 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (யு.என்.சி.எல்.ஓ.எஸ்)மேற்கொண்ட தீர்மானமே அடிப்படை என, இக்குழு தனது நிலையை மீண்டும் வலியுறுத்தியது. இந்நிலையில், சீனாவின் அடாவடித்தனமும், சர்வதேச சட்டத்தை மதிக்காத தன்மையும் வெளிப்பட்டுள்ளன.
சீனாவிலுள்ள வூஹானில் தோன்றிய தொற்றுநோயை எதிர்த்து உலகமே போராடி வரும் இந்நேரத்தில், ஹாங்காங், தைவான் ஜலசந்தி, இந்தோ-சீனா எல்லைப் பகுதி ஆகிய இடங்களில் போர் மனப்பாங்கை சீனா வெளிப்படுத்தி வருவது துரதிர்ஷ்டமானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பாரசெல் தீவுக்கு அருகே, ஒரு சீனக் கப்பல், வேண்டுமென்றே எட்டு பேருடன் சென்ற வியட்நாம் படகைத் தாக்கி மூழ்கடித்தது.
வியட்நாமிய மீனவர்களை மீட்க முயன்ற இரண்டு வியட்நாம் மீன்பிடி படகுகள் சீனர்களால் சிறைபிடிக்கப்பட்ட ன. இதன் பின்னணியில், சீனாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக ஆசியான் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. ஆசியானின் சர்ச்சைக்குரியதாக நீண்ட காலமாக கருதப்படும் பிராந்தியத்தில், சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்தும் பிராந்திய விதிமுறை தொடர்பான முக்கியமான அதிகாரமளிப்பை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது என, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில இராஜீய அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனா ஆதிக்க நடவடிக்கைகளை எடுத்த போது, கண்டனத்தை வெளியிட்டு வந்த ஆசியான், உச்சி மாநாட்டிற்குப் பின், இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டதில்லை. தற்சமயம், ஆசியான் அமைப்புக்கு வியட்னாம் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் வியட்நாமும் எப்போதும் வலுவான பிணைப்புகளைத் தக்க வைத்துள்ளன. இரு நாடுகளும் கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இணைக்கப்பட்டுள்ளன. தென்சீனக் கடல் தகராறு குறித்த இந்தியாவின் நிலைப்பாடும், இப்பிராந்தியத்தின் நாடுகளுடன் இந்தியாவின் ஈடுபாடும் வியட்நாமுடனான அதன் உறவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளன. சீனாவின் ஆதிக்க நடத்தை, வியட்நாம் உட்பட பிராந்தியத்தின் பிற நாடுகளை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவை நாடத் தூண்டியுள்ளது.
ஆசியான் உச்சிமாநாடு போன்ற பலதரப்பு அரங்குகளிலும், அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட இருதரப்பு கூட்டு அறிவிப்பிலும் இந்தியா தொடர்ந்து, சுதந்திரமான கடல்வழிப் போக்கை ஆதரித்து வந்துள்ளது. தென்சீனக் கடலில் இந்தியாவின் கடற்படைப் பயிற்சிகள் மற்றும் கடலில் ரோந்து செல்வது, வியட்நாமிற்கு இந்தியாவின் வலுவான செயலுத்தி ரீதியிலான ஆதரவைக் குறிக்கிறது.
பிரதமர் திரு நரேந்திர மோதியின் வியட்நாம் பயணத்தின் போது, இந்தியாவில் இருந்து, அதிவேக ரோந்துப் படகுகளை வாங்குவதற்காக வியட்நாமுக்கு அறிவித்த கடன் வசதி, வியட்நாமுடனான கடற்படை ஒத்துழைப்பு ஆகியவை, வியட்நாமின் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
கடலிலும் நிலத்திலும் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தைக்கு எதிராக உலகம் போராடுவது மட்டுமல்லாமல், கோவிட் -19 க்கு எதிரான ஒரு மெய்நிகர் போரும் கூட நிகழ்ந்து வருகிறது. தொற்றுநோய் பரவுவது தொடர்பான தகவல்களை சீனா உடனடியாகப் பகிர்ந்திருந்தால், உலகதாடுகள் முன்னெச்சரிக்கையாக, பல தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியிருக்கும். அவை விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கும். துன்பங்கள் குறைக்கப்பட்டிருக்கும்.
மே 20 அன்று, உலக சுகாதார அமைப்பு, 122 நாடுகளின் ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது, வைரஸின் உயிரியல் மூலத்தையும், இடைநிலை ஏஜென்ட் உட்பட, மனிதர்களுக்குத் தொற்று பரவும் வழியை அடையாளம் காணவும் உலகிற்கு அழைப்பு விடுத்தது. இந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ள இந்தியா, கோவிட் -19 நோய் தொடர்பான தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
“உலக சுகாதார சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பது, தொற்றுநோய்க்கான நமது பதில் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் எதிர்காலத்திற்குத் தயாராவதற்கான படிப்பினைகளை எடுப்பதற்கும் உண்மைகளையும் அறிவியலையும் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்” என்று இந்தியா கருதுகிறது. உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக, இந்த இலக்குகளை நோக்கி செயல்பட இந்தியா தயாராக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற விரும்பும் தைவானின் எதிர்பார்ப்பு குறித்து, உலக சுகாதார சபை முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைவான் 2009 இல் உலக சுகாதார சபையில் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டது. 1971 இல் உறுப்பினர் பதவியைத் திரும்பப் பெற்றதிலிருந்து, இந்த ஐ.நா.அமைப்பின் செயல்பாட்டில் பங்கு கொண்ட முதல் நிகழ்வாக இது அமைந்தது.
____________