“கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தை நீட்டித்து, பிரதமர் அறிவிப்பு.

(அகில இந்திய வானொலி செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இரண்டாவது ஊரடங்குத் தளர்வு துவங்குவதற்கு சற்று முன்பு, பிரதமர் திரு நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். “நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளது. இது பல நோய்களைக் கொண்டுவருகிறது. அனைத்து இந்தியர்களும் மழைக்காலங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

“கொரோனாவின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா  சிறந்த நிலையில் உள்ளது. ஊரடங்கு மற்றும் பிற முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்தது, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. முன்னதாக, முகக் கவசம் அணிவது, சமூக தூரவிலகல் மற்றும் 20 விநாடிகள் கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தோம். ஆனால் இன்று, நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும் போது, ​​அலட்சியம் அதிகரிப்பது கவலைக்குரியது” என்று பிரதமர் கூறினார்.

“நாம் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விதிகளைப் பின்பற்றாதவர்கள் தடுத்து எச்சரிக்கப்பட வேண்டும்.  ஒரு நாட்டின் பிரதமருக்குப் பொது இடத்தில் முகக் கவசம் அணியாததற்கு 13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை நாம் செய்திகளில் கேட்டோம். இந்தியாவிலும், உள்ளூர் நிர்வாகம் அதே ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். 130 கோடி இந்தியர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான உந்துதல் இது.  ஒரு கிராமத்தின் பிரதானோ, அல்லது பிரதம மந்திரியோ, யாராக இருந்தாலும், இந்தியாவில்  சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை”  என்று பிரதமர் குறிப்பிட்டார்.

“ஊரடங்கு காலத்தில் நாட்டின் முதன்மை முன்னுரிமை, யாரும் பசியுடன் இல்லாதிருப்பதை உறுதி செய்வதாகும். மத்திய அரசு, மாநில அரசுகள், சிவில் சமூகம், அனைவரும், பசியுடன் எவரும் உறங்கச் செல்லாமல் இருக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். இதனால், ஊரடங்கு துவங்கிய உடனேயே, அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1.75 லட்சம் கோடி அளவில் ஏழைகளுக்கு உதவி வழங்கப்பட்டது” என்றார் பிரதமர்.

“கடந்த மூன்று மாதங்களில், நேரடி பணப் பரிமாற்ற முறையில், 20 கோடி ஏழைகளுக்கு ரூ. 31,000 கோடி வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ரோஸ்கர் அபியான்’ திட்டம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புக்காக விரைவாகத் தொடங்கப்பட்டது. அரசு  இதற்கு, 50,000 கோடி ரூபாய் செலவிடுகிறது” என்று பிரதமர் கூறினார்.

“இந்தியாவில், 80 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோகிராம் கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. கூடுதலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு ஒரு கிலோகிராம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ஒரு வகையில், அமெரிக்காவின் மக்கள் தொகையை விட 2.5 மடங்குக்கும், பிரிட்டனின் மக்கள் தொகையை விட 12 மடங்குக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையை விட இரு மடங்கிற்கும் நமது அரசாங்கத்தால் இலவச ரேஷன் வழங்கப்பட்டது.” என்றார் பிரதமர்.

“மழைக்காலங்களுக்குப் பிறகு, பண்டிகை காலம் இந்தியாவில் தொடங்குகிறது. இது தேவைகளையும், செலவுகளையும் அதிகரிக்கிறது. இதை மனதில் கொண்டு, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், தீபாவளி மற்றும் சத் பூஜா வரை, அதாவது நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது”  என்று பிரதமர் அறிவித்தார்

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் நீட்டிப்புக்கு ரூ.90 ஆயிரம் கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் செலவிடப்பட்ட தொகையும் சேர்த்து, மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடி செலவாகிறது. “ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு” என்ற, நாடு முழுவதற்குமான ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முக்கியப் பயனாளிகள் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்குச் செல்வோர் ஆவர்.

“ஏழை மக்களுக்கு அரசால் இலவசமாக உணவு தானியங்கள் வழங்க முடிந்ததற்கு, அயராது உழைத்து, உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும், நேர்மையுடன் அரசுக்கு சரியாக வரியளித்த மக்களுமே காரணம்.” என்று பிரதமர் கூறினார்.

எதிர்வரும் நாட்களில், சமூகத்தின் ஏழை, நலிந்த மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை மேம்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேலும் வலுப்படுத்தும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, ​​இந்தியா தனது பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும். ஆத்மநிர்பர் பாரதத் திட்டத்தற்காக நாம் அனைவரும் இடைவிடாமல் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் உள்ளூர் தயாரிப்புக்குக் குரல் கொடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி மற்றும் அர்ப்பணிப்புடன், இந்த நாட்டின் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.