ஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு ஜி-7 கண்டனம்.

(கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

ஜூன் 30 அன்று, சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு, ஹாங்காங்கிற்கான சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 1997 ஆம் ஆண்டில் சீனாவிற்கு ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டதன் ஆண்டு தினத்திற்கு முன்னர், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஹாங்காங்கின் சட்டமன்றத்தைத் தவிர்த்து, சீனா சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து போன்ற முக்கிய சக்திகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், ஜி-7 கூட்டத்தில்  “கடுமையான கவலைகள்”  வெளிப்படுத்திய போதிலும், இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங்கில் “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” கொள்கையை நீர்த்துப்போகச் செய்யவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
முன்னதாக, ஜூன் 17 அன்று, ஜி -7 நாடுகள் ஒரு அறிக்கையில், “சீனாவின் முடிவு ஹாங்காங் அடிப்படைச் சட்டம் மற்றும் ஐ.நா. பதிவு செய்த சீன-பிரிட்டிஷ் கூட்டுப் பிரகடனத்தின் கொள்கைகளின் கீழ், அதன் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க இருக்கவில்லை. முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒரு நாடு, இரண்டு அமைப்புக்கள் கொள்கை மற்றும் பிரதேசத்தின் உயர் சுயாட்சியைக் குலைத்து விடும். இது, பல ஆண்டுகளாக, வெற்றிகரமாக ஹாங்காங்கை செழித்து வளர  உதவிய அமைப்புக்குப் பங்கம் விளைவிக்கும்.” என்று குறிப்பிட்ட.ன.
மேலும், ஜி -7 தலைவர்கள் இது “சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒரு சுயாதீன நீதி அமைப்பின் இருப்பு ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்டுள்ள அனைத்து ஹாங்காங் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்று கவலை தெரிவித்தனர்.

ஹாங்காங்கைப் பற்றிய ஜி -7 அறிக்கைக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகம், ஹாங்காங் தொடர்பான விஷயங்கள் சீனாவின் உள் விவகாரங்கள் என்றும், இதனால் எந்த வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது அமைப்புகள் அல்லது தனிநபர்கள் தலையிடுவது பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் கூறியது.
ஹாங்காங்கைப் பாதுகாப்பதற்கான சட்ட அமைப்பு மற்றும் அமலாக்க வழிமுறைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று சீனா கூறியுள்ளது. மேலும் அடிப்படைச் சட்டத்தின் மூலம் படிக்கவும், தொடர்புடைய சட்டங்களை சார்பற்ற நிலையில், நியாயமான பார்வையுடன் நோக்கவும், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அடிப்படை விதிமுறைகளுக்கு இணங்க, ஹாங்காங் விவகாரங்கள் மற்றும் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
புதிய சட்டம், ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்க, வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்துள்ள மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தீவிரவாத சக்திகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று சீன ஊடகங்கள் தொடர்த்து கூறி வருகின்றன.

புதிய சட்டம், சமீபத்திய காலங்களில் சர்வதேச கவனத்தை ஈர்த்த ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு போராட்டங்களை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற கவலைகள் உள்ளன. புதிய சட்டம் சீனாவுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் தகர்த்தெறிய முற்படுகிறது. ஹாங்காங்கின் ஸ்திரமின்மைக்குப் பங்களிப்பதாகக் கருதும் வெளிநாட்டு சக்திகளைக் குறிவைக்கிறது.

பெருமளவிலான ஆர்ப்பாட்டங்கள்,  சமீபத்திய காலங்களில் ஹாங்காங்கில் காணப்பட்டன. அவற்றில் சில வன்முறையாக மாறின. ஆர்ப்பாட்டங்கள் விமான நிலையம் மற்றும் சுரங்கப்பாதை நடவடிக்கைகளை பாதித்த சம்பவங்களும் உண்டு. சீனாவின் நோக்கம், பிரிவினை, ஆட்சிக் கவிழ்ப்பு, பயங்கரவாத நடவடிக்கைகள், வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு ஆகியவற்றின் மூலம், தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தல்களைக் குறி வைப்பதாகும் என்று சீனா கூறுகிறது. சீனா ஒரு தேசிய பாதுகாப்பு நிறுவனத்தை ஹாங்காங்கில் நிறுவும்.

ஹாங்காங்கின் சுயாட்சி பாதிக்கப்படுவதால், அமெரிக்கா முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளை ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கூடுதலாக, ஹாங்காங்கின் சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கப் பங்களித்ததாகக் கருதப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகள் மீது விசா தடைகளைப் பயன்படுத்தவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம், சீனா மீது மிரட்டல் செயல்படாது என்றும், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கான சீனாவின் முயற்சிக்குத் தடையாக, பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் அமெரிக்கா ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் சட்டத்தின் மீதான சீனாவின் முடிவை சாடியுள்ளார்.

உலகளாவிய தொற்றுநோய் இருந்தபோதிலும், சீனாவின் ஆணவமிக்க நடத்தை, ஹாங்காங்கில் மட்டுமல்லாது, தைவான், தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் மற்றும் இமயமலை எல்லைகளிலும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் கொரியாவை  ஜி -7 குழுவுக்குள் அமெரிக்கா கொண்டுவர விரும்புவது சீனாவுக்கு ஏற்புடையதாக இல்லை.  வரும் மாதங்களில் ஜி -7 உச்சி மாநாட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா, ஏற்கனவே இந்தியாவை ‘சிறப்பு விருந்தினராக’ அழைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சீனாவை மேலும் அந்நியப்படுத்தியுள்ளது,  சீனாவுக்கு எதிராக ஒரு “சிறிய வட்டத்தை” வரைய முற்படும் எந்த முயற்சியும் செல்வாக்கற்றதாக மாறும் என்று சீனா கூறியுள்ளது.