நேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி
(நேபாள விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் நிஹார் ஆர் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)
ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) சில மூத்த தலைவர்கள் பிரதமர் திரு கே பி சர்மா ஓலி பதவி விலகக் கோரி வருவதால், தற்போதுள்ள கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில், நேபாளம் பெரும் அரசியல் கொந்தளிப்பை எதிர்கொள்கிறது.
தவிர, முதன்முறையாக, 44 நிலைக்குழு (எஸ்சி) உறுப்பினர்களில் 31 பேர் திரு. ஓலிக்குத் திட்டவட்டமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நிலைக்குழுக் கூட்டம் மே 24 அன்று மூன்று நிகழ்ச்சி நிரல்களுடன் தொடங்கியது. நேபாள அரசாங்கத்தின் கொள்கை மற்றும் கோவிட்-19 நிலைமையைக் கையாள்வது உள்ளிட்ட செயல்திறனை மதிப்பீடு செய்தல், இந்தியா-நேபாள எல்லைப் பிரச்சினை, ஐ.நா. மில்லினியம் சவால் ஒத்துழைப்பிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் ஆகியன அந்த மூன்று விஷயங்களாகும். ஐ.நா. மில்லினியம் சவால் ஒத்துழைப்புக்கு, ஆளும் என்.சி.பியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட, பல குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, நிலைக்குழுத் தலைவர்கள் பிரதமர் ஓலி நல்லாட்சியை வழங்கத் தவறியது, வளர்ந்து வரும் ஊழல் மற்றும் கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வி ஆகியவை குறித்து மட்டுமே விமர்சித்தனர்.
இருப்பினும், கட்சியின் இணைத் தலைவரான புஷ்ப கமல் தஹால் என்கிற பிரச்சந்தா, மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாள், ஜலா நாத் கானல் மற்றும் பாம்தேவ் கௌதம் ஆகியோர், திரு. ஓலி கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். திரு ஓலி அரசாங்கத்தையும் கட்சியையும் திறம்பட நடத்துவதில் தோல்வியுற்றதாகவும், இந்தியாவும், நேபாளத்தின் சில தலைவர்களும் சேர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம், தேவையற்ற சொல்லாட்சியை எழுப்பியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். திரு. ஓலி, அரசாங்கத்தையும் கட்சியையும் வழிநடத்தும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் என அவர்கள் கூறினர்.
நேபாளம் பிரதமர், நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள சக்திகள் தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாகக் குறிப்பிட்டார். இது, காலாபனி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை உள்ளிட்ட ஒரு புதிய அரசியல் வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான அவரது உறுதியான நடவடிக்கைக்கு எதிராகப் பழிவாங்கும் முயற்சியாகும் என்று அவர் கூறினார். ஆனால், இப்பகுதிகள் மூன்று மே இந்தியாவுக்குச் சொந்தமானவை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரச்சந்தா பிரிவு, திரு. ஓலியின் ராஜினாமாவைக் கோரியது. மே 8 ஆம் தேதி, இந்தியா லிபுலேக்-மன்சரோவர் சாலையைத் திறந்து வைத்த பின்னர், மக்கள் கவனத்தைத் திசை திருப்ப வரைபட சர்ச்சையை முன்வைத்ததன் மூலம், பிரதமர் ஓலி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். கட்சியின் ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும், தனது அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் தனது சொந்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க சீனாவின் உதவியை அவர் நாடினார்.
கேபி சர்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் மற்றும் பிரச்சந்தா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் ஆகியவை மார்க்சிச-லெனினிச சித்தாந்தத்தை வழிகாட்டும் கொள்கையாக இணைக்க ஏழு அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், பிப்ரவரி 21, 2018 அன்று என்சிபி உருவாக்கப்பட்டது. . ஒருங்கிணைப்பின் முக்கிய நோக்கம், நாட்டை சோசலிசம் மற்றும் சமூக நீதியுடன் பொருளாதார செழிப்பு நோக்கி இட்டுச் செல்வதாகும். இணைவதற்கு முன்னர், இரு கட்சிகளும் 2017 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க வாக்கெடுப்புக்கு முன் கூட்டணியை உருவாக்கியிருந்தன. இந்த கூட்டணி நாடாளுமன்றத்திலும், ஏழு மாகாண சபைகளில் ஆறிலும் வசதியான பெரும்பான்மையைப் பெற்றது.
காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் பிற நகரங்களில் நடந்த தெரு ஆர்ப்பாட்டங்களில் ஓலி அரசின் தோல்வி பிரதிபலித்தது.
ஜூன் 9 முதல், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசாங்கத்தை எதிர்த்து “போதும் போதும்” என்ற கோஷத்தை எழுப்பினர். கோவிட்-19 நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்திடமிருந்து சிறந்த நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக இதுவரை 14,000 பேர் நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், புதிய குடியுரிமை மசோதாவை எதிர்த்து, ஏராளமான இன மற்றும் சிறுபான்மைக் குழுக்கள் ஜூன் 23 முதல் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது நேபாளக் குடிமக்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள், நேபாளக் குடியுரிமை பெற ஏழு ஆண்டு கால வரம்பை விதிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் தெரை பிராந்தியத்தில் உள்ள நகரங்களிலும், காத்மாண்டுவிலும் வழக்கமான அம்சமாக மாறி வருகின்றன.
நேபாளமும் இந்தியாவும் எப்போதும் புவியியல், வரலாறு மற்றும் கலாச்சார ரீதியான பழம்பெருமைமிக்க சிறந்த இருதரப்பு உறவுகளை அனுபவித்து வருகின்றன. இந்த உறவுகள் நெருக்கமான, விரிவான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்டவை. 17 ஜூன் 1947 இல் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. திறந்த எல்லை மற்றும் 1950 அமைதி ஒப்பந்தம் மற்றும் நட்பு ஆகியவை உறவின் தனித்துவமான அம்சமாகவே உள்ளன. அமைதியான சகவாழ்வு, இறையாண்மை, சமத்துவம் மற்றும் நேபாளத்தின் அபிலாஷைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய புரிதல், சம வளர்ச்சிப் பங்காளிகளாக ஒன்றாக வளர்தல் போன்ற கொள்கைகளுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. நேபாளமும் இந்த உணர்வுகளைப் மிரதிபலிக்க வேண்டும்.