இக்கட்டில் இம்ரான் கான் – சொல்லாட்சி செல்லுபடியாகவில்லை.

(பாதுகாப்பு ஆய்வு மையத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

ஒரு தயாரிக்கப்பட்ட பதில் தயாராக வைந்திருத்ததைப் போல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 2020 ஜூன் 29 அன்று பலூச் பிரிவினைவாதிகளால் கராச்சியில் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூற முற்பட்டார். இத்தாக்குதலில், நான்கு தீவிரவாதிகள் உள்ளிட்ட சுமார் 13 பேர் இறந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள எல்லா குறைபாட்டிற்கும் இந்தியாவை குற்றம் சாட்டுவது பாகிஸ்தான் தலைவர்களின் விருப்பமான பொழுது போக்குகளாக இருப்பதால், இம்ரான் கான் இவ்வாறு குற்றம் சாட்டியதில் வியப்பில்லை. இம்ரான்கானின் உதவியாளர்கள் முன்கூட்டியே, இந்திய, கொடி செயல்பாடு குறித்துப் பேசி, இந்தியாவுக்கு எதிரான சொல்லாட்சியைத் துவக்கினர். இத் தாக்குதல் குறித்து, முன்கூட்டியே தகவல் இருந்ததாகக் கூறும் இம்ரான் கான், தாக்குதலைத் தவிர்க்காதது ஏன் என்ற கேள்வி க்கு ப் பதில் இல்லை.
பல ஆண்டுகளாக, இத்தகைய தந்திரோபாயங்கள் பெரும்பாலான பாக்கிஸ்தானியத் தலைவர்களால் மக்கள் கவனத்தை தங்கள் அரசாங்கங்களின் தோல்விகளில் இருந்து திசை திருப்ப பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இம்ரான் கான் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், இந்தியாவுக்கு எதிராக இத்தகைய ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பொது விவகாரங்களைத் திறமையாகக் கையாளத் தவறிய இம்ரான் கான், நாட்டின் பல நெருக்கடிகளிலிருந்து பொதுமக்கள் கவனத்தைத் திருப்புவதற்கு உதவிய பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
முற்றுகையிடப்பட்ட ஒரு மனிதனைப் போல இம்ரான் கான் நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். பெரும்பாலும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதமர் என்று அழைக்கப்படும் அவரது அதிகார மையம் இப்போது ராணுவத் தலைமையகத்தின்  நல்லெண்ணத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கையாளும் இம்ரான்கானின் பாணி, பல வர்ணனையாளர்களால் அவர் ஆட்சிக்கு வந்தபோது ‘வித்தியாசமானது’ என்று பாராட்டப்பட்டது. இருப்பினும், அவர்கள் இப்போது அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். தேசிய பொறுப்புக் கூறல் பணியகத்தைத் தவறாகப் பயன்படுத்திய பின்பும், ஊழல்வாதிகளை நீதிக்கு முன் நிறுத்த  அவர் தவறி விட்டார். மாறாக, அவர் ஊழல் அரசியல்வாதிகளால் சூழப்பட்டிருக்கிறார். அவர்களில் பலர் அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பணியாற்றுகிறார்கள். அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் பல ஆதரவாளர்கள், அவருடைய முன்னோடிகளைப் பாதித்த அதே பழைய மற்றும் பழக்கமான தீக்குணங்களை அவரிடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான அர்ஷத் பட்டி, சில காலத்திற்கு முன்பு உருது ஊடகங்களில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில், இம்ரான் கான் முற்றிலுமாகத் தோல்வியுற்றார் என்றும், கடந்த 22 மாதங்களாக பாகிஸ்தானிய நேரத்தை வீணடித்ததற்காக ‘பாகிஸ்தானின் அன்புக்குரிய பிரதமர்’ மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் எழுதியுள்ளார். கடந்த தேர்தல்களின் போது அவருக்கு ஆதரவளித்த மற்றொரு பிரபல வர்ணனையாளர் ஹசன் நிசார் அவர்களும் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவரான ஃபவாத் சௌத்ரி, தனது கட்சியின் அழுக்குத் துணியை அண்மையில் ஒரு நேர்காணலில் பகிரங்கமாகக் கழுவினார், அரசாங்கம் செயல்படத் தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொண்ட அவர், கட்சியில் அனைத்தும் சரியாக இல்லை என்று கூறினார்.
அதற்கு முன்பே, கூட்டணிப் பங்காளிகளில் ஒருவரான பலூச் தேசியவாத கட்சி-மெங்கல், கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பலூச் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது குறித்து அதன் தலைவர் அக்தர் மெங்கல் தனது பதற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு முன் பல பலூச் தலைவர்களைப் போலவே, அக்தரும் தனது மக்களின் உண்மையான கோரிக்கைகளை ஜனநாயக வழிமுறைகளின் மூலம் பின்பற்றுவதற்கான வரம்புகளை ஆராய்ந்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் நீக்கப்படுவதில்  குறியாக உள்ளன. ஒசாமா பின்லேடனை ஒரு தியாகியாக அவர் சித்தரித்தது,  ஜிஹாதி தீவிரவாதிகள் மீதான அவரது அனுதாபங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்தன. பாகிஸ்தான் பட்ஜெட்டை ஏழை எதிர்ப்பு, மக்கள் விரோத நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைப் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர். எதிர்க்கட்சிகள்,  தேசிய சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பையும் கோருகின்றன. எதிர்வரும் நாட்களில், எதிர்க்கட்சிகள், தங்கள்  நிலைப்பாட்டைப் பலப்படுத்தி, இம்ரான் கானுக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனைக்கும் இடையில்,  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சையளிக்க சீனா முன்வந்துள்ளது  குறித்து இம்ரான் கான் கவலையில் ஆழ்ந்துள்ளார்.
பாக் இராணுவம்,  நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று வதந்திகள் பரவியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, ராணுவம், இம்ரான் கானின் தோல்விகளில் பங்கு கொண்டுள்ளதாகக் காணப்படுவதை விரும்பாது.

இந்தப் பின்னணியில், ‘மைனஸ் இம்ரான்’ என்ற, இம்ரான்கான் இல்லாத அரசு குறித்த திட்டம்,  ஊடக தலைப்புச் செய்தியாக  மாறியுள்ளது. இந்த நேரத்தில் தனக்கு மாற்று எதுவும் இல்லை என்று இம்ராகான் சட்டசபையில் சூளுரைத்தது, தனக்குத் தானே நம்பிக்கை அளித்துக் கொள்ளும் ஒரு பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பகடைக் காய் அவருக்கு எதிராக உருட்டப்பட்டதாகத் தெரிகிறது.