புதிய உச்சத்தைத் தொடும் இந்தியா – பூட்டான் உறவுகள்.

( அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

இந்தியாவும் பூட்டானும் 600 மெகாவாட் கோலோங்சு நீர் மின் திட்டத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திட்டன. இது, இரு நாடுகளுக்கும் இடையே, தனித்துவமான இருதரப்பு உறவுகளில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். ரன்-ஆஃப்-ரிவர் திட்டம் கிழக்கு பூட்டானில் உள்ள கோலோங்சு ஆற்றின் கீழ் பாதையில் அமைந்துள்ளது. பூட்டானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவின் சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான கோலோங்சு ஹைட்ரோ எனர்ஜி லிமிடெட் (KHEL) இதை செயல்படுத்தும். இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டானின் தலைநகர் திம்புவில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் மற்றும் பூட்டான் வெளியுறவு அமைச்சர் டாக்டர். தாண்டி டோர்ஜி ஆகியோர் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பூட்டான் ஒப்பீட்டளவில், ஒரு சிறிய இமயமலை நாடாகும். 38,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், வடக்கில் சீனாவையும், அதன் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் இந்தியாவையும் எல்லைகளாகக் கொண்ட நாடு. அது வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கனைக் கொண்ட இயற்கை வளமிக்க நாடு. நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் எட்டு லட்சம். ஏறக்குறைய அறுபதாயிரம் இந்தியர்கள் அங்கு வணிகர்களாகக் குடியேறி, பல்வேறு திட்டங்களுக்கு, முக்கியமாக இந்தியா அமைத்துள்ள நீர் மின் திட்டங்களுக்குப் பணிபுரிந்து வருகிறாரகள். பூட்டானிடம், பரந்த, 30,000 மெகாவாட் அளவிலான நீர் மின்சாரம் உற்பத்தி செய்யத்தக்க வளம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதன் முக்கிய வருமான ஆதாரமாகும். நாட்டின் வருவாய்க்கு நீர் மின்சக்தி 27 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் திரு நரேந்திர மோதி இரண்டாவது முறையாக திம்புவுக்கு விஜயம் செய்தபோது, 720 மெகாவாட் மங்தேச்சு திட்டம் தொடங்கப்பட்டது. ​​பூட்டானின் நீர் மின் உற்பத்தித் திறன் இதன் மூலம் 2,100 மெகாவாட் வரை உயர்ந்தது. பிரதமர் திரு மோதியின் முதல் பூட்டான் பயணம், 2014 ஜூன் மாதம், அவர் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணமாகும். இந்தியா தனது ‘அண்டைநாடுகளுக்கு முதல் இடம்’ என்ற கொள்கைக்கும், குறிப்பாக பூட்டானுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.

இந்திய உதவியுடன் மேலும் மூன்று பெரிய நீர் மின் திட்டங்கள் பூட்டானில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 336 மெகாவாட் சுகா, 60 மெகாவாட் குரிச்சு மற்றும் 1020 மெகாவாட் தலா திட்டம் ஆகும். இந்த மூன்று திட்டங்கள் பூட்டானில் வெற்றிகரமாக இயங்குகின்றன. நாட்டின் வெளிநாட்டு வருவாய்க்குப் பங்களிப்பு செய்கின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 75 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் பூட்டானின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், இந்தியாவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையில் மின் கொள்முதல் ஒப்பந்தம், திரு. மோதியின் ஆகஸ்ட் 2019 பூட்டான் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்டது. பூட்டான், பிராந்தியக் குழுக்களில், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) மற்றும் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) போன்றவற்றில் ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பூட்டான் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட்ஸ் முன்முயற்சியின் (பிஆர்ஐ) 2017 மற்றும் 2019 உச்சி மாநாடுகளில் சேரவில்லை. ஏனெனில், இந்தியாவும் இறையாண்மைப் பிரச்சினைகள் காரணமாக அதனைப் புறக்கணித்தது. மற்ற தெற்காசிய நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்த முயற்சியில் இணைந்தன. இது, இப்பிராந்தியத்தில் பொருளாதார ஆதிக்கத்திற்காக சீனா வடிவமைத்துள்ள திட்டமாகும்.

இந்தியா, பூட்டானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும். 2018 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ரூ. 9227 கோடி. பூட்டானுக்கு, வாகனங்கள், மின் மற்றும் இயந்திர உபகரணங்கள், பெட்ரோல், டீசல், ரசாயனங்கள், ஹைட்ராலிக் டர்பைன்கள் மற்றும் உதிரி பாகங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியப் பொருட்கள் மின்சக்தி, டோலமைட், சிலிக்கான், சிமென்ட் கிளிங்கர்கள், மரம் மற்றும் பலவிதமான விவசாய பொருட்கள் ஆகும்.

ஏராளமான பூட்டானிய மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் வணிகம், சட்டம் போன்ற பல்வேறு தொழில்முறைப் படிப்புகளில் படித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு இந்திய அரசின் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பூட்டானிய யாத்ரீகர்கள் இந்தியாவிலுள்ள பௌத்தர்களின் புனித ஆலயங்களுக்குச் செல்கின்றனர்.

அண்மைக்காலமாக, நீர் மின் உற்பத்தி உட்பட, பல்வேறு துறைகளில் திட்டங்களை வழங்குவதன் மூலம் பூட்டானுக்குள் சீனா நுழைய முயற்சிக்கிறது. பூட்டானுக்கு சீன ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா, பூட்டான் மற்றும் சீனாவின் முக்கோண சந்திப்பான டோக்லாமில் 2017 ஆம் ஆண்டில் சீனா உருவாக்கிய பிரச்சனையால், சீனாவுடன் பூட்டான் எச்சரிக்கையாக இருக்க முற்பட்டுள்ளது. சீனா முன்வைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் பூட்டான் மிகவும் எச்சரிக்கையாகிவிட்டது.