அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா ஏழு முதல் எட்டு சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து பராமரிக்கும் – அருண் ஜேட்லி

இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் உயர் வளர்ச்சி வீதமான ஏழு முதல் எட்டு சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து பராமரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் திரு அருண்ஜேட்லி கூறியிருக்கிறார். நியூயார்க்கில் இந்தியத் தலைமைத் தூதரகத்தில் நேற்று இரவு நடைபெற்ற கம்பெனி கலைப்பு மற்றும் திவால் சட்ட மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவில் ஏற்பட்டுள்ள கம்பெனி கலைப்பு, திவால் சட்டம் போன்ற முன்னோடிச் சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சியான, ஏற்புடைய சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் நிதியமைச்சக முதன்மைப் பொருளாதார ஆலோசகர் திரு சஞ்சீவ் கன்யால், கம்பெனி கலைப்பு, திவால் குறித்த இந்திய வாரியத்தின் தலைவர் திரு எம் எஸ் சாஹூ, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தலைமைத் தூதர் திரு சந்தீப் சக்ரவர்த்தி, தொழிலியல் அறிஞர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை அறிஞர்கள் பங்கேற்றனர்.

கம்பெனி கலைப்புக்கென சுமார் 1200 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

Pin It