அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான உச்சி மாநாடு – இந்தியா வரவேற்பு.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நடைபெற்றுள்ள உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகவும் முன்னேற்றமான நடவடிக்கை என்றும் கொரிய தீபகற்பத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைத்து சமயங்களிலும் இந்தியா ஆதரவு அளித்து வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுதப் பிரச்சினை தீர்வின்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள அணு ஆயுதப் பரவுதல் தொடர்புகள் குறித்த இந்தியாவின் அச்சத்திற்கும் தீர்வு காணப்படும் என நம்புவதாக அந்த அறிக்கை கூறுகிறது. முன்னதாக, வடகொரியா அணு ஆயுதங்களை அகற்றி விடுவதற்கு உறுதியான, எவ்வித மாற்றமும் இல்லாத உறுதி மொழியை அளித்தால், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க அமெரிக்கா முடிவு செயதுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்- உடனான பேச்சுக்கள் நேர்மையாகவும் நேரடியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்று கூறினார்.

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம் பற்றிக் கேட்டதற்கு, ராணுவத்தின் திறன்களைத் தாம் குறைக்கப்  போவதில்லை என்றும், ஆனால், வடகொரியா விரும்பாத தென்கொரியாவுடனான ராணுவப் பயிற்சிகளை நிறுத்திக் கொள்ளப்  போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனிடையே, டிரம்ப்-கிம் உடனான உச்சி மாநாடு இந்த நு}ற்றாண்டின் முக்கியமான பேச்சு என்று தென் கொரியா கூறியுள்ளது. இந்த உச்சி மாநாடு பற்றி பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யீ, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முழு அளவில் அணு ஆயுத அகற்றுதல் அவசியம் என்றார். வடகொரியாவின் நியாயமான பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கான அமைதி அமைப்பு தேவை என்றும் அவர் கூறினார். ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ  அபே-யும் அமெரிக்கா, வடகொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை வரவேற்றுள்ளார்.

Pin It