அமெரிக்கா-இரான் இடையே பதற்றத்தை அதிகரித்த அராம்கோ மீதான தாக்குதல்.

(இட்சா ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மிப்ரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

செளதி அரெபியாவின் தமாமுக்கு அருகில் உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் அமைந்திருக்கும் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய இடங்களில் அண்மையில் நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல், வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், 1991 வளைகுடா போருக்குப் பிறகு, உலக அளவில் எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஏமனில் இருந்து இயங்கும் ‘அன்சர் அல்லா’ என்ற ஹவுதி குழு, இதுபோன்ற தாக்குதல்கள் செளதியில் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, செளதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தப்படும் முதல் தாக்குதல் அல்ல; கடந்த மாதம் செளதியின் மற்றுமொரு பிரதான எண்ணெய் வயலான ஷாபா-வை இலக்கு வைத்த ஹவுதிக்கள், ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்ட செளதி பட்டத்து இளவரசர்  முகமது பின் சல்மான், இந்த வன்முறையை  எதிர்கொள்ள செளதி  அரேபியா  தயாராக  உள்ளது என்று கூறினார். மேலும் அதிக  தாக்குதல்கள்  நடைபெறலாம்  என்பதைக்  கவனத்தில்  கொண்டு, அராம்கோவிலிருந்து பஹ்ரைன் பெட்ரோலிய  நிறுவனம் வரை, நாளொன்றுக்கு  2 லட்சம்  பீப்பாய்கள்  கச்சா  எண்ணெயைக் கொண்டு  செல்லும் எண்ணெய்க் குழாய்ப் பாதையை சவுதி அரேபியா மூடிவிட்டது. இருந்தபோதிலும், 2 லட்சம் கோடி  டாலர்  மதிப்பிலான தனது பங்குகளில் 1 சதவிகிதத்தை பொதுமக்களுக்கு அளிக்கும் திட்டத்தை அராம்கோ நிறுவனம் தொடர்கிறது.  அதோடு, மத்திய  கிழக்கின்  நீர்வழிகளைப்  பாதுகாக்க,  அமெரிக்கா  தலைமையிலான கூட்டணியில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் செளதி அரேபியாவும் இணைய உள்ளது. அண்மைத் தாக்குதலானது,  சரக்குப் போக்குவரத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும்,  உலகப்  பொருளாதார வளர்ச்சியின் நிலைத்தன்மையை பாதித்துள்ளதாகவும் செளதி அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானத் தாக்குதல்களை விசாரிக்க ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சௌதி அரேபியா,  தாக்குதலில்  இரானிய  ஆயுதங்கள்   பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தத்  தாக்குதல்களுக்கு  உலக  அளவில்  கண்டணங்கள் எழுந்துள்ள நிலையில், பிராந்தியத்தில் செளதி அரேபியாவுடன்  வலுவான கூட்டணியைக் கொண்டிருக்கும்  அமெரிக்கா, இதற்குக்  கடுமையாகப் பதிலளித்துள்ளது. இரானைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிப்பதற்காக அமெரிக்கா ஆயத்த  நிலையில்  இருப்பதாகக்  கூறி,  ராணுவத்  தாக்குதலுக்கான தனது நோக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளார். செளதியுடனான  உளவுத்துறைப் பரிமாற்றங்களையும் அமெரிக்கா அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு  நேரிடையாகச் சென்று, இந்தத் தாக்குதல் குறித்து விவாதிப்பார்  என்றும்,  பிராந்தியத்தில்  இரானின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான  முயற்சிகளை  ஒருங்கிணைப்பார்  என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுக்கும் இரான், போருக்கான  தனது தயார்நிலையை வெளிப்படுத்தியதோடு, 2015  ஏப்ரல்  இரான்  அணுசக்தி  ஒப்பந்தத்தை  அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் பேரழிவைத்  தவிர்க்கலாம்  என்றும் கூறியுள்ளது. யேமனில்  நடைபெறும் நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்  என்பதற்காக,  ஹவுதிக்கள் செளதி எண்ணெய்க் கட்டமைப்புகளின்  மீது  தாக்குதல்  நடத்தி  இருப்பதாக  இரான் அதிபர் ஹஸன் ருஹானி தெரிவித்துள்ளார். அதிகபட்ச அழுத்தம் என்ற கொள்கையிலிருந்து அதிகபட்ச வஞ்சம் என்பதற்கு அமெரிக்கா மாறுகிறது என்று  இரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃப் குறிப்பிட்டுள்ளார். இந்தத்  தாக்குதல்கள், உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பை பாதிக்கக்கூடியவை என்பது கண்கூடு.

அப்காய்க் மீதான தாக்குதல்களினால், செளதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஐம்பது சதவீதம் குறைந்துள்ளது என்பதோடு, 1950க்கு பிறகு, நாளொன்றுக்கு  57 லட்சம்  பீப்பாய்கள்  அளவிலான  இழப்பை சந்தித்துள்ளது. இதனால் மொத்த உலகளாவிய  எண்ணெய்  விநியோகத்தில்  ஐந்து  சதவீதம் குறைந்துள்ளதோடு,  எண்ணெய் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.  எண்ணெய்  வழங்கல் தொடர்பான அச்சங்களை மட்டுப்படுத்தும் முயற்சியில், செளதி அரேபியா தனது ஆசிய வாடிக்கையாளர்களின்  அக்டோபர் மாதத்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது.  நிலைமையை சமாளிப்பதற்காக, அராம்கோ தனது செயல்பாட்டில் இல்லாத கடல் எண்ணெய் வயல்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளை ஒருபுறம் மேற்கொண்டுள்ளது. மறுபுறம்,   உற்பத்தியில்  குறைவு  ஏற்பட்டாலும், தனது  விநியோக  ஒப்பந்தங்களைத்  தொடரப்போவதாக, சவுதி அரேபியா இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்வதில்  இரண்டாவது இடத்தில் செளதி  அரேபியா  இருந்தாலும், அண்மைத் தாக்குதல்களால், எண்ணெய்க்கான  மாற்று  ஆதாரங்களைத்  தேடும் முனைப்பில் ரஷ்யா, இரான் உள்ளிட்ட பிற நாடுகளை அணுகுகிறது இந்தியா. ஒருபுறம்,  அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றம் அதிகரிப்பது இந்தியாவுக்கு சாதகமானதல்ல. மறுபுறம், உயரும் எண்ணெய் விலை உலகப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவையிரண்டுமே இந்தியாவுக்குக் கவலை அளிக்கக் கூடியவையாகும்.

வளைகுடா பிராந்தியத்தில் இந்தியர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களின்  பாதுகாப்பும் இந்தியாவிற்கு முக்கியமானது. எனவே, அனைத்துத் தரப்பினரும் இவ்விஷயத்தைக்  கவனமாகக்  கையாள்வதோடு, மேலும் நெருக்கடி அதிகரிப்பதைத் தவிர்க்க ஆவன  வேண்டும்.

Pin It