அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான உச்சிமாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியத் தலைவர் திரு கிம் ஜோங் உன் அச்சுறுத்தல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள உச்சிமாநாட்டை ரத்து செய்யப் போவதாக வடகொரியத் தலைவர் திரு கிம் ஜோங் உன் அச்சுறுத்தி இருக்கிறார். அமெரிக்கா, தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி காரணமாக வடகொரியத் தலைவர் இவ்வாறு கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதே காரணத்திற்காக, வடகொரியா, தென்கொரியாவுடன் இன்று நடத்துவதாக இருந்த உயர்நிலைப் பேச்சுக்களை ரத்து செய்துள்ளது. மேக்ஸ் தண்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு ராணுவப் பயிற்சி, ஆத்திரமூட்டும் செயல் என்றும், படையெடுப்புக்கு ஒத்திகை என்றும் வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சி கே சி என் ஏ தெரிவித்துள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் சென்ற வெள்ளிக்கிழமை முதல் பி 52 குண்டுவீச்சு விமானங்கள், எஃப் 15கே ஜெட்டுகள் உள்ளிட்ட  100 போர் விமானங்களும் பங்கேற்கின்றன. எனினும், அடுத்தமாதம் நடைபெறுவதாக உள்ள அதிபர் டிரம்ப், வடகொரியத் தலைவர் திரு கிம் ஜோங் உன் உச்சிமாநாடு தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

Pin It