அமெரிக்க நிதியமைப்புக் குழு, பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார நிதி வழங்க, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முன்மொழிவு.

அமெரிக்க நாடாளுமன்றத்தில், பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார நிதி வழங்க, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று நிதியமைப்புக் குழு முன்மொழிந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக, அளவுகோள்களை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கவனிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான நிதியமைப்புக் குழு மசோதாவை நிறைவேற்றுகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளடக்கிய, அமெரிக்காவின் செயலுத்தி இலக்குகளை இப்பிரந்தியத்தில் எட்டுவதற்கு பாகிஸ்தான் அளித்து வரும் பங்களிப்பில் உள்ள அர்ப்பணிப்பு குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

ஹக்கானி குழு, குவெட்டா ஷுரா தாலிபான், லஷ்கர் ஏ தொய்பா, ஜெயிஷ் ஏ முகம்மது, அல் கொய்தா போன்ற உள்நாட்டு, அயல்நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக, பாகிஸ்தான் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்க வேண்டியுள்ளது. இதில், பயங்கரவாத அமைப்புக்களுக்குப் புகலிடமும் ஆதரவும் அளிப்பது நிறுத்தப்படுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை அண்டை நாடுகளில் நிகழ்த்துவதைத் தடுப்பதும் அடங்கும்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாட்டுத் துருப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான், ஆதரவு அளிக்கவில்லை என்றும், பாகிஸ்தானின் ராணுவ உளவு அமைப்புக்கள், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை என்றும் அவர் சான்றிதழ் வழங்க வேண்டும்.

Pin It