அமைதியை நாடும் இந்தியா, இறையாண்மையைப் பாதுகாக்கத் தயார்நிலையில் உள்ளது – மத்திய பாதுகாப்பு அமைச்சர்.

கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கமளித்தார். இந்தோ-சீனா எல்லை சீரமைப்புகள் ஒப்பந்தங்களால் உறுதிப்படுத்தப்பட்ட, நன்கு நிறுவப்பட்ட புவியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாக இந்தியா நம்புகிறது என்றும், வரலாற்றுப் பயன்பாடு மற்றும் நடைமுறை ஆகியவை இரு தரப்பினராலும் பல நூற்றாண்டுகளாக நன்கு அறியப்பட்டவை  என்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை முறையாகப் பிரிக்கப்படவில்லை என்பது சீனாவின் நிலைப்பாடு.

எல்லை பிரச்சனை சிக்கலானது என்றும், அதற்கான தீர்வுக்குப் பொறுமை தேவை என்றும் முறையாக ஒப்புக் கொண்ட இந்தியாவும் சீனாவும், அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைத் தேடுவதற்கு உறுதி பூண்டுள்ளன. இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவது ஒரு அத்தியாவசிய அடிப்படையாகும் என்பதையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பல்வேறு உடன்படிக்கைகளின் கீழ், இரு தரப்பினரும் எல்லைக் கோட்டில் அமைதியைப் பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில்தான், இருநாடுகளுக்குமிடையேயான ஒட்டுமொத்த உறவுகளும் 1988 முதல் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டன. எல்லை பிரச்சனையைத் தீர்ப்பதற்கான விவாதங்களுடன் கூடவே, இணையாக, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளர முடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

கிழக்கு லடாக்கை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில், ஏப்ரல் மாதம் முதலே, சீனத் தரப்பில் துருப்புக்களும், ஆயுதங்களும் குவிக்கப்படுவதை இந்தியா கவனித்ததாக பாதுகாப்பு அமைச்சர் சபைக்குத் தெரிவித்தார். மே மாதத் தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியத் துருப்புக்களின் சாதாரண, பாரம்பரிய ரோந்துகளுக்குச் சீனா தடங்கல் ஏற்படுத்தியது. இதன் விளைவாக அங்கு நேருக்கு நேர்  மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின் விதிகளின்படி, இந்த நிலைமை தரைத் தளபதிகளால் கவனிக்கப்படுகையில், மே மாதத்தின் நடுப்பகுதியில், சீனா, மேற்குப் பகுதிகளில் எல்லைக் கோட்டை மீறுவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கொங்கா லா, கோக்ரா மற்றும் பங்கோங் ஏரியின் வடக்குக் கரை ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டன. இந்திய ஆயுதப்படை இதற்கு சரியான பதிலடி கொடுத்தது.

சீனா, ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பதாக இராஜதந்திர மற்றும் இராணுவ சேனல்கள் மூலம் இந்தியா சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சீனாவுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.  இந்த சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்தபோது, பொறுப்புடன் செயல்பட்ட இந்திய ஆயுதப்படை, பொறுமையைக் கையாண்ட அதேசமயம், இறையாண்மைக் காக்க வேண்டிய தருணத்தில் வீரத்துடன் செயல்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் முழங்கினார்.

“எல்லைகளைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதியை யாரும் சந்தேகிக்கக்கூடாது. அண்டை நாடுகளுடனான அமைதியான உறவுகளுக்குப் பரஸ்பர மரியாதையும் புரிந்துணர்வும் அடிப்படை என்று இந்தியா நம்புகிறது. தற்போதைய நிலைமையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா விரும்புகிறது” என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். சீனாவுடனான கலந்துரையாடல்களில் தனது அணுகுமுறையை நிர்ணயிக்கும் மூன்று முக்கியக் கொள்கைகளை இந்தியா பராமரித்தது. இரு தரப்பினரும் எல்லைக் கோட்டைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும், கடைபிடிக்க வேண்டும்; இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சிக்கக்கூடாது; இரு தரப்பினருக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் முழுமையாகப் பின்பற்றப்பட  வேண்டும் என்பதே இந்தியாவின் அந்த மூன்று முக்கியக் கொள்கைகளாகும்..

சீனாவின் நடவடிக்கைகள், பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களை அப்பட்டமாக சீனா புறக்கணிப்பதைப் பிரதிபலிக்கின்றன. சீனாவால் துருப்புக்கள் குவிக்கப்படுவது முந்தைய ஒப்பந்தங்களுக்கு எதிரானது. கட்டுப்பாட்டுக் கோட்டை மதிப்பதும், கண்டிப்புடன் கடைபிடிப்பதும் எல்லைப் பகுதிகளில் அமைதிக்கான அடிப்படையாகும் என்பது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களில் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகள் அதனைக் கடுமையாகக் கடைப்பிடிப்பது போல், சீனா கடைப்பிடிக்கத் தவறிவிட்டது.

எல்லைப் பகுதிகளில் தற்போதைய பிரச்சினைகளை அமைதியான உரையாடல் மற்றும் ஆலோசனைகள் மூலம் தீர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நோக்கத்தைத் தொடரவே அவர் மாஸ்கோவில் சீனப் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து அவருடன் ஆழ்ந்த கலந்துரையாடல்களை நடத்தினார். சீனத் தரப்பின் நடவடிக்கைகள் தொடர்பான இந்தியாவின் கவலைகள், சீன ராணுவம் ஏராளமான துருப்புக்களைக் குவித்தல், அவர்களின் ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளை மீறுதல், நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சித்தல் ஆகியவை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்திய வெளியுறவு அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை மாஸ்கோவில் சந்தித்தார்.

இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர். இது சீனாவால் உண்மையாக செயல்படுத்தப்பட்டால், அது எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கு  வழிவகுக்கும்.

இந்திய ஆயுதப்படைகளின் மனவுறுதியும், தன்னம்பிக்கையும் மிக அதிகமாக உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் சபைக்கு உறுதியளித்தார். பிரதமரின் நம்பிக்கையூட்டும் வருகை, முழு தேசமும் தங்களுக்குப் பின்னால் நிற்கிறது என்பதைத் தளபதிகளும் வீரர்களும் புரிந்துகொள்வதை உறுதி செய்துள்ளது. உயரமான பகுதியில், விரோதமான சூழலில் தாய்நாட்டு எல்லையைப் பாதுகாத்து வரும் ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக, நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி.குருமூர்த்தி.)

Pin It