ஆஃப்கன் அமைதி செயல்முறை குறித்த மாநாடு

 

ஆஃப்கன்- பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்.

ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறை தொடர்பான ஒரு வார மெய்நிகர் சர்வதேச மாநாட்டிற்கு ஆஃப்கன் அரசு ஏற்பாடு செய்துள்ளது.  நாட்டில் அமைதியை மீட்பதற்கான நடவடிக்கையாக அதிபர் மாளிகை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.  சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் மெய்நிகர் மேடையில் பங்கேற்கிறார்கள்.  இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் மற்றும்  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐநா சபை  ஆகிய சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள்  இதில் பங்கேற்கின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹனீஃப் அத்மர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வன்முறையைக் கட்டுப்படுத்துதல்,  தாலிபான் கைதிகளின் விடுதலை, உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனும் சர்வதேச அமைப்புகளுடன் ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தும்

நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவும் போரை முடிவுக்கு கொண்டு வரவும் அரசு உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதில் உறுதியாக இருப்பதாக கூறினாலும்,  இதில்  நடைமுறைச் சிக்கல்களும் தடைகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாண்டு பிப்ரவரியில் கையெழுத்தான தாலிபான் –  அமெரிக்கா  ஒப்பந்தத்தின் படி  5000 கைதிகளில் 597 கைதிகளை விடுதலை செய்ய ஆப்கன் அரசு மறுப்பது, இதற்கு முக்கியமான ஒரு காரணமாகும்.    இதுவரை 4015 தாலிபான் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்  இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறும் ஆஃப்கன் அரசு, 597 கைதிகள் மிகவும் கொடூரமான குற்றங்களைப் புரிந்துள்ளதால்,  அவர்களை விடுவிக்க  மறுத்து வருகிறது.  முதல் முறையாக, வரும் வாரங்களில்,  தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கன் அரசு தயாராகும் நிலையில்,  தினந்தோறும்  ஆப்கன் பொதுமக்களையும் பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து வன்முறை,  குண்டுவீச்சு, கொலைச் சம்பவங்கள் நடத்தப் படுகின்றன

2020 பிப்ரவரி 29 அன்று தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும் இந்தக் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே ஏற்படும் மோதல் போக்கால் அமைதி என்பது  எட்டாக்கனியாகவே உள்ளது. மார்ச் 10ஆம் தேதி தொடங்கப்பட இருந்த இந்த உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகளும் நிறைவேறாமலே இருந்து வருகிறது. கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் இக்கட்டான சூழலில், அதிபர் கனிக்கும் அவரது போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவிற்கும்  இடையேயான அதிகாரப் போட்டி, தொடர்ந்து வரும்  வன்முறை இவையெல்லாம் அமைதிக்கான பாதையை இன்னும் நீட்டுகிறது.  இரு தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு, சமமான அமைச்சரவைப் பொறுப்புகளுடன் கனி அவர்கள் அதிபராகவும் அப்துல்லா அப்துல்லா  தலிபான்களுடனான  பேச்சு வார்த்தைக்கு  தலைமை வகிப்பதும் சிறந்த தீர்வாக இருக்கலாம். உள்நாட்டுப் பேச்சு வார்த்தைகளைத் திட்டமிட்ட படி துவக்கும் வகையில், இந்த இரு தலைவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதைத் தான் உலகத் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் ஆதாயம் பெறும் ஒரே தரப்பு தாலிபான் தரப்பாகும்.  உலக நாடுகளும் தாலிபான்களுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதை  வெகுவாக வரவேற்கும் பின்னணியில், தாலிபான்கள் ஆஃப்கன் அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாகிவருகின்றனர். அமெரிக்காவால் இதற்கு முன்னர் மதிக்கப்படாத தாலிபான்களுடன் இப்போது ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு அமெரிக்காவும் இறங்கி வந்துள்ளது. மேலும் தீவிரவாதத் தாலிபான் தலைவர்கள் உலகின் மற்ற குழுக்களுடன் கூட்டணி அமைத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை குலைக்க முயல்வதாக ஐ நா அறிக்கை ஒன்று கூறுகிறது. ஹக்காணி பயங்கர அமைப்பு,  கோரசான் ஐ எஸ்-உடன்  கூட்டணி அமைத்து, மார்ச்சில் நடந்த காபூல் குருத்வாரா தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்தியதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

ஆப்கனிஸ்தான் நிகழ்வுகளை இந்தியா கவனமாக கண்காணித்து வருவதுடன் மிகவும்  எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருகிறது.  அவசரத்தில் முடிவு செய்யப்படும் எந்த ஒப்பந்தத்திற்கும் ஆதரவு அளிக்காத  இந்தியா இந்த முதல்கட்ட ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்துள்ளது.  அஷ்ரஃப் கனி அவர்களின் அரசுக்கும்  இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்ள ஜனநாயக அரசியல் அமைப்புகளை தாலிபான் மதிக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.  இந்த கோவிட் 19 பெருந்தொற்றுக் ட் காலத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்குத் தொடர்ந்து மருத்துவ மற்றும் உணவுப்பொருள் உதவிகளையும்  வழங்கியுள்ளது குறிப்பபிடத்தக்கது.

 

Pin It