ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் சீன முதலீடுகள் : கவலையளிக்கும் தாக்கங்கள்

 

ஆசிய கண்டத்தில் வளர்ந்து வரும் இரு பெரும் சக்திகளான சீனா மற்றும் இந்தியா ஆப்பிரிக்க கண்டத்திற்கு ஒன்றும் புதிய  நாடுகள் அல்ல.  இரு நாடுகளுமே ஆப்பிரிக்க நாடுகளுடன் நீண்ட கால வரலாற்று, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை உடைய நாடுகள் ஆகும்; சமீப காலமாக ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் இரு நாடுகளின் ஆளுமையும் இருப்பும் பெருமளவில் வளர்ந்து வருகின்றது.   வர்த்தக சூழ்நிலையானது ஆப்பிரிக்க கண்டத்தில், மேம்பட்டு வரும் காலகட்டத்தில் இந்தியாவும் சீனாவும் ஆப்பிரிக்காவுடனான தங்களது ஈடுபாடுகளை புதுப்பித்திருக்கின்றன;  ஆப்பிரிக்காவை வர்த்தக சந்தையாக காணும் போக்கு அதிகரித்திருக்கிறது.

கடந்த சில வருடங்களாக சீன ஆப்பிரிக்க உறவுகளானது ஆப்பிரிக்காவின்   உள் கட்டுமான திட்டங்களில் சீனா செய்துவரும் பெருமளவிலான தீவிர முதலீடுகளையே கவனத்தில் கொண்டதாக இருந்து வருகிறது.  இந்த முதலீடுகள் ஆப்ரிக்க நாடுகளில் மிக கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தகூடும்.  பிஆர் ஐ எனப்படும் சாலை முன்முயற்சி திட்டத்தின் கீழ் சீனா புராதன பட்டு சாலை எனப்படும் சில்க் ரோடிற்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப்பிக்கவும்,  நிலம் மற்றும் கடல் வழியாக     ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான தொடர்புகளை உருவாக்கவும் விழைகிறது.  சீன அரசு, எக்சிம் வங்கி மற்றும் அதன் நிறுவனங்கள் ஏறத்தாழ 143 பில்லியன் அமெரிக்க டாலர்களை 2000 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கு இடையே ஆப்பிரிக்காவுக்கு கடனாக தந்திருக்கின்றன என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சீன ஆப்ரிக்க ஆய்வு மையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.   சீனா தனது மூலோபாய பாதிப்புகளை வெகுவாக குறைப்பதற்காகவே தனது வர்த்தக மற்றும் எரிசக்தி வழிகளை பன்முகப்படுத்த விழைகிறது என்றே  சீனாவின் இந்த பிஆர் ஐ திட்டத்தின் பெரும்பான்மையான செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.  மேலும் இந்த முன்முயற்சியின் மூலம் கிழக்கு ஆப்ரிக்க வட்டாரத்திலுள்ள கடல்வழி நாடுகளில் தனது வர்த்தகம் மற்றும் உள் கட்டுமான முதலீடுகளை விரிவுபடுத்தி அதன் மூலம் அன்னாடுகளில் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க சீனா முயல்கிறது என்றும் இத்திட்ட செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.  புதிய கடல் வழி தொடர்புகளை உருவாக்கி அதன் மூலம் உலகெங்கிலும் சீன துறைமுகங்களின் தொடர்பும் அணுகலும் பெருக வழி வகுப்பதே இந்த முயற்சிகளின் மையக்கருவாகும்.

 இந்த அடிப்படையில்,  சீன நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குவோரின் கடன் உதவி மூலமாக  துறைமுகங்கள், குழாய் இணைப்புகள், ரெயில்வே வழித்தடங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை திட்டமிடப்பட்டு கட்டி முடிக்கபட்டு கடல் வழி பட்டு சாலையின் மத்திய முனையாக கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் விளங்கும். தனது பி ஆர் ஐ மற்றும் கடல் வழி பட்டு சாலை திட்டத்தின் மிக முக்கிய முன்னிலை நாடாக சீனா கென்யாவை அடையாளம் கண்டுள்ளது. எனவே கென்யாவிலிருந்து தெற்கு சூடானுக்கான ரெயில்வே வழித்தடங்களை நவீனபடுத்தவும்,  குழாய்கள் அமைக்கவும்,  லாமு துறைமுகத்தை கட்டுவதற்கும் அதன் உள்துறை கட்டுமானங்களுக்காவும் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை அங்கு முதலீடு செய்துள்ளது.  இத்துடன்,  கிழக்கு ஆப்பிரிக்காவில் இரண்டு மிக முக்கிய பி ஆர் ஐ திட்டங்களில் சீன நிறுவனங்கள் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டிருக்கின்றன.  மொம்பாஸாவை நைரோபியுடன் இணைக்கும் ரெயில்வே வழித்தடம் ஒன்று, அடிஸ் அபாபாவிலிருந்து ட்ஜிபோடிக்கு மின்சார ரெயில் வழித்தடம் ஆகியவை ஆகும்.  ஆழ்கடல் துறைமுக பகுதியில்   சீனா அமைத்திருக்கும் முதல் வெளி நாட்டு கடற்படை தளமாகும் இது.  

சீனாவின் பி ஆர் ஐ முன்முயற்சி திட்ட ஒத்துழைப்போடு, தங்களது நாடுகளில் தரமான உள் கட்டுமானங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா உத்தரவாதம் அளித்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் மேலும் மேலும் ஆழமாக கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.  மேலும் கொவிட் 19 பெருந்தொற்று வேறு சஹாரன் ஆப்ரிக்காவை 2020 ஆம் ஆண்டில் மைனஸ் 5.1 சதவிகித வளர்ச்சி விகிதத்தில் பாதாளத்தில் தள்ளியுள்ளது.

 கடன் வழங்குதல், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில்  சீனாவிடம் வெளிப்படை தன்மை இல்லாமையானது மற்றொரு கவலையளிக்கும் விஷயமாக வேகமாக வளர்ந்து வருகிறது.   கடன் கொடுத்து வளைக்கும் கடன் பொறி ராஜதந்திரம் குறித்து கல்வியாளர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் நடத்தி வரும் விவாதங்களும் இத்துடன் இணைந்து கொள்கின்றன.  உதாரணத்திற்கு  இலங்கையும் பாகிஸ்தானும் சீன கடன் பொறியில் விழுந்து விட்ட காரணத்தால்,  அவர்களது முக்கிய மூலோபாய சொத்துக்களான ஹம்பன்டோட்டா, க்வாடர் துறைமுகங்களை சீனாவுக்கு வலுக்கட்டாயமாக வழங்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.  இந்த நிகழ்வுகளானது ஆப்ரிக்க நாடுகளிடையே எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.  ஆப்ரிக்க நாடுகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் கருத்து படி,  சீனா கடனை திரும்ப பெறுவது குறித்து கவலையே படுவதில்லை-  அது ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலிவான நீடித்த மற்றும் தாங்கமுடியாத கடன்களைக் கொடுத்து  அதன் மூலம் அவர்களது லாபகரமான தேசிய சொத்துக்களை பிணையாக பெறுவதில்தான் கவனம் கொண்டுள்ளது. பொருளாதார உதவிக்கு பதிலாக ஸாம்பியாவின் தாமிர சுரங்கங்களை பிணையாக சீனா கேட்டிருப்பதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறியிருப்பதானது சீன ஆப்ரிக்க உறவுகள் அமைதியாக பளபளப்பாக ஜொலிப்பது போல் மேலோட்டமாக  காட்சி அளிக்கிறதே தவிர அடி ஆழத்தில் அமைதி இல்லை என்பதையே வலுப்படுத்தியுள்ளது.

 மற்றொரு பக்கம், இந்தியா தனது வெளியுறவு கொள்கைகளில் ஆப்பிரிக்க ப்ராந்தியத்தை முதல் முன்னுரிமை அளிக்கவேண்டிய பகுதி என அறிவித்துள்ளது.  இராணுவ உதவி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உதவிகள் அளிப்பது போன்றவற்றின் மூலம் இந்தியாவானது இந்திய பெருங்கடல் அருகிலுள்ள கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை அணுகுகிறது.  2014ஆம் ஆண்டிலிருந்து ஆப்ரிக்க நாடுகளுடனான பல இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புகளை இந்தியா மேம்படுத்தியும் புதுப்பித்துமுள்ளது. சீஷெல்ஸ், மொரிஷியஸ் போன்ற சிறு தீவு நாடுகளுடனான ஒத்துழைப்பையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.  ஹிந்தியில் மோசம் என்றழைக்கப்படும் பருவகாலம் மற்றும் ஆசிய ஆப்ரிக்க வளர்ச்சி தாழ்வாரம் எனப்படும் இரு திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது.  இந்த இரு திட்டங்களும் ஆப்ரிக்க நாடுகளுடான இந்தியாவின் உறவுகளையும் வர்த்தக தொடர்புகளையும் வலுப்படுத்தும்  நோக்கத்துடனான திட்டங்களாகும்.

இந்தியா மீது மிகப்பெரும் நல்லெண்ணமும் நல்லிணக்கமும் ஆப்பிரிக்கா கொண்டிருக்கிறது.  மேலும் வலுவான வெளியுறவு கொள்கை முடிவுகளை முன்னெடுத்து செல்வதற்கான காலம் வந்து விட்டது;  இந்த ப்ராந்தியத்தில் ராஜதந்திர ரீதியாக இந்தியா முன்னெடுத்து செயல்படவேண்டிய தருணமிது.  சர்வதேச அரங்கில் மிக முக்கியமான உலக நாடாக இந்தியா எழும்புவதற்கு ஆப்பிரிக்கா மிக மிக அவசியம்.

மும்பை பல்கலைகழகத்தின் ஆப்ரிக்க ஆய்வுகள் மைய,  பேராசிரியர் அபராஜிதா பிஸ்வாஸ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

Pin It