ஆப்பிரிக்க நாடுகளுடனான நட்புறவை நாடும் இந்தியா.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாகப் பதவியேற்றவுடனேயே, வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அவர்கள் நைஜீரியாவுக்கு மூன்றுநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது, ஆப்பிரிக்க நாடுகளுடனான நட்புறவை இந்தியா நாடுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. முரளீதரன் அவர்கள், நைஜீரியாவில் ஜனநாயக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதோடு, அந்நாட்டு அதிபர் முகம்மது புஹாரி, துணை அதிபர் யேமி ஓசின்பாஜோ ஆகியோரையும், தென் ஆப்பிரிக்கா, நைஜர், எதியோபியா மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து கொண்டாட்டங்களில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோரையும் சந்தித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள விரிவான, நெருக்கமான உறவைப் பிரதிபலிப்பதாக, வெளியுறவுத்துறை இணையமைச்சரின் ஆப்பிரிக்கப் பயணம் அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு, இந்தியா-நைஜீரியா இடையிலான உறவுகள் செயலுத்திக் கூட்டாளித்துவ நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்குமிடையில் வலுவான பாதுகாப்புக் கூட்டுறவு ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவில் வசிக்கும் நைஜீரியா, இந்தியாவுடன் அதிக வர்த்தகம் புரியும் ஆப்பிரிக்க நாடாகவும் விளங்குகிறது. 2017-18 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 1,176 கோடி டாலர் என்ற அளவை எட்டியது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் உலகநாடுகளுள் ஐந்தாவது இடத்தையும், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இரண்டாவது இடத்தையும் நைஜீரியா பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த எரியாற்றல் தேவைகளில் 12 சதத்தைப் பூர்த்தி செய்யும் நைஜீரியா, இந்தியாவின் எரியாற்றல் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான நாடாகக் கருதப்படுகிறது. 2016-17 ஆம் ஆண்டில், 765 கோடி டாலர் அளவிற்கு இந்தியா மேற்கொண்ட இறக்குமதியில், பெட்ரோலியப் பொருட்களின் பங்கு மட்டுமே 746 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. முரளீதரன் அவர்களின் பயணத்தைத் தொடர்ந்து, அடுத்த மாதம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது, செயலுத்தி ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் தனது உறவுகளை விரிவுபடுத்த இந்தியா கணிசமான அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை ஊக்குவிக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. 2014 – 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இருதரப்பிலிருந்தும் 25 உயர்மட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து, இது தெளிவாகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை முன்னெடுத்துச் செல்ல முனைப்பு காட்டி வருகிறது. நடப்பாண்டின் இறுதியில் புதுதில்லியில் நடைபெறவுள்ள, அடுத்த இந்தியா – ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டில் 40 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஆட்சியில், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர், பலமுறை இரண்டு டஜன் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த இந்தியா – ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டில் 41 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆப்பிரிக்க நாடுகள் பெருமளவில் உதவிகரமாக விளங்கும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த இந்தியா – ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டின்போது, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு சலுகை வட்டியில் 1000 கோடி டாலர் அளவிற்குக் கடன் வழங்கவும், 60 கோடி டாலர் அளவிற்கு உதவித்தொகை அளிக்கவும் முன்வந்தது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, இதுவரை, இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் 5,400 கோடி டாலர் அளவில் முதலீடு செய்துள்ளன. தற்போது ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 6,200 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட, 21 சதம் அதிகமாகும். இந்தியாவிற்கான ஆப்பிரிக்க ஏற்றுமதியும் வளர்ச்சி அடைந்து வருகிறது. வேளாண்மை, உள்கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்து, சுத்தமான எரியாற்றல், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில், இந்தியா இதுவரை, 1,100 கோடி டாலர் மதிப்புள்ள 152 கடன் வசதிகளை 44 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கியுள்ளது. தவிர, 2018-2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ஆப்பிரிக்கக் கண்ட்த்தில் 18 புதிய தூதரகங்களை இந்தியா அமைக்கும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

நீலப் பொருளாதாரத்தை நீடித்த நிலையில் முன்னெடுத்துச் செல்ல, ஆப்பிரிக்கக் கரையோர நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் குழு, இந்தியா, பிரேஸில் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இப்சா குழு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளுடன் பல்நிலை கூட்டுறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. தவிர, ஐ.நா.பாதுகாப்புச் சபை உறுப்பினர் அந்தஸ்து, பருவநிலை குறித்த பேச்சுவார்த்தைகள், உலக வர்த்தக அமைப்பின் கீழ் பேரங்கள் ஆகியவற்றில் பரஸ்பர நலன்களை இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் நாடுகின்றன.  கடல்சார் கூட்டுறவின் மொத்த சாத்தியக்கூறுகளையும் நிறைவேற்றும் பணியில் இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஈடுபடும் தருணம் இது என்று, இருதரப்பிலிருந்தும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

Pin It