மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பாலமாக விளங்குபவர் ஆளுநர் – குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பாலமாக ஆளுநர் விளங்குவதாகக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் மாநில ஆளுநர்களின் இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், மாநில ஆளுநர்களின் கொள்கைகளை மக்கள் எளிமையாகக் கடைபிடிக்கும் அளவுக்கு ஆளுநர்கள் பங்காற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். 2022 ஆம் ஆண்டு புதிய இந்தியா என்ற கண்ணோட்டத்தில் ஆளுநர்கள் செயல்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். ஊழலற்ற, வறுமை இல்லாத, எழுத்தறிவின்மை இல்லாத, தூய்மையான அரசை உருவாக்குவதற்கு ஆளுநர்கள் உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பொறுப்புணர்ந்து செயல்படுவதுடன், வெளிப்படையாகவும் எளிமையாகவும் மக்கள் பணியாற்ற ஆளுநர்கள் முன்வர வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கைய்யா நாயுடு, பிரதமர் திரு நரேந்திரமோதி, உள் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். 27 ஆளுநர்களும் மூன்று துணை நிலை ஆளுநர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நிதி ஆயோக்கின் பார்வையில் புதிய இந்தியா – என்ற தலைப்பில் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மாநிலங்களில் உயர்கல்வி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு போன்றவை தொடர்பான கலந்தாலோசனை இம்மாநாட்டின் போது நடைபெறுகிறது.

 

Pin It