இக்கட்டான சூழலில் உழலும் ஈராக்.

(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கடந்த இருவாரங்களாக, ஈராக் இளைஞர்கள், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் தலையீடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டம், நஜஃப், கர்பாலா, பஸ்ரா, பாக்தாத் உள்ளிட்ட பெருநகரங்களில், ஒத்துழையாமை இயக்கமாக உருமாறியுள்ளது. பாதுகாப்புப் படை மற்றும் ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படைக்கு விசுவாசமாக உள்ள பிரபல களப்படை ஆகியோர், போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று, பிரதமர் அடெல் அப்துல் மஹிதி அவர்கள் ராஜினாமா செய்தார். ஷியா பிரிவு மதத் தலைவர் அயதொல்லாஅலி அல் சிஸ்தானி அவர்கள், ஈராக் நாடாளுமன்றத்தில் பிரதம்ரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப்ப் பெறுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் சற்றும் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், பாக்தாதிலுள்ள தஹிரீர் சதுக்கத்துக்கு மாறியுள்ளது.

ஈராக் இளைஞர்கள் மத்தியில், பொருளாதார நெருக்கடியும், ஊழலும் அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. 2003 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஈராக்கில் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், பிரிவினைப் பூசல்களும் உள்நாட்டுப் போரும் தொடர்கதையாக இருந்து வருகின்றன. வழக்கமான தேர்தல்கள் நடைபெற்று அரசுகள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து வந்த நிலையிலும், அரசியல் ஸ்திரத்தன்மை ஈராக்கில் எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. சர்வதேச எண்ணெய் சந்தையில், பெரும் ஏற்றுமதி நாடாக ஈராக் மீண்டும் தன்னை நிலைநாட்டிக் கொண்ட போதிலும், பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை. இதற்கு, மோசமான நிதி மேலாண்மையும், அரசியல்வாதிகளின் ஊழலுமே முக்கிய காரணங்கள் என மக்கள் கருதுகின்றனர்.

அரேபிய எழுச்சியைத் தொடர்ந்து உருவான கொந்தளிப்புக்களால் ஈராக் மேலும் சிக்கலில் வீழ்ந்துள்ளது. 2013-14 இல் தலைதூக்கிய ஐஎஸ்ஐஎஸ், ஈராக்கை அழிவின் விளிம்புக்கே எடுத்துச் சென்றது. ஈராக்கின் பெரும் பகுதியை ஆக்கிரமித்த இந்த பயங்கரவாத அமைப்பு, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கலீஃபா நிறுவப்பட்டதாக அறிவித்துக் கொண்டது. மொசூல் நகரம் வீழ்ந்ததோ, 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐஎஸ்ஐஎஸ் முறியடிக்கப்பட்டதோ, மக்களின் கஷ்டங்களுக்குத் தீர்வுகாணும் வழியை உருவாக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், ஈராக்கில் அரசியல்வாதிகளின் ஊழல், வேலையில்லாத் திண்ட்டடாட்டம், பிரிவினை வாதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும்  பெரும்பான்மை கிடைக்காததால், அரசு அமைவது தாமதம் அடைந்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியில் அமர்வதற்கு 5 மாதங்கள் பிடித்தது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமாரகப் பதவியேற்ற அடெல் அப்துல் மஹிதி அவர்கள், மக்களிடையே நம்பிக்கையைப் பெற இயலவில்லை.

இதுதவிர, ஈராக்கின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுவது அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியது. 2003 ஆம் ஆண்டில் சதாம் உசைன் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் வலுவான அரசியல் மற்றும் ராணுவப் பிரவேசங்கள் மூலம் ஈரான் தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. ஈரான் புரட்சிப் படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட ஷியா போராளிகள், பிஎம்எஃப் எனப்படும் பிரபல களப் படையை உருவாக்கியதோடு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முறியடிப்பதில்  பெரும்பங்கு வகித்தனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமனரத் தேர்தலுக்குப் பிறகு, ஈராக்கில் அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, ஈரானின் தலையீடே காரணமாகக் கருதப்படுகிறது.

ஈராக்கில் அமெரிக்காவும், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க முற்பட்டுள்ளன. ஈராக்கில் முறையான அரசு நிர்வாகம் அமைவதில், அமெரிக்கா மற்றும் ஈரானின் தலையீடு தடைக்கல்லாகப் பார்க்கப்படுவதால், போராளிகளின் கோபம் அந்நாடுகளின்பால் திரும்பியுள்ளது.

எண்ணெய் வளம் அபிரிமிதமாகக் கொண்டுள்ள ஈராக், உலகில் பெருமளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, ஈராக் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், 2,230 கோடி டாலர் மதிப்பிலான எண்ணெயை ஈராக்கிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி அளவில் 13 சதமாகும். ஈராக்கின் உள்நாட்டு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சர்வதேச நிலைமையைக் கருத்தில் கொண்டு, பலநாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொண்டு, அமைதியான முறையில் போராட்டங்களை ஈராக் அரசு நிர்வாகம் கையாள முடியாததால், நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. தற்போது திசை தெரியாமல் தடுமாறும் ஈராக், தனது எதிர்காலம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஈராக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, ஏற்கனவே இறுக்கத்தில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. நாட்டு மக்களின் குறைகளைக் களைந்து, மீண்டும் நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட, ஈராக் அரசு ஆவன செய்யும் என இந்தியா நம்புகிறது.

 

 

Pin It