இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் அச்சாரமாக விளங்கும் வியட்நாம்.

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

வியட்நாம் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் டாங்க தாய் நோக் தின் அவர்கள், இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கய்ய நாயுடு அவர்களுடன், பிரதிநிதிக் குழு அளவிலான பேச்சுவார்த்தைக்காக அண்மையில் இந்தியா வந்திருந்தார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கும் இந்தியாவின் இந்தோ-பசிபிக் செயலுத்திக்கும் வியட்நாம் ஒரு முக்கிய அச்சாரமாக இருந்து வருகிறது. தென் கிழக்காசிய நாடுகளுடன் விரிவான பொருளாதார மற்றும் செயலுத்தித் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான CLMV குறித்த இந்தியாவின் அணுகுமுறைக்கு முக்கியக் கருவியாக வியட்நாம் விளங்குகிறது.

இந்தியா-வியட்நாம் விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவது வியட்நாம் குடியரசு துணைத் தலைவரின் இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தியா – வியட்நாம் இடையேயான  நேரடி விமானச் சேவை குறித்த அறிவிப்பு, குடியரசுத் துணைத் தலைவரின் விஜயத்தின் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது. மேலும், வியட்நாமின் குரல் என்ற அமைப்பிற்கு, ஒரு அலுவலகத்தை தில்லியில் திறப்பது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தானது. தனது பயணத்தின் போது வியட்நாம் குடியரசுத் துணைத் தலைவர் புத்த கயாவிற்கும் சென்றிருந்தார்.

2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வியட்நாம்  சென்ற போது, இரு தரப்பு உறவுகள் விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதன் நோக்கம் விதிமுறைகளின் அடிப்படையிலான பிராந்திய ஒழுங்குமுறையை  ஆதரிப்பதாகும். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை குறித்து வியட்நாம் தொடர்ந்து ஒரு நேர்மறை கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. மேலும், பிராந்திய விவகாரங்களில் இந்தியாவின் வலுவான பங்களிப்பை வரவேற்கிறது. ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக மையம், ஆசிய – ஐரோப்பியக் கூட்டம் போன்ற சர்வதேச மன்றங்களிலும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம், கிழக்காசிய உச்சி மாநாடு, மெகாங்க் – கங்கா ஒத்துழைப்பு அமைப்பு  ஆகிய பிராந்திய மன்றங்களிலும் ஒத்துழைப்பு, உயர் மட்டப் பயணங்கள், சேவைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, கடற்படைக் கப்பல்களின் பயணங்கள், பயிற்சி மற்றும் திறன் உருவாக்கம், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல், தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம்,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு, 50 கோடி டாலர் பாதுகாப்புக் கடனுதவியையும் இந்தியா வியட்நாமுக்கு வழங்கியுள்ளது.  பாதுகாப்புத் தளவாடக் கொள்முதலாக, கடல் தாண்டிய உயர் வேக கண்காணிப்புப் படகுகள் வாங்கும் ஒப்பந்தம், இந்தியாவின் லார்சன் அண்ட் டூப்ரோ  நிறுவனத்துக்கும், வியட்நாமின் எல்லைப் பாதுக்காப்புப் படையினருக்கும் இடையே  கையெழுத்தாகியுள்ளது.  நா ட்ராங்க் –ல் உள்ள தொலைத் தொடர்புகள் பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்கா அமைக்க 50 லட்சம் டாலர் உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இரு நாட்டுக்கிடையேயான குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும், வியட்நாமின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், இந்தியாவின்  மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கும் இடையே  ஒரு இணையப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு தவிர, பொருளாதார ஒத்துழைப்பும் இரு தரப்பு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தூணாக உள்ளது. வியட்நாமின் முதல் பத்து  வர்த்தகக் கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஆசியான் நாடுகளில், சிங்கப்பூரை அடுத்து இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் வியட்நாம் திகழ்கிறது. ஜவுளி மற்றும் ஆடைகள்,மருந்துப்பொருட்கள், விவசாயப் பொருட்கள், தோல் மற்றும் காலணி, பொறியியல் ஆகிய ஐந்து துறைகளும் சிறப்புக் கவனம் பெறுகின்றன.

தென் கிழக்காசிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாம் இந்தியாவிற்குப் பல வாய்ப்புக்களை வழங்குகிறது. எரியாற்றல், தாதுப் பொருட்கள், வேளாண் பதனிடல், சர்க்கரை உற்பத்தி, வேளாண் வேதியியல் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரி பாகங்கள் ஆகிய துறைகளில் வியட்நாமில் இந்தியா முதலீடுகளைச் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்தியாவின் முதலீடுகளை வியட்நாம் வரவேற்றுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC –ன் அயல்நாட்டுக்கிளையான  ஓ என் ஜி சி விதேஷ், வியட்நாமில்  செயல்பாட்டில் உள்ள ப்ளாக் 6.1, ஃபூ கானில்  கடல்கரைப் பகுதியில் உள்ள ப்ளாக் 128 துரப்பண மையம் உட்பட பல ஹைட்ரோகார்பன் ஆய்வு மையங்களில் ஈடுபட்டுவருகிறது. ஓ என் ஜி சி  தவிர, டாடா பவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜிம்பெக்ஸ், ஜே கே டயர்ஸ், க்ளென்மார்க் ஃபார்மசூட்டிகல்ஸ்  போன்ற நிறுவனங்களும் வியட்நாமில் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்திய-வியட்நாம் செயலுத்திக் கூட்டாளித்துவத்தின்  வேர்கள் வரலாற்றில் ஊன்றியுள்ளன. 1954-ல் டியன் பியன் ஃபூ(Dien Bien Phu) வில் ஃப்ரெஞ்சுப் படைகளை எதிர்த்து வியட்நாம் பெற்ற வெற்றியையடுத்து, வியட்நாம் சென்ற தலைவர்களுள் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். இதைத் தொடர்ந்து அதிபர் ஹோ சீ மின் 1958-ல் இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து, 1959-ல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களும் வியட்நாம் பயணம் மேற்கொன்டார். அன்று தொட்டு, உயர் மட்டப் பயணங்கள் தொடர்ந்து வந்துள்ளன. இவை இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் இதயமாக விளங்கும் வியட்நாமுடன், இருதரப்பு விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். வரலாற்றுத் தாக்கங்கள், பொதுவான பிராந்திய  மற்றும் சர்வதேச நோக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இருதரப்பு உறவுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

Pin It