இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணய நிதியம் பாராட்டு.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கடந்த ஐந்தாண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. இதனால், உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை, உலக முதலீடுகளில் பின்னடைவுக்கான ஆபத்து, வர்த்தகத் தற்காப்பு, பிரெக்ஸிட் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற நிலை ஆகியவற்றுக்கிடையே, இந்தியா அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி, மேலும் சிறப்புப் பெறுகிறது. அண்மையில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டியுள்ள ஐ எம் எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2019-20 ஆம் ஆண்டு, 7.3 சதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்தியாவின் இப்பொருளாதார வளர்ச்சி சாத்தியமாவதற்கு, இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களே காரணம் என்று ஐ எம் எஃப் கூறியுள்ளது. பொருளாதாரத்தில் இத்தகைய வளர்ச்சியை எட்டிய போதிலும், இந்தியா, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்ததோடு, நிதிப் பற்றாக்குறையை, பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட எல்லைக்குள்ளாகவே நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, நாட்டிற்குள்ளும் வெளியேயும், வர்த்தக, பொருளாதார வட்டாரங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்த நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ஏற்படுத்திய, நேர்மறையான, மாறுதல்களை உண்டாக்கிய தாக்கங்கள் ஐ எம் எஃப் இன் கவனத்தை ஈர்ர்த்துள்ளன. ‘ஒரு தேசம், ஒரு சந்தை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டமைப்பின் சிறந்த உதாரணமாகவும், இந்த உலகில் எந்த நாடுமே இதுவரை கண்டிராத வகையிலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை விளங்குகிறது. தவிர, இந்தியா அறிமுகம் செய்த நொடிப்பு மற்றும் திவால் குறியீடு, நிறுவனங்களின் நொடிப்பு பிரச்சனைகளுக்கு ஒரே மேடையில் தீர்வளிக்கும் அமைப்பாக விளங்குகிறது. இது தொழில் நடத்துவதை எளிதாக்கியுள்ளது.

துறை ரீதியாக, ஒற்றைச்சாளர முறையில் இறக்குமதிக்கான, கொள்முதலுக்கான அனுமதிகள் அறிமுகம் செய்யப்பட்டது, தொழில் சூழலை எளிமையாக்கியதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் பெருகியது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் அசுரகதியில் நிகழ்ந்துள்ளது. கொள்முதல், அதற்கான பணம் செலுத்தல் ஆகியவை டிஜிட்டல் வழியாக நிகழ மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டது. தவிர, முக்கியமாக, அரசின் சமூகநல உதவிகளும் டிஜிட்டல் மூலம் நிகழ்ந்துள்ளது. இதனால், மோசடிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டதை ஐ எம் எஃப்பாராட்டியுள்ளது. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களையும், வலுவான அடிப்படைகளையும் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச பொருளாதார அமைப்புக்களும் பாராட்டியுள்ளன. உலக வங்கியின், ‘தொழில் புரிவதில் எளிமை’ குறியீடுகளின் தரவரிசையில், 2016 ஆம் ஆண்டில் 130 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, சாதனையாக, 53 இடங்கள் முன்னேறி, 77 ஆம் இடத்தை 2108 ஆம் ஆண்டில் எட்டியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி கொண்டாடத்தக்க வகையில் இருந்தாலும், உலகப் பொருளாதாரத்தில் காணப்படும் மந்தநிலை காரணமாக, இந்தியப் பொருளாதாரமும் பாதிப்படையும் அபாயம் இருப்பது குறித்து ஐ எம் எஃப் எச்சரித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பல பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் குறைந்துள்ளதால், இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நிம்மதி, அடுத்த சில ஆண்டுகளில் குறையக்கூடும். பொதுக்கடன்களைக் குறைத்து, நிதிய ஒருங்கிணைப்புக்களை மேலும் வலுவாக்குமாறு, இந்தியாவை ஐ எம் எஃப் வலியுறுத்தியுள்ளது. தொழில் சூழலை ஊக்குவிக்க, வங்கி மற்றும் தொழிலாளர் துறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ எம் எஃப் குறிப்பிட்டுக் குறியுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் வெகுவாகக் குறைப்பட வேண்டும் என்றும், குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் ஐ எம் எஃப் கூறியுள்ளது. இலக்குகளற்ற மானியங்கள் குறைக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும், ஜிஎஸ்டி உள்ளிட்ட வருவாய்த்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும் ஐ எம் எஃப்  வலியுறுத்தியுள்ளது.

தொழில் புரிவதில் தடங்கல்களை ஏற்படுத்தும் பயனற்ற பழங்கால சட்டங்களை அகற்றி, பொருளாதார சீர்திருத்தங்களை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதில் அரசு அதிக முனைப்பு காட்டுவது குறிப்பிடத்தக்கது. முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் அரசு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறும் இந்தியா, உலகப் பொருளாதாரத்தை இயக்கும் சக்கரமாக விளங்கும் என்றால் அது மிகையல்ல.

 

Pin It