இந்தியாவின் ஸ்மார்ட் நகரங்கள் மேம்பாட்டில் ஸ்வீடன் ஆர்வம்.

இந்தியாவின் ஸ்மார்ட் நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஸ்வீடன் ஆர்வம் காட்டியுள்ளது. பசுமைப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நிலையான மேம்பாடுகளில், தனது அதிநவீன தொழில்நுட்பத்தை அளிக்க, ஒரு பொதுவான திட்டத்தை ஸ்வீடன் முன்வைத்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆன் லிண்டே அவர்கள், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்களை வியாழனன்று சந்தித்து இது குறித்து விவாதித்தார். 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறையாக்க, ஸ்வீடனுக்கு, இந்தியாவின் ஸ்மார்ட் நகரத் திட்டம் கை கொடுக்கும் என அவர் தெரிவித்தார். ஸ்மார்ட் நகரங்களின் இன்றியமையாத அம்சங்களான கழிவு மேலாண்மை, நகர்ப்புறப் போக்குவரத்து, ஸ்மார்ட் பார்க்கிங் வசதி, காற்று வடிகட்டுதல், உடனுக்குடனான தகவல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்களில் ஸ்வீடன், உலகிலேயே தலைசிறந்து விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

Pin It