இந்தியாவைத் தூய்மைப்படுத்தவும் – அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள்.

இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி 15 நாட்கள் நடைபெறவிருக்கும் “ஸ்வச்சா ஹி சேவா” என்ற தூய்மையே பெரும் சேவை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி, இந்தியாவைத் தூய்மைப்படுத்துமாறு, தனது அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவைத் தூய்மைப் படுத்துவோம் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி 15 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி, நாடுமுழுவதும், சுத்தமும், சுகாதாரமும் அனைத்து மக்களின் பொறுப்பு என்ற விழிப்புணர்வை உண்டாக்க நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, பாட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில், நாட்டின் தலைசிறந்த வீர்ர்களைக் குடிசைப் பகுதிகளைத் தத்தெடுத்து, சுத்தம் செய்ய ஊக்குவிக்கும் உத்தேசம் உள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் வகையில், மக்களிடையே, பேரார்வத்தைத் தூண்டி, பொது இடங்கள், சுற்றுலாத் தலங்கள், சந்தைகள், சிலைகள், மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுமாறு, பிரதமர் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில், அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்தபின் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலர் பரமேஸ்வரன் ஐயர் அவர்கள், விரிவான பதிவை வழங்கினார். அப்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, புதிதாக வழங்கப்படவுள்ள பாஸ்போர்ட்டில், ஸ்வச் பாரத் திட்டத்தின் செய்தியை வெளிப்படுத்த, இலச்சினையைப் பொறிக்க பரிந்துரைக்கப்பட்டது. தவிர, ஏழை மக்களிடையே, சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் நூதனத் திட்டங்கள் வகுக்குமாறு அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

Pin It