இந்தியா – ஃபிலிப்பைன்ஸ் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தளவாடங்கள், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலுக்கும் ஃபிலிப்பைன்ஸின் அயல்நாட்டுச் சேவை நிறுவனத்துக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மேம்பாடு ஆகியவை உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் ஃபிலிப்பைன்ஸுக்கும் இடையே கையெழுத்தாயின. பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோதி அவர்களுக்கும் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யுடெர்ட் அவர்களுக்கும் இடையே நடந்த இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பும் ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாத ஒழிப்பில் மேம்பட்ட கூட்டுறவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகத்தில் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் இருக்கை ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்  உரையாற்றிய  திரு மோதி, உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உயர்த்த தமது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகளாவிய முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்றும்  பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் கூறினார். இந்திய இளைஞர்கள் வேலை செய்பவர்களாக இருந்த நிலை மாறி, தற்போது வேலை அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.     90 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஏற்க இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு அனுமதி பெறும் நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  அரசு நிர்வாகம் வர்த்தகம் மற்றும் தொழில் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய நவீன தொழில்நுட்பம் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய திரு நரேந்திரமோதி, இதில் மேலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே பிரதமர் மோதி, அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் அவர்களுடன் இரு தர்ப்புப் பேச்சு வார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பம், வளைகுடா பகுதி, மத்திய கிழக்கு நாடுகள், மியான்மர் ரோஹிங்கியர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பயங்கரவாதம் மற்றும் அதனுடனான தொடர்புகள் பரவி வருவது குறித்த பிரச்சனைகளையும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ஆஃப்கானிஸ்தான் பிரச்சனை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். ஆஃப்கானிஸ்தானுக்குக் கடல் மார்க்கமாக இந்திய கோதுமையை அனுப்பி வைத்தது, ஆஃப்கானிஸ்தானில் பாசனம், பயிற்சி, வீட்டு வசதித் தேவைகளை உறுதி செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாடு, ஆஃப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சனை போன்றவை குறித்துப் பிரதமர் மோதி அதிபருக்கு எடுத்துரைத்தார். அதிபர் டிரம்ப்புடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

Pin It