இந்தியா- ஜமைக்கா உறவுகளில் புதிய உற்சாகம்

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி. குருமூர்த்தி)

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் காமினா ஜான்சன் ஸ்மித் அவர்களின் இந்தியப் பயணம் இரு தரப்பு உறவுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. இப்பயணத்தின் விளைவாக இரு தரப்பு வர்த்தக உறவுகளில் உத்வேகம் அதிகரிக்கும். ஜமைக்காவின் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். அவரது இப்பயணம், இரு நாடுகளுக்குமிடையேயான ஐந்தாவது வெளியுறவு அலுவலக நிலை கலந்தாலோசனை நிகழும் தருணத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு ஆண்டுகளில் வெளியுறவு இணையமைச்சர் ஜெனரல் வி.கே சிங் இரு முறை ஜமைக்காவுக்குப் பயணித்துள்ளார். இது இந்திய – ஜமைக்க உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாகவுள்ளது.

ஸ்மித் அவர்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களைச் சந்தித்தார். இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்த பலதரப்பட்ட விஷயங்கள் தவிர, பிராந்திய மற்றும் பல தரப்பு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் உள்ள பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர். வர்த்தகம், முதலீடுகள், சுகாதாரம், சுகாதாரச் சுற்றுலா, திறன் வளர்ப்பு, வேளாண்மை, கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர். அண்மையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜமைக்காவிற்கு 1.5 லட்சம் டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்களும் பிற பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு உதவ 2 லட்சம் டாலர் அளவில் பங்களிப்பும் அளித்து உதவியதற்காக, ஸ்மித் அவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்மித் அவர்கள் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு கே.ஜே. அல்போன்ஸ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து, இரு நாடுகளும் சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பது குறித்துப் பேசினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில் ஐக்கிய சபையினருடன் (FICCI)  அவர் அளவளாவினார். தகவல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை  மும்பையில் அவர் சந்தித்தார்.

இந்தியாவுக்கும் ஜமைக்காவுக்கும் இடையிலான புவியியல் சார்ந்த தூரம் மற்றும் சிறிய அளவிலான ஜமைக்காவின் பொருளாதாரம் ஆகிய காரணிகள், இரு தரப்புப் பொருளாதார, வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குச் சில நிர்ப்பந்தங்களை உண்டாக்குகின்றன. எனினும், கரீபிய நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பது அதிகரித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இந்தியா, ஜமைக்காவுக்கு 75 லட்சம் டாலர் அளவில் தண்ணீர் பம்புகளை இறக்குமதி செய்யக் கடன் உதவி அளித்தது. ஜமைக்காவில் தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பத் துறையில், திறன் வளர்ப்புத் திட்டத்தை இந்தியா 2009 ஆம் ஆண்டு துவக்கியது. ஜமைக்காவில், 2004 ஆம் ஆண்டில் இவான் என்ற சூறாவளித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில், 2 லட்சம் டாலர் அளவில் மருந்துப் பொருட்களை இந்திய அரசு வழங்கியது. ஜமைக்காவில் உள்ள சபைனா பார்க்கில் ஒளி வெள்ளக் கட்டமைப்பை நிறுவ 21 லட்சம் டாலர் நிதியுதவி அளிப்பதைக் குறித்து இந்தியாவுக்கும் ஜமைக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் கையெழுத்தாயிற்று.

இந்தியாவுக்கு ஜமைக்காவுக்கும் இடையே, வர்த்தகம், சமீப காலமாக அதிகரித்திருந்தாலும் அது கணிசமான அளவில் இல்லை. 2016-17 நிதியாண்டில், இந்தியா ஜமைக்காவுக்கு 4.34 கோடி டாலர் அளவில் ஏற்றுமதியும் 11.7 லட்சம் டாலர் அளவில் இறக்குமதியும் செய்துள்ளது. நிகழாண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 1.12 கோடி டாலர் அளவிலும் இறக்குமதி, 29.2 லட்சம் டாலர் என்ற அளவிலும் இருந்தது.

இந்தியா, ஜமைக்காவுக்கு மருந்துப் பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள், தாது எரிபொருள், தாது எண்ணெய், ஜவுளி, பருத்தி, தொழிலக எந்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், விலையுயர்ந்த மற்றும் அரை விலையுயர்ந்த கற்கள், செயற்கை ஆபரணங்கள் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜமைக்காவிலிருந்து பானங்கள், கரிம வேதிப் பொருட்கள், எஃகுக் கழிவுகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்கிறது.

நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக்கும் கரீபியன் நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வந்துள்ளது. ஜமைக்கா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ, கயானா, சுரிநாம் போன்ற  நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டின் மீதான பரஸ்பர அபிமானம், கரீபியன் தீவு நாடுகளை இந்தியரிடையே அதிக அளவில் பிரபலமாக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற மூதாதையர்களின் வாரிசுகள் 70,000 பேருக்கு மேல் ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய கலாச்சாரங்களின் சங்கமமாகக் கருதப்படும் ஜமைக்காவில் வசிக்கின்றனர். இது,  ஜமைக்காவின் மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதமாகும். ஆண்டு தோறும் மே மாதம் பத்தாம் தேதி இந்திய பாரம்பரிய தினமாக ஜமைக்காவில் கொண்டாடப்படுகிறது. சுங்கத் தீர்வையற்ற வணிகத்தில் இந்தோ- ஜமைக்க சமுதாயத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள், ஆபரணங்கள், மின்னணுச் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் வணிகத்தில் அதிகம் பங்கு பெற்று வருகின்றனர்.

Pin It