இந்தியா – தென் கொரியா உறவுகள் – வருங்காலக் கூட்டுறவு குறித்த தொலைநோக்கு.

(கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

தென் கொரிய அதிபர் திரு மூன் ஜே இன், நான்கு நாள் அரசுமுறைப் பயணமான இந்தியா வந்தார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவின் கிழக்கை நோக்கிச் செயல்படும் கொள்கை மற்றும் தென் கொரியாவின் தெற்கத்திய நாடுகளுக்கான புதிய கொள்கை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அவர்களும், இந்தியா-தென் கொரியா இடையிலான ‘சிறப்புச் செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கு’ மேலும் ஊக்கமளித்துள்ளனர். ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘திறன் படைத்த இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’ உள்ளிட்ட இந்தியாவின் முதன்மைத் திட்டங்களுக்கு தென் கொரியா ஒரு மிக முக்கிய வளர்ச்சிக் கூட்டாளியாக விளங்குகிறது. 2015 ஆம் ஆண்டு மே மாதம், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் சியோலுக்குப் பயணம் மேற்கொண்டபோது, வளர்ச்சி உதவி மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கான சலுகைக் கடன் ஆகியவை மூலம், சுமார் 1000 கோடி டாலர் மதிப்பிலான உதவியை தென் கொரியா அளித்தது. கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கூட்டுறவு நிதி மற்றும் ஏற்றுமதிக் கடன் மூலம், இரு நாடுகளும் கட்டுமானப் பணிகளில் மேலும் முன்னேற்றங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகின்றன.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்குத் தென் கொரியாவின் உற்பத்தித் திறமை பெருமளவில் ஆதரவாக இருந்துள்ளது. தென் கொரிய அதிபர் மூனின் பயணத்தின் போது, 2020 ஆம் ஆண்டிற்குள், ஆண்டிற்கு சுமார் 12 கோடி கைப்பேசிகளைத் தயாரிக்கும் கூடுதல் திறன் படைத்த சாம்சங் உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, இங்கு தயாரிக்கப்படும் கைப்பேசிகள் சர்வதேச சந்தைக்கும் ஏற்றுமதி செய்யப்படும். முன்னதாக, 2017 ஆம் ஆண்டு, கியா மோட்டார்ஸ், ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு மிகப்பெரிய வாகன உற்பத்தித் தொழிற்சாலையைக் கட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கூடுதலாக, தென் கொரிய அதிபரின் பயணத்தின்போது, மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றில், வர்த்தகத் தீர்வுகளில் கவனம் செலுத்துதல், குறிப்பாக, இறக்குமதிக் குவிப்பைத் தவிர்க்கும் வரி மற்றும் மானியங்கள், நான்காம் தொழில்துறை புரட்சிக்கு வித்திடும் அதி நவீன தொழில்நுட்பங்களான இண்டர்னெட் ஆஃப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவுகள், முன்னேறிக் கொண்டிருக்கும் சமீபத்திய, புதிய தொலைத்தொடர்புச் சேவைகள், மலிவான நீர் சுத்திகரிப்பு, தொழில்நுட்பங்களுக்கான அறிவியல் ஆய்வுகள், திறன்படைத்த போக்குவரத்து அமைப்புகள், நகர்ப்புற கட்டமைப்புக்கான துறைகள், புதிய நிறுவனங்களுக்கான சூழல், திறன் வளர்ச்சிக்கானப் பயிற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரயில்வே துறையில் கூட்டு ஆய்வுகளுக்கான திட்டங்கள், அதி நவீன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைப்பதற்கான திட்டம், நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கிடையில் சர்வதேச அளவில் போட்டியிடும் திறனை வளர்த்தல் ஆகியவை அடங்கும்.

கப்பல் கட்டுமானப் பணிகள், செமிகண்டக்டர்கள், வாகனங்கள் மற்றும் அதன் பாகங்களின் தயாரிப்பு மற்றும் மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றில் தென் கொரியாவிற்கு உள்ள தனித்தன்மை, அங்கு, ஏற்றுமதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது. அதற்கான வளர்ந்து வரும் ஒரு சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் துறைகளுக்கும், தென் கொரியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கும் இடையில் உள்ள இணக்கம் அதிகரித்து வருகின்றது. கொரியாவின் இறக்குமது சந்தையில் இந்தியா நுழைய விரும்பினால், இந்தியா தன்னுடைய பொருட்களையும் சேவைகளையும் பல்வகைப்படுத்துவது மிக அவசியமாகும். முதன்மைப் பொருட்களுடன் அதி நவீன பொருட்களின் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 2017 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 2000 கோடி டாலராக இருந்தது. இந்தியாவிற்கான தென் கொரியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 680 கோடி டாலராக இருந்தது. இருதரப்பு வர்த்தகத்தை மேன்மையடையச் செய்ய, சி.ஈ.பி.ஏ எனப்படும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேம்படுத்தப்பட்ட சி.ஈ.பி.ஏ-வைப் பற்றிய ஒரு கூட்டறிக்கை கையெழுத்திடப்பட்டது. இறால், மெல்லுடலிகள், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக தாராளமயமாக்கலுக்கான முக்கிய அம்சங்கள் இதில் கண்டறியப்பட்டன. இந்தியா மற்றும் கொரியக் குடியரசின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் மன்றத்தின் மூலம், வாகனத்துறை, கட்டுமானம், சேவைப்பிரிவு, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் நிறுவனங்கள், குறு,சிறு, மத்திய நிறுவனங்கள், புதுமுறை காணலுக்கான சூழல் அமைப்பு, பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி ஆகியவை உட்பட, பல துறைகளில் ஆறு பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

‘சிறப்புச் செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு’ இன்னும் உந்துதல் அளிக்கும் வகையில், பாதுகாப்புத் துறை கூட்டுறவில் இன்னும் அதிகத் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். முன்னதாக, 2017 ஆம் ஆண்டு, பாதுகாப்புத் தொழில்துறைக்கானக் கூட்டுறவில் கப்பல் கட்டுமானத்திற்கான, அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு தரப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.

பிராந்திய அளவில், பகிரப்பட்ட உலக நன் மதிப்புகளான ஜனநாயக மாண்பு, தடையில்லா சந்தை சார்ந்த பொருளாதாரம், சட்டத்தின் ஆட்சி, அமைதியான, ஸ்திரமான, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் விதி சார்ந்த ஒழுங்கிற்கான பொது உறுதிப்பாடு ஆகிய தூண்களை இந்தியா-தென் கொரியா உறவுகள் அடித்தளமாகக் கொண்டுள்ளன. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவும் வகையில், இந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து, மூன்றாம் உலக நாடுகளில் முத்தரப்பு முன்னேற்றக் கூட்டுறவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவெடுத்துள்ளன. ஆஃப்கானிஸ்தானில் திறன் வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் இது துவங்கப்படும். மேலும், வட-கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கு இடையில் இருக்கும் ஆயுதப் பெருக்க இணைப்புகளைச் சுட்டிக்காட்டி, இந்தியாவும் தென் கொரியாவும், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பெருக்கத்தையும், அவை, குறிப்பாக, பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளின் கைகளில் செல்வதையும் தடுக்க, சேர்ந்து ஒத்துழைக்க உறுதி எடுத்துக்கொண்டன. கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுதமற்ற நிலையையும் நிலையான அமைதியையும் ஆதரிக்கும் வகையில், தென் மற்றும் வட கொரியா இடையிலான உச்சிமாநாடுகள் மற்றும் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கா – வட கொரியா உச்சிமாநாடு ஆகியவை உட்பட, அங்கு நடந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இந்தியா வரவேற்றுள்ளது. கடந்த காலத்தில் கொரியப் போரில், இந்தியா ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு, தற்போது கொரிய அமைதிக்கான செயல்முறையில் இந்தியா ஆற்றிவரும் ஒரு முக்கிய நலன் விரும்பிக்கான பங்கு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோதி அவர்களும், தென் கொரிய அதிபர் மூன் அவர்களும் செயலுத்திக் கூட்டாளித்துவத்தை இன்னும் ஆழப்படுத்த ஒப்புக்கொண்டனர். இந்தோ-பசிஃபிக் பகுதிகளில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலை நாட்டுவது இந்தக் கூட்டாளித்துவத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்கும்.

Pin It