இந்தியா – பிரான்ஸ் இடையிலான பன்முக உறவுமுறை

(செயலுத்தி ஆய்வாளர்  கௌதம் சென் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்)

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களின் முதல் இந்தியப் பயணம், இந்தியா – பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக செயலுத்தி மட்டத்தில், பெருமளவில் முன்னெடுத்துச் சென்றுள்ளது. உலகின் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரமாக, சுமார் 2,45,000 கோடி டாலர் என்ற அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு, அதிகப்படியான மனித வள மேம்பாட்டு சாத்தியக்கூறுகளைக் கொண்ட இந்தியாவை, ஒரு வளர்ந்து வரும் வல்லரசாக பிரான்ஸ் பார்க்கிறது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையில் இருக்கும் நட்புடன் கூடிய உறவுமுறை, பரஸ்பர மற்றும் செயலுத்தி விருப்பங்களுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை அளிக்கின்றது. 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் அமைதியான முதல் அணுச் சோதனையான போக்ரான்-I நடத்தப்பட்டபோது, அணுஆயுத தயாரிப்பிற்கான வாய்ப்புக்களைத் தக்க  வைத்துக் கொண்டு, தனது தொழில்நுட்ப வல்லமைகளை பரிசோதிப்பதற்கான இந்தியாவின் முடிவிற்கு, பிரான்ஸ் அதிபர் வெலெரி கிஸ்கார்ட் டி ஸ்டெய்ங் தலைமையிலான பிரன்சு அரசு மிகவும் ஆதரவாக இருந்தது. 1999 ஆம் ஆண்டு, போக்ரான்-II-விற்குப் பிறகு, பிரான்சிற்கும், மேற்கத்திய நாடுகளின் குழு மற்றும் அணு அயுத வல்லமை படைத்த நாடுகளுக்கும் இடையில், இது குறித்த நிலைப்பாட்டில் வேற்றுமைகள் தெரிய ஆரம்பித்தன. அந்நாடுகள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் குழுவில் இந்தியாவின் சேர்க்கையை எதிர்த்தனர். போக்ரான்-II-விற்குப் பிறகு, பிரான்ஸ், இந்தியா மீது எந்த விதத் தடைகளையும் விதிக்கவில்லை.

இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகள், பரந்த, பல துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. பிரான்சிலிருந்து அதி நவீன ஆயுதத் தளங்களையும், ராணுவத் தொழில் நுட்பங்களையும் இந்தியா பெறுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்கொள்ளை கட்டுப்பாடு மற்றும் ராணுவ ரோந்துப் பணிகள் மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளையும், அனுபவங்களையும், பொதுக் குறிக்கோள்கள் என்ற கட்டமைப்பிற்குள் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. சர்வதேச வணிகத்திற்கு ஏதுவாக, தடையில்லா செயலுத்தி கடல்வழிப் பாதைகளைப் பராமரிப்பது, ஆசியா-பசிபிக் பகுதிகளின் கரையோர நாடுகளுக்கான ராணுவ நிலை நிறுத்தங்களைக் கண்காணிப்பது போன்ற விஷயங்களில், இருநாடுகளும் பொதுவான குறிக்கோள்களைக் கொண்டுள்ளன. பரஸ்பர பொருளாதார உறவுகளும் வலுவாக உள்ளன. நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம், ஐ.நா சீர்திருத்தங்கள் போன்ற உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், இரு நாடுகளின் நிலைபாட்டிலும் பெரிய அளவிலான ஒற்றுமை உள்ளது.

பிரன்ஸ் அதிபர் மேக்ரானும் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், உயரிய செயலுத்தித் துவக்கத்தை நோக்கி இந்த உறவை எடுத்துச் சென்றுள்ளனர். ஆசியா-பசிபிக் பகுதியில், பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல்சார் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதற்கான தங்களது பொது குறிக்கோள்களை வெளிப்படுத்தியுள்ளன. இருவரும் தங்களது ராணுவத் தளவாடங்களுக்கான வசதிகளைப் பகிர்ந்துள்ளதோடு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியையும் எடுத்துள்ளன. பிரான்சின் காலனியத்துவ வரலாற்றின் காரணமாக, பயங்கரவாத ஒழிப்பு, தன் ஆர்வ எல்லைக்குள் இருப்பதாக பாரிஸ் கருதுகிறது.

36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிலிருந்து வாங்குவது மற்றும் ஈடுசெய்யும் விதிகளின் கீழ், பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் நாக்பூரிலுள்ள இந்தியாவின் ரிலயன்ஸ் டிஃபென்ஸ் ஆகியவை, ரஃபேல் கூறுகள் மற்றும் துணை அமைப்புகள் ஆகியவற்றை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்த விமானங்களை மேலும் வாங்குவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. ‘பிராஜெக்ட்-75’ என்ற, எளிதில் கண்டறியப்பட முடியாத கப்பல்களின் உற்பத்தி பணித்திட்டம், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ‘ஸ்கார்பீன்’ நீர்மூழ்கிக் கப்பலின் துவக்கம், உள்நாட்டிலேயே செய்யப்பட்ட இடைமறிப்புக் கருவி தேஜசிற்கு, மாற்றுப் போர் விமான எஞ்சின்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ, பிரான்சு நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான ‘சேஃப்ரான்’-னிலிருந்து வாங்குவது தொடர்பான பல விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகமும், சுமார் 1000 கோடி யூரோ என்ற அளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதம் ஜூலை வரை, மொத்த வர்த்தகத்தின் அளவு 660 கோடி யூரோ என்ற அளவில் இருந்தது. அணுஆற்றல் செயல்முறைகளுக்கான சிவிலியன் பயன்பாடுகளில் தடையில்லா வர்த்தகத்தை அனுமதித்து, 2008 ஆம் ஆண்டு, அணுப்பொருள் விநியோகக் குழுமம் விலக்கு அளித்ததிலிருந்து, இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்கும் பொருட்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள மற்றும் எதிர்கால வாய்ப்புகளின் சாத்தியக்கூறுகளை பயன்படுத்திக்கொள்ள பிரான்ஸ் ஆர்வத்துடன் உள்ளது. அதே நேரம், இந்தியா தனது அணு ஆற்றல் சார்ந்த மின் உற்பத்தித் திறனை விரிவாக்கிக்கொள்ளும்.

அதிபர் மேக்ரானிற்கு முன் பதவியிலிருந்த ஃப்ராங்கோயிஸ் ஹோலாண்டும் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், ஐ.எஸ்.ஏ, அதாவது 121 நாடுகளைக் கொண்ட சர்வதேச சூரியசக்திக் கூட்டணி என்ற ஒப்பந்தம் சார்ந்த அமைப்பை உருவாக்கி, பருவநிலை மாற்றத்திற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார்கள். சுமார் 30 நாடுகள் ஐ.எஸ்.ஏ-விற்கு ஒப்புதல் அளித்துள்ளன. உலக வெப்பமயமாதலையும் ஓசோன் படலம் சேதமடைவதையும் தடுக்க, உலகை, நிலையான மின் உற்பத்தியின் மாற்றுச் சூழலை நோக்கி  அழைத்துச் செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோதி, அதிபர் மேக்ரான் உட்பட இன்னும் பல உலகத் தலைவர்கள் ஐ.எஸ்.ஏ-வின் துவக்க மாநாட்டில் கலந்துகொண்டனர். இது ஐ.எஸ்.ஏ என்ற முன்முயற்சிக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. சமமான அடிப்படையில், 1 லட்சம் கோடி டாலர் முதலீட்டின் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள், 1000 கிகாவாட் சூரிய ஆற்றலை உபயோகத்திற்குக் கொண்டு வருவதற்கான ஐ.எஸ்.ஏ-வின் இலக்கை அடைய, உலக நாடுகள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது கடுமையான சவால் என்ற போதிலும் அடையக்கூடியதுதான். உத்திரப் பிரதேசத்தின் மிர்சாபூரில், இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி ஆலையை, பிரான்ஸ் நாட்டு அதிபரும் இந்தியப் பிரதமரும் துவக்கி வைத்தனர்.

பயங்கரவாதிகளின் பாதுகாப்புப் புகலிடங்களையும் கட்டமைப்புகளையும் தகர்க்கவும், பயங்கரவாதக் குழுக்களையும் அவர்களது நிதி திரட்டும் வழிகளையும் முறியடிக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தவும் இணைந்து உழைக்குமாறு, இரு நாடுகளும் மற்ற அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டன. திரு. மேக்ரானும் திரு. மோதியும் இந்திய மற்றும் பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்பு நிறுவனங்களுக்கு இடையில், நடவடிக்கைகள் சார்ந்த கூட்டுறவை மேம்படுத்தவும், தீவிரவாத மனப்போக்கை, குறிப்பாக இணைய வழியாக பரவும் இந்த மனப்போக்கை எதிர்த்துப் போராட புதிய முயற்சிகளைத் துவக்கவும் ஒப்புக்கொண்டன. ஐ.நா-வின் பாதுகாப்புக் கௌன்சிலில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற, தன் ஆதரவை பிரான்ஸ் மற்றொரு முறை உறுதிபடுத்தியது. பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பரவல் தடை தொடர்பான குறிக்கோள்கள் மற்றும் கவலைகளில் இந்தியா மற்றும் பிரான்சின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது.

மொத்தத்தில், பிரான்ஸ் நாட்டு அதிபரின் பயணம், புது தில்லி மற்றும் பாரிஸ்இருநாடுகளுக்கும் இடையிலான செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Pin It