இந்திய, ஐக்கிய அரபு அமீரக உறவுகள் – புதிய உச்சத்தில்.

 (மேற்காசியாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை அளித்திருப்பது, இருநாட்டு உறவுகள் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஸயேத் அல் நஹ்யான் அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான சரித்திர, கலாச்சார மற்றும் அரசியல் பிணைப்புக்கள் புதிய உச்சத்தை அடையும் என்பதில் ஐயமில்லை.

பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள், 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, இவையனைத்தும் அரங்கேறியுள்ளன. இந்தியப் பிரதமர் ஒருவர், 34 ஆண்டுகளில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொண்ட பயணமாக, மோதி அவர்களின் இப்பயணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே, செயலுத்திக் கூட்டாளித்துவ சகாப்தம் துவங்கியது. இந்தியாவின் செயலுத்தி ரீதியிலான பெட்ரோலிய சேமிப்புத் திட்டத்தில் பங்கேற்ற முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

அமீரகத்தின் வெளியுறவு அமைச்சருடன், அந்நாட்டு உயர்மட்ட வர்த்தகக் குழுவும் இந்தியா வந்தது, இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதாரப் பிணைப்புக்களை சுட்டிக்காட்டுகின்றது. தற்போது, அமீரகத்தின் மூன்றாவது பெரும் வர்த்தகக் கூட்டாளி நாடாகவும், நான்காவது பெரும் எரியாற்றல் இறக்குமதி நாடாகவும் இந்தியா விளங்குகிறது. அமீரகத்தில் பெருமளவில், அதாவது 33 லட்சம் எண்ணிக்கையில், இந்திய வம்சாவளியினர் வசிப்பது நினைவு கூரத்தக்கது. அந்நாட்டின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினர் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் வெளியுறவு அமைச்சரின் மூன்றுநாள் இந்தியப் பயணத்தின்போது, அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்களைச் சந்தித்து, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, எரியாற்றல், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகிய இருதரப்பு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சிரியா, லெபனான் மற்றும் யேமனில் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தற்போதைய சர்வதேச அரசியல் மற்றும் செயலுத்தி நிலவரங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் பரிமாறிக் கொண்டனர். இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் நூலிழையாக ஓடும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து, இருநாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தின.

பயணத்தின் இறுதியில் பிரதமர் திரு நரேந்திர மோதியை அல் நஹ்யான் அவர்கள் சந்தித்தார். இருநாட்டு உறவுகளைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். அல் நஹ்யான் அவர்கள், முன்னதாக, 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயுத் துறை ஏற்பாடு செய்த கூட்டு செயல்மாநாட்டில் கலந்து கொல்ள இந்தியா வந்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோதியை சந்தித்தார். மேலும், அவர், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஸயேத் அல் நஹ்யான் அவர்களுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அண்மையில் சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் இந்திய, ஐக்கிய அரபு அமீரக உறவுகளுக்குச் சிகரம் வைத்தாற்போல், ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்குத் தலைமை வகித்த ஐக்கிய அரபு அமீரகம், இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 46 ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது.

அரபு உலகில், குறிப்பாக, வளைகுடா நாடுகளில், இந்தியாவின் துடிப்புமிக்க ஈடுபாடுகள் அதிகரித்து வருவதை, அமீரக வெளியுறவு அமைச்சரின் மூன்றுநாள் இந்தியப் பயணம் சுட்டிக்காட்டுகிறது. வருங்காலத்திலும் இது தொடரும் என்பதும், உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்பதும் திண்ணம். விரிவடைந்த அண்டைநாடுகளுக்கான திடமான கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா, அப்பகுதியில் பொருளாதார மற்றும் செயலுத்தி நலன்களை மேம்படுத்த சீரிய திட்டத்தை வகுத்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் முதலாவது ஆட்சிக் காலத்தின்போது, போடப்பட்ட உறுதியான அஸ்திவாரத்தின்மீது, மாற்றங்கள் ஏதுமின்றி நல்லுறவுகள் தொடரும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக, அமீரக வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

Pin It