இந்திய – சீன ராணுவத்தினரிடையே ஹாட்லைன் தொலைபேசி வசதி விரைவில் அறிமுகம் – ராணுவத் தளபதி பிபின் ராவத்.

எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைத் துரிதப்படுத்தவேண்டும் என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார்.  புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையப் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருவதாகவும் வரும் ஜூன் மாதத்திலிருந்து ஒரு லட்சத்து 86 ஆயிரம் குண்டு துளைக்காத ஆடைகளை ராணுவ வீரர்களுக்கு வழங்க உள்ளதாகவும் கூறினார்.

காஷ்மீரைப் பொறுத்தவரை தீவிரவாத நடவடிக்கைகள் முழுமையாக ஒடுங்கவில்லை என்றும், நடப்பாண்டில் வடக்கு காஷ்மீரில் தீவிரத் தேடுதல் வேட்டைகளை நடத்த ராணுவம் முடிவு செய்துள்ளதாகவும்  திரு ராவத் கூறினார்.           அமெரிக்கா பாகிஸ்தானிற்கு அழுத்தம் கொடுத்துள்ள விவகாரத்தில் பொறுத்திருந்து அதன் விளைவுகளைப் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.  சீனா சக்திவாய்ந்த நாடு என்றாலும், இந்தியாவும் வலுவான நாடு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியா, சீன ராணுவத்தினரிடையே விரைவில் நேரடித் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இருநாட்டு  ராணுவத் தளபதிகளும் இதில் உரையாடலாம் என்றும் அவர் கூறினார்.

Pin It