இந்திய, ஜப்பான் இருதரப்பு சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம்.

(மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

உலக நாடுகளிலேயே அதிக வேகத்தில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதன் பின்னணியில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே, 7500 கோடி டாலர் மதிப்பிலான இருதரப்பு சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

சீனாவுடன் 3000 கோடி டாலர் அளவிலான சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தை ஜப்பான் மேற்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டுச் சந்தை குறித்த நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்நிய முதலீட்டாளர்களிடையே, இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருக்கிடையே ஜப்பானில் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றபோது, சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், 7500 கோடி டாலர் மதிப்பு வரையிலான இந்திய ரூபாய் அல்லது ஜப்பானிய யென் நாணயப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையிலும், வட்டி உயர்வு காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு கூடிவரும் நிலையிலும், ஜப்பானுடனான இந்த சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் இந்தியாவுக்குப் பேருதவியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முந்தைய காலத்திலும் ஜப்பானுடன் சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தை குறைந்த அளவில் இந்தியா மேற்கொண்டுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான உறவு சமீபகாலமாக வலுப்பட்டு வருவதைத் தொடர்ந்து, சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தின் அளவு கூடி வருகிறது.

2013 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கிக்கும், பேங்க் ஆஃப் ஜப்பானுக்குமிடையே, 1500 முதல் 5000 கோடி டாலர் மதிப்பு வரையிலான சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படும்போதெல்லாம், வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா பெறமுடியும் என்றும், அதற்கான செலவினங்கள் இந்திய நிறுவனங்களுக்குக் குறையும் என்றும் இந்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட, சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் உதவும் என்று, 15 ஆவது நிதிக் கமிஷன் உறுப்பினரான ஷக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்தார்.

இறக்குமதிக்கான தொகை அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றினால், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பளுவைக் குறைத்து, இந்தியாவின் வெளிநாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் உதவும். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரும்.

இந்திய ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடான டாலர் தொகையை பேங்க் ஆஃப் ஜப்பான் இந்தியாவுக்கு அளிக்கும். அதேபோல், ஜப்பானிய யென் நாணயத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடான டலரை இந்திய ரிசர்வ் வங்கி ஜப்பானுக்கு அளிக்கும். இதன்மூலம், இருநாட்டு நாணயங்களிலும் ஸ்திரத்தன்மை ஏற்படும்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பலதரப்பட்ட நாணயங்களில் இருப்பு வைத்துள்ள நாடுகளுக்கு, சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் ஒரு சிறந்த பண மேலாண்மைக் கருவியாக உள்ளது. ஒரு நாணயத்தில் தாங்கள் பெற்றுள்ள நிதியைக் கொண்டு, மற்றொரு நாணயத்தில் தங்களுக்குள்ள பொறுப்புக்களை ஈடுகட்டவும், அந்நியச் செலாவணிச் சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்கவும் இந்த நாடுகளால்  முடியும்.

உலகப் பொருளாதாரம் பெருமளவில் சரிந்தால் இந்தியாவிடம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான நிதிக் கையிருப்பு இருக்காது என்ற அச்சத்தையும் போக்குவதற்கு இந்த சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தினால், அமெரிக்க டாலரின் தேவை குறையும். அமெரிக்க டாலரின் தேவை குறைந்து, சப்ளை அதிகமானால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.

2008 முதல், இத்தகைய சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே இத்தகைய சொந்த நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம் உளவியல்ரீதியாக, முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பதோடு, உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற தன்மையால் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வரும் இந்திய ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம், உணர்வுபூர்வமான ஊக்கத்தை அளிக்கும். இந்த ஒப்பந்தத்தினால், 39,350 டாலர் அளவில் இருக்கும் இந்திய அந்நியச் செலாவணிக் கையிருப்பில், மேலும் 7500 கோடி டாலர் கூடும்.

 

Pin It