இந்திய, நேபாள இருதரப்பு உறவுகள் ஆய்வு.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

புதுதில்லியில் நடைபெற்ற நான்காவது ரெய்ஸினா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி அவர்கள் கடந்த வாரம் புதுதில்லி வந்திருந்தார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இணைப்புக்கள், வேளாண்மை, நீர்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட பலதுறைகளில் இருநாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். பலதுறைகளிலும் இருநாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திருப்தி தெரிவித்த இருதலைவர்களும், அதே உத்வேகத்துடன் நெருக்கமான தங்கள் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் சென்று வலுவாக்க உறுதி பூண்டனர்.

நான்கு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக, பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் கடந்த மே மாதம் நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்ட போது, இருநாட்டுப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் இருநாடுகளுக்குமிடையிலான இணைப்புக்கள் அளிக்கும் பங்கு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. ரயில்வே, வேளாண்மை மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளில் மூன்று புதிய முன்னெடுப்புக்களை இருநாடுகளும் கடந்த ஆண்டு மேற்கொண்டன.

முற்றிலும் புதியதான நீர்வழிப் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களின் கீழ், நேபாளத்திலுள்ள கோஷி மற்றும் நாராயணி நதிகளின் வழியே கங்கை நதியினூடே சரக்குப் போக்குவரத்து நடைமுறைகள் குறித்த விரிவான ஆலோசனையை இருநாட்டு மூத்த அதிகாரிகளும் மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நேபாளப் பிரதமர் கே பி ஷர்மா ஓலி அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ’வர்த்தகம் மற்றும் வழித்தடம்’ பிரகடனத்தின் கீழ், நீர்வழிப்போக்குவரத்து இணைப்பு குறித்த புதிய முயற்சிகள் குறித்து ஆய்வு செய்வது என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் புதிய முயற்சியின் விளைவாக, கடல் மார்க்கத்துடன் நேபாளம் இணைக்கபட்டு, குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்து வெற்றிகரமாக நடைபெற வழி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர்.

இந்தியாவில் நேபாள எல்லையிலுள்ள ரக்ஸௌல் நகரையும், நேபாளத் தலைநகர் காட்மண்டுவையும் ரயில்வே மூலம் இணைப்பது குறித்த முதற்கட்ட சர்வே மேற்கொள்வது குறித்து, கடந்த ஆகஸ்டு மாதம் காட்மண்டுவில் நடந்த பீம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே, இந்தியாவுக்கும், நேபாளத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் நிதியுதவியுடன், இந்தப் புதிய மின்விசை ரயில்வே தடத்தை நிறுவ இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான முதற்கட்ட  சர்வே ஓராண்டுக்குள் முடிவடையும். இந்த ரயில்வே திட்டம் தவிர, இந்திய உதவியுடன் நேபாளத்தில் செயலாக்கப்பட்டு வரும் இதர ரயில்வே திட்டங்கள் குறித்தும் இருதலைவர்களும் ஆய்வு செய்தனர்.

மூன்றாவதாக, வேளாண் துறையில் முக்கிய முன்னெடுப்பை இருநாடுகளும் மேற்கொண்டுள்ளன. இருநாடுகளும் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன வேளாண் தொழிநுட்பப் பயிற்சிகள், நவீன விதைத் தொழில்நுட்பம், மண்வளப் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட பல வேளாண் பிரிவுகளில் ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேபாள வேளாண்மை, நில அபிவிருத்தி, கூட்டுறவுத் துறை அமைச்சர் சக்ரபாணி கனால் அவர்கள் கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்திய வேளாண்மை மற்றும் விவாசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் அவர்களை சந்தித்து, வேளாண் துறையில் புதிய கூட்டாளித்துவம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரெய்ஸினா பேச்சுவார்த்தைகளில் உரையாற்றிய நேபாள வெளியுறவு  அமைச்சர் கியாவாலி அவர்கள், இருநாட்டு வளமைக்கும், இணைப்புக்களுக்கும், மக்களுக்கிடையிலான தொடர்புகளுக்கும் இந்தியாவும் நேபாளமும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நேபாளத்தின் மிகப் பெரிய வர்த்தக்க் கூட்டாளி நாடாக இந்தியா விளங்குகிறது என்றும், இருநாடுகளுக்குமிடையே, புவியியல், சரித்திரம், சமயம், கலாச்சாரம் சார்ந்த இணைப்புக்கள் பலமாக உள்ளன என்பதையும் ரெய்ஸினா பேச்சுவார்த்தைகளில் பங்கு பெற்ற 90 உலக நாடுகளுக்கும் அவர் நினைவூட்டினார். இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், தனது அண்டை நாடுகளுடனான நவீன இணைப்புக்கள் மற்றும் முக்கியத்துவமிக்க கட்டமைப்புக்களை உருவாக்குவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

 

Pin It