(இலங்கை விவகார செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம், சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுக்கு வருமாறு, அதிபருக்கு இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை அவருக்கு அளித்தார். இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு விடுத்த அழைப்பை அதிபர் ஏற்றுக் கொண்டார். பதவியேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும் இது. இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதன் மூலம், இந்திய அரசு, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை விரைந்து வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா தவிர, அமெரிக்கா, பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவரது வெற்றியை எச்சரிக்கையுடன் அணுகும் ஐரோப்பிய யூனியன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர், நாட்டின் மனித உரிமையையைப் பாதுகாக்க எடுத்துள்ள உறுதிப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கோரியுள்ளது.