இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கைப் பயணம்.

(இலங்கை விவகார செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம், சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார்.  இந்தியாவுக்கு வருமாறு, அதிபருக்கு இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அழைப்பை அவருக்கு அளித்தார். இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு விடுத்த அழைப்பை அதிபர் ஏற்றுக் கொண்டார். பதவியேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும் இது. இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதன் மூலம், இந்திய அரசு, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை விரைந்து வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா தவிர, அமெரிக்கா, பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகளும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவரது வெற்றியை எச்சரிக்கையுடன் அணுகும் ஐரோப்பிய யூனியன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர், நாட்டின் மனித உரிமையையைப் பாதுகாக்க எடுத்துள்ள உறுதிப்பாட்டைப் பூர்த்தி செய்யக் கோரியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றியின் மூலம், இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியின் ஆதிக்கம், வருங்காலத்தில் இலங்கை நாடாளுன்மன்றத்திலும் வெளிப்படும். இலங்கையின் முன்னாள் அதிபரும், கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சகோதரருமான மஹிந்தா ராஜபக்ச, நாட்டின் பிரதமாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெறுமானால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா கொண்டுள்ள கவலைகளுக்குப் போதிய மதிப்பளிக்காததாகக் கருதப்படும் இலங்கை அரசுடன், இந்தியா பணிபுரிய வேண்டிய சூழல் நிலவும். தவிர, இலங்கை அரசு, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், உள்நாட்டு இன சமரசம் குறித்த இந்தியாவின் கவலைகளுக்கும் சரிவர மதிப்பளிக்காத அரசாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், கடந்த காலத்தில், நான்காவது ஈழப் போரின்போது, இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ச அவர்கள், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினார். இந்த வழிமுறை எல்டிடிஇ அமைப்பை வீழ்த்த உதவி புரிந்தது. இதனை வெற்றிகரமான வழிமுறையாகக் கருதும் இலங்கை அரசு, வருங்காலத்திலும் இதனைப் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த விழையும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எழும் வழக்கத்துக்கு மாறான சவால்களை எதிர்கொள்ள இத்தகைய வழிமுறை பயன்படும்.

எஸ்எல்பிபி (SLPP) எனப்படும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தக் கண்ணோட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி, பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும், சார்க் மற்றும் பீம்ஸ்டெக் அமைப்புக்களுடன் ஈடுபடவும் விரும்புகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமரசம் மற்றும் பொறுப்பேற்பு விஷயங்கள் குறித்து, ஐ.நா. வெளியிட்ட தீர்மானத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று, தேர்தலுக்கு முன்பு, SLPP தெளிவாகக் கூறியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஐ.நா.வில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. இந்த சிக்கலான விவகாரத்திற்குத் தகுந்த தீர்வை எட்ட இருநாடுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

புதிய இலங்கை அரசு, இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்கவும், துறைமுகக்  கட்டமைப்பிலும், கண்காணிப்பிலும் இந்தியாவின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும் என, இந்தியா எதிர்பார்க்கிறது. சீனாவின் வளையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் இலங்கை முக்கியக் கூட்டாளி நாடாக விளங்குகிறது. 2017 ஆம் ஆண்டு, சிறிசேனா அரசு, சீனாவுக்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விட்டதை எதிர்த்த SLPP கட்சி, தேர்தலில் வெற்றி பெற்றால் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என உறுதியளித்திருந்தது.

காலே, கங்கேசன்துறை, திரிகோணமலை துறைமுகங்கள் மற்றும் மட்டாலா, கடுநாயகே விமான நிலையங்கள் ஆகியவற்றின் மேம்பாடு உள்ளிட்ட, தேசிய, பொருளாதாரப் புத்துயிர் திட்டத்தை உருவாக்கவும், SLPP உறுதியளித்தது. இதனை செயல்படுத்துவதில், ஆசிய அண்டைநாடுகளின் உதவியை இலங்கை நாடும்., புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற, இந்தியாவுக்கு இது வாய்ப்புக்களை வழங்கும்.

கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கையில், இருதரப்பு விஷயங்களில் மேலும் முன்னேற்றம், பிஆர்ஐ திட்டத்தின்கீழ், தரம் வாய்ந்த திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல, இலங்கை அரசுடன் சீனா இணைந்து பணி புரியத் தயார் என்று, சீனா குறிப்பிட்டுள்ளது. எனவே, புதிய இலங்கை அரசு, சீனாவுடனான திட்டங்கள் குறித்து  முன்பு எடுத்த முடிவுகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம். சீனாவுடனான கடன் சுமை அதிகரித்த போதிலும், இலங்கையின்  முக்கிய வளர்ச்சி மற்றும் செலுத்திக் கூட்டாளியாக, இலங்கைக்கு சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பிஆர்ஐ திட்டத்தின் மீது இந்தியா ஆர்வம் காட்டவில்லை. மாறாக, சீனாவின் இத்திட்டத்தை இந்தியா, உண்மைநிலையை முன்னிறுத்தி, தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இலங்கைக் கூட்டணி அரசு எடுத்த கொள்கை முடிவுகளின் மேல் மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதை, இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் புதிய மாற்றங்களைக் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். புதிய இலங்கை அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து எழும், சவால்களையும், வாய்ப்புக்களையும் இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையின் புதிய அரசின் தலைமை எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்து இது அமையும். வரவிருக்கும் இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளின் எதிர்காலம், பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு ஆகியவை குறித்த தெளிவு பிறக்கும்.

 

Pin It