இஸ்ரேலிய குடியிருப்புக்கள் டிரம்ப் அவர்களால் சட்டபூர்வமானதாக அங்கீகரிப்பு.

(ஜேஎன்யூ பேராசிரியர் பி.ஆர். குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்கள், திடீரென, எதிர்பாராத விதமாக, இஸ்ரேல் குடியிருப்புக்கள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது உலகநாடுகளின் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பதோடு, 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதப் போர் முதல் இருந்து வந்த அமெரிக்காவின் இருகட்சிகளின் கொள்கையையும் புரட்டிப் போடுவதாக அமைந்தது. அமெரிக்காவின் கொள்கை நிலையானதாக இருக்கவில்லை என வாதாடிய மைக் பாம்பியோ அவர்கள், இஸ்ரேலிய சிவில் குடியிருப்புக்கள் சர்வதேச விதிகளுக்குட்பட்டே உள்ளன என்றும், வெஸ்ட் பேங்க் மற்றும் அங்குள்ள குடியிருப்புக்களின் நிலை குறித்து, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

1967 ஆம் ஆண்டு ஜூன் மாதப் போரைத் தொடர்ந்து, தான் கைப்பற்றிய இடங்களான சினாய் தீபகற்பம், கோலான் உச்சி, காஸா, வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தனது குடியிருப்புக்களை நிறுவியது. போருக்கு முந்தைய காலகட்டத்தில் ஜோர்டானுக்கு சொந்தமான பகுதியாக விளங்கிய கிழக்கு ஜெரூசலப் பகுதியைத் தனது ஆளுகைக்குள் இஸ்ரேல் எடுத்துக் கொண்டது. பின்னர், கோலான் உச்சியில் தனது முதல் குடியிருப்புக்களை நிறுவிய இஸ்ரேல், படிப்படியாக, பிற ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் குடியிருப்புக்களை  நிறுவத் தொடங்கியது.

தற்போது, வெஸ்ட் பேங்க் பகுதியில் 130 சட்டபூர்வமான குடியிருப்புக்களும், நூறு அங்கீகரிக்கப்படாத முகாம்களும் உள்ளன. அங்கு கிட்டத்தட்ட 4 லட்சம் இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர். ஜூன், 1967 இல் இருந்த எல்லையைத் தாண்டி, கிழக்கு ஜெரூசலம் பகுதியிலுள்ள 12 யூதர்களின் பகுதியில், சுமார் 2 லட்சம் இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர். கோலான் உச்சியிலுள்ள 32 பகுதிகளில், 22,000 இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர். இஸ்ரேல் குடியிருப்பு விவகாரம், அரேபிய அண்டை நாடுகளுடனான இஸ்ரேலின் அமைதி ஏற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எகிப்துடன் ஏற்பட்ட கேம்ப் டேவிட் உடன்படிக்கையின்படி, சினாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறியது. தவிர, 1982 ஆம் ஆண்டில், தனது யாமிட் குடியிருப்புக்கள இஸ்ரேல் தகர்த்தது. இதேபோன்று, 2005 ஆம் ஆண்டில், தன்னிச்சையாக, இஸ்ரேல், காஸா பகுதியிலுள்ள தனது 21 குடியிருப்புக்களிலிருந்து, 8000 இஸ்ரேலியர்களைத் திரும்பப் பெற்றது. செயலுத்தி ரீதியாக, முக்கியத்துவம் வாய்ந்த தனது ஹெர்மான் மலைப்பகுதியை இஸ்ரேல் விட்டுத்தர முன்வராத காரணத்தால், 1990 இறுதியில், இஸ்ரேல் –சிரியப் பேச்சுவார்த்தைகள் ஆட்டம் கண்டன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் குடியிருப்புக்களை விரிவுபடுத்துவதில் பெருவாரியான இஸ்ரேல் அரசியல் கட்சிகள் பங்கு கொண்டுள்ளன.  குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேலியர்களின் ஆதரவு, வலதுசாரி இஸ்ரேல் கட்சிகளுக்குச் சென்றது.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளுக்கு, குடியிருப்பு விவகாரம், முக்கிய தடைக்கல்லாக இருந்து வருகிறது. பாலஸ்தீனப் பகுதிகளைக் கையகப்படுத்தி, அங்கு வசிக்க வரும் இஸ்ரேலியர்களுக்காக பள்ளிகள், மருத்துவ மனைகள், சந்தைக் கடைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை இஸ்ரேல் செய்து வருகிறது என்பது பாலஸ்தீனத் தரப்பு வாதம். முன்னதாக, பாலஸ்தீனப் பகுதிகளக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் துவக்கபட்ட குடியிருப்புக்கள், தற்போது, படிப்படியாக, பாலஸ்தீனப் பகுதிகளுக்கு அருகாமையிலேயே வரத் துவங்கி விட்டன.            .

பாலஸ்தீனிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஒஸ்லோ செயல்முறை, இஸ்ரேலின் குடியிருப்பு நிர்மாணத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை. அமெரிக்க வெள்ளை மாளிகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் செய்யப்பட்டாலும், குடியிருப்புக்கள் மேலும் விரிவடைந்துள்ளன.   பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறும் அதே வேளையில், அதிகமான இடங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏற்பாட்டுள்ளது,  பாலஸ்தீனத்தின் பிராந்தியத் தொடர்ச்சியை உடைத்து விட்டது.

இஸ்ரேலின் குடியேற்றங்கள், நான்காவது ஜெனீவா உடன்படிக்கை மீறல், என்று சர்வதேச சமுதாயம் நீண்டகாலமாகக் கருதி வருகின்றது. இந்தக் குடியேற்றங்கள் சட்ட விரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் 2004 ஆம் வருடம் வெளியிடப்பட்ட தீர்ப்பில் அறிவித்தது.

டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றங்கள், சர்ச்சைக்குரிய வகையில் அது வெளியிட்ட, இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் என்ற அறிவிப்பு, கோலான் உச்சி இஸ்ரேலின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்ற அறிவிப்பு, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ அவர்களுக்கு ஆதரவு திரட்டுதல் ஆகிவற்றின் பின்னணியில் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸ்ஸட் தேர்தல் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற பின்னரும், இஸ்ரேல் அரசு அமையவில்லை. நேதன்யாஹூவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், அவர், ஆட்சியில் அமர்ந்து, ஜோர்டான் பள்ளத்தாக்கைத் தாம் கைப்பற்ற விரும்புவதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவித்த சில நாட்களிலேயே, ஐ . நா பொதுச் சபை, பாலஸ்தீன சுயநிர்ணய உரிமையை மீண்டும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியா உள்பட 165 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா, நவூரு, மைக்ரோனேஷியா, மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தன.

சுதந்திரமான மற்றும் வலுவான பாலஸ்தீனம், அமைதியாகவும், பாதுகாப்புடனும் இஸ்ரேலுடன் ஒன்றுசேர்ந்து இருப்பதையே இந்தியா விரும்புகிறது. குடியேற்றங்கள் தொடர்பான அதிபர் டிரம்ப் அவர்களின் புதிய நடவடிக்கை, பாலஸ்தீனத்தின் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இப்பிராந்தியத்தில் இறுக்கங்களை அதிகரிக்க ஏதுவாகவும் அமைந்துள்ளது.

 

 

Pin It