ஈரான் – ஈராக் நில நடுக்கத்தால் உயிரிழப்பு 450-ஐ எட்டியது.

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 450 பேர் உயிரிழந்தனர். 7000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 70 ஆயிரம் பேருக்குத் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஈரான் நாட்டுத் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் கெர்மன்ஷா மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் உயிரிழந்தனர். குர்திஷ் மலைப்பகுதியில் செங்கலால் கட்டப்பட்டிருந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து நாசமாயின. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ள ஈரான் தலைவர் திரு அயதொல்லா அலி கமெனெய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அளிக்க அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஐநா பொதுச் செயலாளர் திரு ஆண்டோனியோ கட்டரஸ்-ம் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.  நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோதி  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.                 காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Pin It