வளைகுடா நாடுகளில் ஈரான் போராட்டங்களின் எதிரொலி.

(ஈரான் நாட்டிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஆசிப்  ஷூஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

ஈரான் அரசாங்கம், தனது நாட்டில் மிகவும் ஏழ்மையிலுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மேலும் அதிக நிதியை ஒதுக்குவதற்கு, பெட்ரோல் வினியோகத்தைப் பங்கீடு முறையில் மேற்கொள்ளப் போவதாக  போன மாதம் அறிவித்திருந்தது. எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் அரசாங்கம் இவ்வாறு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டதால் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனை எதிர்த்து எழுந்த போராட்டம், நாடு முழுவதும் பரவி, அங்கே அரசியல் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.

ஈரானில் நிலவும் கொந்தளிப்புக்கு, எதிர்க் கட்சிக் குழுக்கள் மீதும், வெளிநாட்டு எதிரிகள் மீதும் ஈரானிய அதிகாரிகள் குற்றம்  சாட்டியுள்ளனர்.   அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் பரவாமல் தடுக்க இணையதள சேவையை முற்றிலுமாக அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். ஈரானிய புரட்சிக் காவல்படை ( IRGC)  யின் தலைமைத் தளபதியின் கூற்றுப்படி,  இந்த அமைதியின்மை மூலம்,  ஈரானின் எதிரிகளின் நோக்கம், இஸ்லாமியக் குடியரசுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதேயாகும்..

ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை ஈரான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் 208க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர் என்றும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் என்றும், 7000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

பாதுகாப்புப் படையினரால் சில ஆர்ப்பாட்டகாரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒப்புக்கொண்டுள்ள  ஈரான் நாட்டின் ஊடகங்கள், உயிரிழந்தோரின் எண்ணிக்கையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தோரை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்ட ஊடகங்கள்,  பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளைப் பாராட்டவும் செய்துள்ளன.   அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ  உடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஈரான் நாட்டின் உளவுத்துறை  கூறியுள்ளது. இரண்டு வார கால வன்முறை மோதல்களுக்குப் பிறகு, ஈரான் நாட்டு அதிபர்  ஹாஸன்  ருஹானி அவர்கள் இந்த வாரம் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில்,  ஆயுதம் ஏந்தாத, அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கும்படி கூறியுள்ளார்.

அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளை  ஈரான் எதிர்கொண்டு வரும் இந்த வேளையில், அங்கு இந்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானும், 6  சக்தி வாய்ந்த உலக நாடுகளும் கையெழுத்திட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, போன வருடம் அமெரிக்கா தன்னை விலக்கிக்  கொண்டது. அமெரிக்காவின்  பொருளாதாரத் தடைகளினால், எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்வதில் பல கட்டுப்பாடுகளை ஈரான் எதிர்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் எண்ணெய் அடிப்படையிலான பொருளாதாரம்  மோசமடைந்துள்ளது. இந்தத் தடைகளினால் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே, ஈரான் அரசுக்கு, நாட்டின் கொந்தளிப்புக்கு அந்நிய சக்திகளைக் காரணமாக சுட்டிக்காட்ட ஏதுவாகியுள்ளது.

ஈரானில் தற்பொழுது தலை தூக்கியுள்ள ஆர்ப்பாட்டங்கள் எண்ணெய் விலை உயர்வினால் தூண்டப்பட்டிருந்தாலும், இது  ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்ட கால சுணக்கத்தின் விளைவே ஆகும்.  அமெரிக்கா முதலில் தடைகளை நீக்கிக் கொண்டால், தற்போது நிலவி வரும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத்  தயாராக உள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்காவோ, ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, ஏவுகணை திட்டத்தை கைவிட்டு, பிராந்திய ஆதிக்க நடவடிக்கைகளையும் குறைத்துக் கொண்டால் தான் தடைகளை  விலக்கிக் கொள்ள முடியும் என்று வலியுறுத்துகிறது.  இந்த நிலைமையினால்  ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே, தீர்வு எட்ட இயலாத தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.  இதுவே பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது.

ஈரானின் ஸ்திரமற்ற நிலை  யாருக்கும்  பயனளிக்காது.  ஈரான் மாகாணங்களான  குஸெஸ்தான், சிஸ்தான், பலூசிஸ்தான் மற்றும் குர்திஸ்தான்  போன்ற சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் போராட்டங்களை நசுக்க முற்பட்டால், அதிக  வன்முறை  வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இருப்பினும், தனது வலிமையை நிலைநாட்ட, ஈரான் அரசு, கடுமையான அடக்குமுறைகளைக் கையாளக் கூடும்.

ஈரானில் அமைதியின்மை மற்றும் வளைகுடா பகுதிகளில் கொந்தளிப்பு ஆகியவை இந்தியாவிற்குப் பாதகமான சூழலை உருவாக்கும். ஈரான் உள்பட, வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்ல உறவுகளை கொண்டுள்ளது. வழக்கமாக, இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் விளங்குகிறது. ஈரானில், சபாஹர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் மேலும் கலவரம் கூடினால் அது இந்தியாவின் ஆக்கபூர்வமான முதலீட்டுகளுக்குப் பங்கம் விளைவிக்கும்.

 

 

 

 

 

 

 

.

 

Pin It