ஈரான் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம்.

(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம், ஈரான் வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் புலனாகிறது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள இருதரப்பு விஷயங்கள் குறித்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆப்கானிஸ்தான் பிரச்சினை உள்பட மற்ற பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள, இரு தலைவர்களுக்கும் இந்த சந்திப்பு வாய்ப்பளித்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நாகரீக உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவும், ஈரானும், எரியாற்றல் மற்றும் தொடர்புகள் துறைகளில் உள்ள தங்களது சமீபத்திய கூட்டாளித்துவத்தின் மூலம், பரஸ்பர உறவுகளுக்கு வலிமை சேர்த்துள்ளன. இந்தியாவின் எரியாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈரான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது, கடந்த பல வருடங்களாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் ஈரான் முன்னிலை வகிக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளையும் மீறி,  இந்தியா தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுஆயுத ஒப்பந்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் அமெரிக்கா தடைகளை விதித்தபோது, கட்டணம் செலுத்துதலில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்தது.  அந்த காலகட்டத்தில்  ஈரானுக்கு இந்தியா அளித்த ஆதரவை ஈரான் நினைவு கூர்ந்தது. இதன் பின்னணியில், ஜவாத் ஸரீஃப் அவர்களின் இந்தியப் பயணத்தை நோக்க வேண்டும்.

அமெரிக்காவுடனும் இந்தியா செலுத்தி கூட்டாளித்துவத்தைக் கொண்டுள்ளது. 1979ஆம் வருடம், இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட காலம் முதல், கடந்த 40 வருடங்களாக, அமெரிக்காவுடனான ஈரான் உறவுகள் உறைந்து போயுள்ளன. சமீப காலத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதலில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பல நிறுவனங்கள், அமெரிக்காவில் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரானுடன் நட்புறவைக் கொண்டுள்ள இந்தியா, முக்கிய இடத்தில் உள்ளது. நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தால், அமெரிக்காவுடனும், ஈரானுடனும் கொண்டுள்ள நல்லுறவைப் பயன்படுத்தி, இந்தியா, விரும்பினால் இருநாடுகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய முன்வரலாம்.

ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், கூடுதலாக, ஜெர்மனியும், ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட  கூட்டு விரிவான செயல் திட்டத்தில் இந்தியா எந்தப் பங்கும் வகிக்காத போதும், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தம், பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதில், பயனுள்ளதாக அமையும் என்று இந்தியா கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறாமல் ஈரான் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக இந்தியா நம்புகிறது. எனினும், இதனை ஒத்துக் கொள்ளாத அமெரிக்கா, தன்னிச்சையாக ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. அமெரிக்காவின் சமீபத்திய கொள்கைகளினால் உந்தப்பட்ட ஈரானும், அணுஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை சற்று தளர்த்திக் கொண்டுள்ளது. இந்நிலையில், மேலும் உருவாகிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது செயல்பாடுகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா பின்வாங்கியதும், அதைத் தொடர்ந்து அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், ஈரானுக்கு எதிராக, பாரசீக வளைகுடா பகுதியில் ராணுவத்தை நிறுத்தியதும் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருதரப்பிலிருந்தும் ஏதாவது ஒரு தப்பு நிகழ்ந்தாலும்,  மோசமான பின்விளைவுகளை, அந்தப் பிராந்தியம் மட்டுமல்லாமல் அதைத் தாண்டியும்  உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வளைகுடா பகுதியானது இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடுகள் பகுதியில் அமைந்துள்ளதால், இத்தகைய சச்சரவுகள் இந்தியாவுக்கு நல்லதல்ல.

கஷ்டமான காலகட்டத்தில் ஈரானுக்கு ஆதரவாக இந்தியா விளங்கியதை அந்நாடு நன்றியுடன் நினைவு கூரும் பின்னணியில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தியப் பயணத்தைப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் தடைகள் நிலவி வரும் நேரத்தில், இந்தியாவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் வழங்கும் வழிகளை ஈரான் ஆராய்கிறது என்கிற கண்னோட்டத்திலும் அவரது பயணத்தை நோக்கலாம். அமெரிக்காவுடனும், ஈரானுடனும் நட்புறவு கொண்டுள்ள இந்தியா, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனைகளைத் தீர்க்க உதவ வேண்டும் என ஈரான் அழைப்பு விடுவதற்கான அறிகுறியாகவும் ஜவாத் ஸரீஃப்ஃபின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

 

Pin It