உறவுகளை வலுவாக்கும் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம்.

(அரசியல் விமரிசகர் எம் கே டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

இலங்கையில் அதிபராகப் பொறுப்பேற்ற ஒருவர், தமது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் இது நிகழ்ந்துள்ளது என்றாலும், பதவியேற்றுப் பத்து நாட்களே ஆன நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ஸ அவர்கள், தனது முதல் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தது ஒரு எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் வெளிப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

வழக்கமான நெருங்கிய நல்லுறவுகள் கொண்டுள்ள இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, சில விஷயங்கள் குறித்த இரு நாடுகளின் கண்ணோட்டங்களையும் உண்மை நிலைமை மற்றும் நடைமுறை சாத்தியமான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டே நாட்களில், நேரில் வந்து வாழ்த்துக் கூறிய முதல் வெளிநாட்டுப் பிரதிநிதி என்ற சிறப்பு, இந்தியாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர் அவர்களையே சேரும். இந்தியாவின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கை அதிபரை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோதி அவர்கள் விடுத்த அழைப்புக் கடிதத்தையும் அவர் சமர்ப்பித்தார். தனது இந்தியப் பயணத்தின் போது, இலங்கை அதிபரும் பாரதப் பிரதமரைத் தமது நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளன.

இரு தரப்பு உறவுகள் என்பது கடந்த கால கண்ணோட்டங்களின் பிரதிபலிப்பாக ஆகி விட அனுமதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில், இந்த பரஸ்பர சந்திப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசு, ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அதிபராகவும், அவரது சகோதரரான கோத்தபய ராஜபக்ஸ அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த காலம் அது. இந்தியா, அப்போது இலங்கை அரசுக்கு முழு அதரவு அளித்த அதே நேரத்தில், தமிழர்களுக்கான நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

புது தில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போதும், தமிழர்களின் உரிமை குறித்த விவாதம் எழுப்பப்பட்டது.  தமிழ் விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழர்களின் உரிமைகள் குறித்த கோரிக்கைகள் நிறைவடையாமல் இருந்து வந்துள்ளது.  . பல வாக்குறுதிகளுக்குப் பிறகும் தமிழர் உரிமை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளதால், இது குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் நினைவுபடுத்தியது. இலங்கை அதிபரின் அணுகுமுறையும் நேர்மறையாகவே தென்பட்டது. அண்மையில், தமிழர் நலன் குறித்துப் பேசுகையில், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரும்பான்மையான சிங்களர்களின் வாக்குகளால் தான் என்றாலும், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் தாம் நியாயமான உரிமைகளை உறுதி செய்யவுள்ளதாக, அதிபர் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதை நேர்மறையான அறிகுறியாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் கவலைகளைக் கருத்தில் கொண்ட அதிபர் ராஜபக்ஸ அவர்கள், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இலங்கையின் உறவுகள், இந்தியாவுடனான உறவுகளைப் பாதிக்கத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். சர்ச்சைக்குரிய ஹம்பந்தோட்டா துறைமுகத் திட்டம், சீனாவுக்கு வழங்கப்பட்டது தவறான செயல்பாடு என்றும் அவர் ஒப்புக் கொன்டார். தனது பணியை திறந்த மனதுடன் அணுகுகிறார் புதிய இலங்கை அதிபர் என்பதை இது காட்டுகிறது.

இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் போது, திட்ட உதவித் தொகையாக 45 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கைக்கு சீனா அளிக்கும் நிதியுதவியை  ஒப்பிடும் போது, இந்தியாவின் நிதியுதவிகள் சொற்பமானவை என்றாலும், உள்கட்டமைப்புத்  திட்டங்களை அமலாக்குவதில் இந்தியா அதிகம் சாதித்து முன்னிலையில் உள்ளது. தவிர, மாபெரும் திட்டங்களும், அதிகமான நிதிக் கடன்களும் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்னும் விழிப்புணர்வு இப்போது இலங்கையில் அதிகரித்து வருகிறது. பெரிய முதலீடுகளுக்கும், அவை உருவாக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மைக்கு ஹம்பந்தோட்டா துறைமுகத் திட்டமும், மட்டாலே சர்வதேச விமான நிலையத் திட்டமும் எடுத்துக்காட்டுகளாகும்

நியாயமான கவலைகளின் பேரில், கவனம் செலுத்தப்பட்டால், இருதரப்பு உறவுகளில் இருநாடுகளுமே  சிறந்த பயன் பெற முடியும். “என்னுடைய  ஆட்சிக்காலத்தில், இந்திய இலங்கை உறவுகளை மிகவும் உயர் நிலைக்குக் கொண்டு செல்ல நான் விரும்புகிறேன்.  வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம் இரு நாடுகளிடையே நீண்ட கால உறவுகள் இருந்து வந்துள்ளன” என்று ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். இலங்கையின் புதிய அதிபர், இரு தரப்பு உறவுகளில் புதிய  அணுகுமுறையைக் கையாளவிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. அவரின் முயற்சிகள் நேர்மறையாகத் துவங்கியுள்ளது என்றே கருதலாம்.

Pin It