உள் நாட்டு மோதலில் பாகிஸ்தான்

ஆகாஷ்வாணியில் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்

உள் நாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு வீணான, விஷமத்தனமான, வேடிக்கையான ஒரு முயற்சியை பாகிஸ்தான் அரசு மீண்டும் எடுத்துள்ளது. குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இந்திய நிலப்பரப்பின்  சில பகுதிகளைத் தன் நாட்டு வரைபடத்துடன் இணைத்து ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. பிறகு ஊடகங்களின் முன்னிலையில் அது வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் குடிமக்களின் கண்டனத்தையே இதுபெற்றுள்ளது. முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி தனது அலுவலகத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்தச் செயலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த வரைபடத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். இது மிக மோசமான அரசியல் தவறு என்று அவர் கூறியுள்ளார். சட்டப்பூர்வமான ஆதாரமோ சர்வதேச அங்கீகாரமோ இல்லாத, கேலிக்குரிய செயல் இது என்று அவர் கூறியுள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் உதவியுடன் நிலம் பிடிக்கும் பாகிஸ்தானின் வெறியைத் தான் இது காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  

இதற்கிடையில், பாகிஸ்தானியர்களின் பல்வேறு பிரிவுகளிடையே அமைதியின்மை தொடரும் நேரத்தில் அந்த அரசாங்கம் கவனத்தை ஈர்க்கும் இது போன்ற வேடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பலூச் மற்றும் சிந்தி குழுக்கள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளன. பலூச்சி குழுக்களின் கூட்டமைப்பான பலூச் ராஜ் அஜோய் சங்கர் (பிஆர்ஏஎஸ்) மற்றும் சிந்துதேஷ் புரட்சிகர இராணுவம் (எஸ்ஆர்ஏ) ஆகியவை பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கூட்டு முன்னணியைத் தொடங்க கைகோர்த்துள்ளன. இந்த  முன்னணி,  சமீபத்தில் ஒரு ரகசிய இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. சிந்து மற்றும் பலூச் நாடுகள் பல நூற்றாண்டுகளாக அரசியல், வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன என்பதை பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். அதை அவர்கள் புதுப்பித்துக்கொள்ள விரும்புகின்றனர். 

பாகிஸ்தான் அரசு உருவானதிலிருந்து அடுத்தடுத்த பாகிஸ்தான் அரசாங்கங்கள் எப்போதும் சிந்திகள் மற்றும் பலூச்சிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன. சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இவை இரண்டும்  சுதந்தர நாடுகளாக இருக்க விரும்புகின்றன. 

60 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) இரு மாகாணங்களையும் பாதித்துள்ளது, மேலும் சிந்திகளும் பலூச்சிகளும் சீனாவின் விரிவாக்க மற்றும் அடக்குமுறை தீர்மானத்தில் சந்தேகம் கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் சீனாவின் அடக்குமுறைக்கு அடிபணிய வேண்டி வரும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

சிந்து மற்றும் பலுசிஸ்தான் இரண்டும் மிகப்பெரிய கடற்கரைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை  இந்தியப் பெருங்கடலுடன் இணைந்துள்ளன.  இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர்கள் உணர்கிறார்கள்.

ரகசிய இடத்தில் நடந்த அமர்வில், சிந்தி மற்றும் பலோச்சி முன்னணி பங்கேற்பாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் பாதுகாவலர்கள் சிந்திகள் என்று கூறினார். பலூச்சிற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு உண்டு. மெஹர்கர் நாகரிகம் பலூச் மக்களின் மரபு. சிந்திகளும் பலூச்சிகளும் தங்கள் நிலம், நாகரிகம் மற்றும் சுதந்திரத்தை பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து தங்கள் வரலாறு முழுவதும் பாதுகாத்துள்ளனர்.

இருப்பினும், பாகிஸ்தான் உருவான பின்னர், அவர்கள் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்டனர். 21 ஆம் நூற்றாண்டில் கூட, மற்ற பாகிஸ்தான் குடிமக்களைப் போலவே அவர்கள் சம உரிமைகளை அனுபவிப்பதில்லை. இரண்டு மாகாணங்களிலும் பரவலான ஊழல், ஒற்றுமை மற்றும் பிற பாதிப்புகள் உள்ளன. சிந்தி மற்றும் பலூச் இளைஞர்களிடையே வேலையின்மை இரு மாகாணங்களிலும் சமூக மோதலுக்கு வழிவகுத்தது.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் கொள்ளைக்கு எதிராக கூட்டு போராட்டங்களை நடத்த சிந்தி மற்றும் பலோச்சி முன்னணி தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். சிந்தி-பலூச் முன்னணி மற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளையும் எதிர்ப்பு அமைப்புகளையும் தொடர்பு கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளது. நிவாரணம் தேடுவதற்காக உலகின் பல்வேறு அரசாங்கங்களையும் ஐ.நா.வையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது தேர்தல் வாக்குறுதியாக உறுதியளித்த  ‘புதிய் பாகிஸ்தான்’-ஐ உருவாக்குவதில் அவர்  கவனம் செலுத்த வேண்டும். கற்பனையான “வரைபடங்களை” வெளியிட்டு,  நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, சிந்து மற்றும் பலூசிஸ்தான் காயங்களை குணப்படுத்த தேவையான மருந்தை அவர்களுக்குத் தர வேண்டும்.

Pin It