ஊரகப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியில்  மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றி  வருகின்றன – பிரதமர்  திரு. நரேந்திர மோதி.

ஊரகப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியில்  மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றி  வருவதாக பிரதமர்  திரு. நரேந்திர மோதி கூறியுள்ளார். நாடு முழுவதும்  உள்ள மகளிர்  சுயஉதவிக் குழுக்களிடையே காணொலிக் காட்சி வாயிலாக அவர் கலந்துரையாடினார். சமூக, பொருளாதார ரீதியில் மகளிர் மேம்பட, இந்தக் குழுக்கள் உதவியாக உள்ளன என்றும்  அவர் குறிப்பிட்டார். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முத்திரை பதித்து வருவதாகவும் அவர் கூறினார். வேளாண்மை  மற்றும்  பால் உற்பத்தித் துறையில், மகளிரின் பங்களிப்பின்றி வளர்ச்சியை எட்டியிருக்க  முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மகளிரின் திறனைக் கண்டறிய, அவர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள  ஏழைப் பெண்களுக்கு உரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், 20 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இதில் 2 கோடியே 25 லட்சம் குடும்பங்கள்  இணைந்திருப்பதாகவும் அவர்  தெரிவித்தார். 45 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 5 கோடி உறுப்பினர்களுடன் தீவிரமாகப் பணியாற்றி  வருவதாகவும்  திரு. நரேந்திர மோதி கூறினார். இந்தக் கலந்துரையாடலில்  பங்கேற்ற பெண்கள், இந்தக் குழுக்களின் மூலம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும்  தாங்கள்  எவ்வாறு மேம்பாடு அடைந்தோம் என்பது குறித்து, பிரதமரிடம் எடுத்துரைத்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டங்கள்   தங்களுக்கு மிகுந்த பயனை அளித்திருப்பதாகவும் அவர்கள்  கூறினர்.

Pin It