ஏறுமுகத்தில் இந்தியா – பெலாரஸ் கூட்டுறவு

(அரசியல் விமர்சகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்)

இந்தியாவும் பெலாரஸும், தங்கள் இரு தரப்பு உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், பல துறைகளில் கூட்டுறவை மேம்படுத்த சுமார் பத்து உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. பெலாரஸ் அதிபர் திரு.அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் முக்கிய அம்சம், பாதுகாப்புத் துறையில் கூட்டு முன்னேற்றம் ஏற்பட வழிகளைக் கண்டறிவதற்கான முடிவை எடுத்ததாகும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை புது தில்லி முனைப்புடன் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், பெலாரஸுடன், பாதுகாப்புக் கூட்டுறவிற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை புது தில்லி கண்டறிந்துள்ளது. சோவியத் ஒன்றியத்தின் காலத்திலிருந்தே, பெலாரஸிடம் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்திற்கான பின்புலம் இருந்து வந்துள்ளது என்ற கருத்தை இந்தியா குறிப்பாக நினைவில் வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ இடையில் நடந்த விரிவான பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரத் தொடர்பை சீராக்கி மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்கப்படுத்த அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என இருவரும் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியதாகவும் முன்னோக்கிய பார்வை உடையதாகவும் இருந்தது என பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்தார். பெலாரஸ் அதிபர், கூட்டுறவின் ஒரு ‘புதிய கட்டத்தின்’ வாயிலில் இரு நாடுகளும் இருப்பதாகத் தெரிவித்தார். பல துருவங்களைக் கொண்ட இவ்வுலகில், இந்தியா ஒரு ‘வலிமையான துருவமாக’ உருவெடுக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அவர் கூறினார். 2015 ஆம் ஆண்டு மே மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் அரசுமுறைப் பயணமாக பெலாரஸ் சென்றுவந்தார். பெலாரஸுடனான இந்தியாவின் உறவுகள் வழிவழியாக நல்ல முறையிலும் சுமுகமான முறையிலும் இருந்து வந்துள்ளன. சோவியத் ஒன்றியம் பிரிந்ததைத் தொடர்ந்து , 1991 ஆம் ஆண்டு பெலாரசஸை ஒரு சுதந்திரம் பெற்ற தனி நாடாகக் கண்டுணர்ந்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். முறையான ராஜீய மற்றும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1992 ஆம் ஆண்டு, மின்ஸ்கில், இந்தியத் தூதரகப் பணிகள் துவக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு, பெலாரஸ் தன் தூதரகத்தை புது தில்லியில் துவக்கியது. இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை இரு நாடுகளும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பெலாரஸ் அதிபர் மூன்றாவது முறையாக இந்தியா வந்தது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. இந்த  தருணத்தை குறிப்பிடும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவும் ஒரு தபால்தலையை வெளியிட்டது இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாகும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவை உட்பட பல துறைகளில் இருதரப்பு கூட்டுழைப்பை மேம்படுத்த, தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் உதவியாக இருக்கும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில், கூட்டு முன்னேற்றம் மற்றும் உற்பத்தியை வளர்க்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய முதலீட்டாளர்களை பெலாரஸிற்கு அழைத்த திரு.லுகஷென்கோ, வர்த்தகம் செய்வதற்கு ஏற்றதான மற்றும் மிகச் சிறந்த சூழல்களை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தார். ஈ.ஈ.யு எனப்படும் யூரேசிய பொருளாதார கூட்டமைப்பு, சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்துப் பாதை போன்ற பல பன்முக பொருளாதார முன்முயற்சிகளின் கீழ் இந்தியா பெலாரஸுடன் இணைந்துள்ளது. தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்காக, ஈ.ஈ.யு-வுடன் இந்தியா பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. செல்வாக்கு வாய்ந்த மத்திய ஆசிய கூட்டமைப்பாக கருதப்படும் ஐந்து உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ள ஈ.ஈ.யு-வில், பெலாரஸும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டிற்கான, இந்தியா-பெலாரஸ் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் அளவு சுமார் 42 கோடி டாலர்களாகும். மருந்துகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை உட்பட பல துறைகளில் ஏராளமான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

பொருளாதார உறவுகளுக்கு ஒரு புதிய ஊக்கத்தைக் கொடுக்கும் வகையில், இந்தியப் பிரதமர் அவர்கள், இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களும், வாங்குபவர்-விற்பனையாளர் என்ற கட்டமைப்பிலிருந்து முன்னேறி ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் இயற்கையான நல்லுணர்வுகளை அடித்தளமாக வைத்து, இரு நாடுகளும் முன்னேறிச் செல்ல இது உதவியாக இருக்கும்.

பலதரப்பு அரங்கங்களில், இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஒத்திசைவு உள்ள விவகாரங்களில், நெருங்கி ஒத்துழைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவிற்கும் பெலாரசிற்கும் இடையில், சர்வதேச, பலதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் நல்ல புரிதலும் கூட்டுறவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அனைத்து சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் தங்கள் நோக்கங்களிலும் கருத்துகளிலும் ஒத்திசைவுத் தன்மையைக் காண்பித்துள்ளன. ஐ.நா-வின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற, இந்தியாவின் முயற்சிகளுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில், ஐ.நா-வின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் தற்காலிக உறுப்பினர் விண்ணப்பத்திற்கும் பெலாரஸ் ஆதரவளித்தது. அணுப்பொருள் விநியோகஸ்த குழுமத்திலும் இந்தியாவிற்கு பெலாரஸ் ஆதரவளித்தது. கூட்டுசேரா இயக்கத்தில் பெலாரஸிற்கு உறுப்பினர் பதவி கிடைப்பதற்கு, இந்தியா தன் ஆதரவை அளித்தது. மேலும், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் போன்ற பிற சர்வதேச ,மற்றும் பலதரப்பு அரங்கங்களிலும் பெலாரஸிற்கு இந்தியா அளித்த ஆதரவு பெலாரஸால் பாராட்டப்பட்டது.

பெலாரஸில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனவும் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என்றும், ஜெனீவா மற்றும் நியூயார்க்கில், பல்வேறு தீர்மானகள் மூலம் பெலாரஸ் குறிவைக்கப்பட்டது. ஆனால் இந்த தருணங்களில் இந்தியா அளித்த திடமான ஆதரவு பெலாரஸால் பாராட்டப்பட்டது. இந்தியாவை ஒரு வளர்ந்து வரும் வல்லரசாகப் பார்க்கும் பெலாரஸ், இந்தியாவுடன் செயலுத்தி கூட்டாளித்துவத்தை வைத்துக்கொள்ள விரும்புகிறது. சமீபத்தில் பெலாரஸ் அதிபரால் மேற்கொள்ளப்பட்ட பயணமும் இதற்கு ஒரு சான்றாகும். பொருளாதார ஈடுபாடுகளைத் துரிதப் பதையில் எடுத்துச்செல்ல, உண்மையான முயற்சிகள் துவக்கிவைக்கப்பட்டன. பெலாரஸ் அதிபரின் பயணத்தால் ஏற்பட்டுள்ள பல புதிய துவக்கங்களினால் இரு நாடுகளுக்கும் அதிக அளவிலான வெற்றிகளைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது எனக் கூறினால் அது மிகையாகாது.

Pin It