ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை – பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய மற்றும் மாநில பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்  மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழரை லட்சம் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேகர் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஊதியம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்றார். ஐஐடி,  ஐஐஎம்,  ஐஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும் என்று தெரிவித்தார்.   மத்திய பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இரண்டு புதிய திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சங்கல்ப் மற்றும் தொழில் திறன் சார்ந்த ஸ்ட்ரைவ் எனப்படும் இந்த இரண்டு திட்டங்களும் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.  சங்கல்ப் திட்டத்திற்காக 4 ஆயிரத்து 445 கோடி ரூபாயையும், ஸ்ட்ரைவ் திட்டத்திற்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயையும்  மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.   மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இதுதொடர்பாக கூறுகையில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புத் தேவைக்கு ஏற்றவாறு, திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்

Pin It