ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தியா – தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிப்பு.

(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவின் பொருளாதார, சமூக நிலைகளில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த, 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான என்ஐபி, அதாவது, தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பின், அரசு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமும், லட்சக் கணக்கான மக்களை வறுமைப் பிடியிலிருந்து வெளிக் கொணரவும் வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள என்ஐபி திட்டங்கள், அனைவருக்கும் சம அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் பொருளாதாரத்தை 2024-25 ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் அளவிற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு கண்டிராத அளவிற்குப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள என்ஐபி திட்டங்கள் மூலம், வேலை வாய்ப்புக்கள் பெருகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள், அனைவரையும் உள்ளடக்கிய, முற்றிலும் பயனளிக்கும் வளர்ச்சியை உறுதி செய்யும்.

அடுத்த ஐந்தாண்டுகளில், உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று, நடப்பாண்டு சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாபெரும் சாதனையை அடையும் பொருட்டு, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலரின் தலைமையில், 2019 ஆம் ஆண்டு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த 70 அமைப்புக்களுடன் கலந்தாலோசித்த பின்னர், அப்பணிக்குழு, நான்கு மாதங்களில், 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அடையாளம் கண்டது.

சாலை, ரயில் போக்குவரத்து, எரியாற்றல், நகர்ப்புற நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் முதலீட்டுத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் கீழ், துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கான திட்டங்களுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய், டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைக்கு 3.2 லட்சம் கோடி ரூபாய், நீர்ப்பாசனம்,,கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் பதனிடல் ஆகிய துறைகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய், சாலைத் திட்டங்களுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் மற்றும் ரயில்வே துறைக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எரியாற்றல் துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 102 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 42.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளதும், 32.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வரைவுத் திட்டங்கள் நிலையை எட்டியுள்ளதும், எஞ்சியவை உருவாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டங்கள் யாவையும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறித்த காலத்தில் நிறைவேற்றுவது என்பது சவாலான விஷயம் என்றாலும், மிகுந்த ஊக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் தேசத்துக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இலக்குகளை எட்டும் முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் திட்டங்கள் நிறைவேறுவதை உறுதி செய்ய வலுவான கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்படும்.

என்ஐபி திட்டங்கள் முற்றிலும் மத்திய அரசின் பொறுப்பில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாநில அரசுகள் மற்றும் அயல்நாட்டினர் உள்பட, தனியார் நிறுவனங்கள் ஆகியவையும் இத்திட்டத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு பெற்றுள்ளன. என்ஐபி திட்டங்களில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தலா 39 சதமும், தனியார் துறையினர் 22 சதமும் பங்கு பெறும். 2025 ஆம் ஆண்டுக்குள் தனியார் துறையின் பங்கை 30 சதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் முற்றிலும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதே அரசின் குறிக்கோளாகும். இந்த இலக்கை எட்டுவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்கம் பெறும். அரசுக்கு வருவாய்க்கான அடித்தளங்கள் அதிகரிக்கும். செயல்திறன் மிக்க துறைகளில் தரமிக்க செலவினங்கள் ஏற்படுவதும் உறுதி செய்யப்படும். எந்த நாடும் பாதிப்புக்களிலிருந்து தப்பிக்க இயலாத பொருளாதார மந்தநிலை என்பதிலிருந்து, இந்தியாவை மீட்க சிறந்த தீர்வாக இத்திட்டங்கள் அமையும் என்பது திண்ணம்.

2030 ஆம் ஆண்டில், 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சி அடையவும், வேலையின்மையை முற்றிலும் அகற்றவும், மக்களின் மகிழ்ச்சியான,  வளமான வாழ்க்கையை உறுதி செய்யவும், இந்தியாவில், உள்கட்டமைப்பில் 4.5 லட்சம் கோடி டாலர் அளவிலான முதலீடுகள் தேவைப்படும். இதனை உறுதி செய்வதில், என்ஐபி திட்டங்கள் திறம்பட செயலாற்ற முடியும். பரந்த, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெறுவதற்கு தரமிக்க, நீண்டகால உள்கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமாகும். குறித்த காலத்தில் இத்திட்டங்கள் நிறைவேறினால், நாட்டின் சமூக, பொருளாதார நிலைகளில் நேர்மறையான தாக்கங்கள் நிகழும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வளர்ச்சியை நோக்கிய பாதையில் முன்னேற முனைப்பு காட்டும் அரசின் முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் தாராள மனத்துடன் வரவேற்க வேண்டும்.

 

Pin It